Breaking News :

Friday, July 19
.

தாகம் தீர்த்த தாகந்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்!


விருத்தாச்சலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் சிவாலயம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் அன்னபூரணி சமேத தாகந்தீர்த்தபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘பாடி’ என்பது, திருமாறன்பாடி என்ற இறையூர் ஆகும்.
 
பாடி நான்கில் ஒன்றாகப் கருதப்படும் வைப்புத்தலம் திருமாறன்பாடி என்ற இறையூர். இங்கு வெள்ளாறு எனப்படும் நிவாநதியின் வடகரையில், விருத்தாச்சலம்- திட்டக்குடி நெடுஞ்சாலையில் சிவாலயம் ஒன்று உள்ளது.

இத்தலத்தில் அன்னபூரணி சமேத தாகந்தீர்த்தபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

நடு நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களான பெண்ணாகடம், திருவட்டத்துறை ஆகியவற்றுக்கு இடையே, திருஞானசம்பந்தரால் வழிபடப்பட்ட திருத்தலம் இந்த சிற்றூர்.

திருஞானசம்பந்தர் தில்லை (சிதம்பரம்), திருஎருக்கத்தம்புலியூர் (ராசேந்திரபட்டிணம்), திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்), திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) ஆகிய சிவத்தலங்களை வணங்கித் திருப்பதிகங்கள் பாடிய பின்னர், திருவட்டத்துறை ஈசனை வணங்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார்.

ஆனால் வழக்கமாக தன் தந்தை சிவபாத இருதயர் தோளில் அமர்ந்து செல்லும் சம்பந்தர், 5 வயதே ஆகியிருந்தாலும் கூட திருவட்டத்துறை ஈசனைக் காண அடியார்களுடன் நடந்தே சென்றார்.

நெடுந்தூரம் நடந்த களைப்பாலும், இரவு நேரம் என்பதாலும் மாறன்பாடியில் உள்ள ஈசன் திருக்கோவிலில் தங்கினார்.
அங்கு சுவாமியை வழிபட்டு விட்டு உறங்கும்போது, திருஞானசம்பந்தரின் கனவில் இறைவன் தோன்றினார்.

அந்தக்கனவில் தனது தண்டாயுதத்தை தரையில் ஊன்றியதில் நீர் பெருக்கெடுத்தது. அந்த நீரை சம்பந்தரும், அவரது அடியார்களும் பருகி தாகமும், களைப்பும் நீங்கப்பெற்றனர்.

இறைவியும் அவர்களுக்கு அன்னதானம் படைத்து அருளினார்.

மேலும் ஈசன், சிறு குழந்தையான சம்பந்தரின் திருவடிகள் காயம் படக்கூடாது என்பதற்காக, முத்துச் சிவிகையும், மணிக்குடையும், பொற்சின்னமும் திருவட்டத்துறை திருக்கோவிலில் இருக்கும் என்றும் கனவிலேயே அருளினார்.

மறுநாள் பொழுது புலர்ந்து எழுந்த திருஞானசம்பந்தரைக் காண, திருவட்டத்துறையில் இருந்து அடியார்கள் வந்திருந்தனர்.

அவர்கள் தங்களின் கனவில் ஈசன் வந்து, முத்துச் சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் தர அருளியதாக கூறி அதனை சம்பந்தரிடம் கொடுத்தனர்.
கனவில் தோன்றிய, ஈசன் நினைவில் செய்தருளியதை நினைத்து சம்பந்தரும், அவரது அடியார்களும் அகமகிழ்ந்து போயினர்.

ஈசனின் பெரும் உவகையை நினைத்து அவர் பதிகம் பாடினார். பின்னர் முத்துச் சிவிகையில் ஏறி, திருவட்டத்துறை சென்று அங்கு ஈசனை வழிபட்டு, மீண்டும் பல தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார்.

இந்த வரலாற்றை பெரிய புராணம் முதலான நூல்களின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அதன் மூலம் சம்பந்தர் தங்கியிருந்து வழிபட்ட தலம் மாறன்பாடி என்பதையும், அவரது காலமாக 6-ம் நூற்றாண்டிற்கு முந்தைய பழமையும் பெருமையும் கொண்டது இந்த சிவாலயம் என்பது நமக்கு புலனாகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமையும் உடைய ஊர், மாறன்பாடி. தாகந்தீர்த்தபுரீஸ்வரர் என்ற இறைவனின் திருநாமத்திற்குப் பொருத்தமாக, இன்றும் அவர் அருளால் இவ்வூரில் இருந்து சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தண்ணீர் வழங்கும் பேறு பெற்றுள்ளது இறையூர்.

கோவிலின் வாசலை ஒட்டி செல்வ விநாயகர் வீற்றிருக்கிறார். திருஞானசம்பந்தர் திருவட்டத்துறை ஈசனால் முத்துச் சிவிகையும், மணிக்குடையும், பொற் சின்னமும் அருளப் பெற்ற திருக்காட்சியை, இங்கு தரிசிக்கலாம்.

அதை தரிசித்தபடி வெளிச்சுற்றில் மும்முறை வலம் வந்து, நந்தியம் பெருமானை வணங்கி அனுமதி பெற்று ஆலயம் நுழைய வேண்டும்.

பின்னர் விநாயகர், அன்னபூரணி அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்யலாம்.

உள் சுற்றில் சமயக்குரவர்கள் நால்வர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் ஆகிய தெய்வங்களுக்கு திருமேனிகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி பெருவிழா, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, மாசி மாதத்தில் மாசி மகம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.

மாசி மக திருவிழாவின் 2-ம் நாள், திருஞானசம்பந்தரை திருவட்டத்துறைக்கு அழைத்துச் சென்று, மகம் முடித்த பின்னர் மாறன்பாடிக்கு திரும்பி அழைத்து வரும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.

ஆண்டுதோறும் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.

விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் பேருந்தில் ஏறி, தொளார் கைக்காட்டி விலக்கில் இறங்கினால், நடந்து செல்லும் தூரத்தில் இறையூர் தாகந்தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.