Breaking News :

Wednesday, November 06
.

ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் பாரிமுனை, சென்னை


ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் சென்னை பாரிமுனையிலுள்ள மண்ணடி பகுதியில் உள்ள தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் ஆரம்பத்தில் இருந்தது.

ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு இந்த கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு வழிபாடுச் செய்யப்பட்டு வருகிறது.

புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் ஸ்ரீ காளிகாம்பாள் அழைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பதை நினைவூட்டும் வகையில், மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ காளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது கால் தாமரையில் வைத்தபடி அன்னை காளிகாம்பாள் பகதர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமுருகர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீ கமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

வெளிப்பிரகாரத்தை சுற்றி ஸ்ரீ சித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீசித்திபுத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு,ஸ்ரீவீரபத்திர மகாகாளியம்மன், ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா சந்நிதிகள் அமைந்துள்ளன.
குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற புராண செய்திகளும் உண்டு.

மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி அன்று ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் "யாதுமாகி நின்றாய் காளி" என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும்.

சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்,கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகையில் சோமவார உற்சவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், மகுடாபிஷேகம் ஆகியவை வருடாவருடம் இங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீகாளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் கூடிய விரைவில் பலனை கிடைப்பது உறுதி.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தருவதாக பக்தர்களால் பெரிதும் நம்பப்படுகிறது. மேலும், மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

காலை சந்தி பூஜை 6 மணி முதல் 7 மணி வரை, உச்சிக்காலம் பகல் 12 மணி, சாயரட்சை மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை, அர்த்த ஜாமம் இரவு 9 மணிக்கு என பூஜைகள் தினமும் நடைபெறுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.