Breaking News :

Tuesday, July 08
.

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் எங்கு?


உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ஒரு காலத்தில் ருடால்ப் ஏரி என்று அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தினால், ஒரு பகுதி ஆவியாகிறது.

கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது.

என்வைட்டினெட் தீவு :

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்றுதான் என்வைட்டினெட் தீவு. இங்கு வாழும் மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் திரும்ப வராது என்பதாகும்.
என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது இல்லையாம், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இங்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்து தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்களாம். மேலும், அவர்கள் வியாபாரத்திற்காக பக்கத்து தீவுகளுக்கும் வருவார்களாம்.

ஆனால், ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு இத்தீவில் இருந்து வெளியே வரும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சமாக கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது.

ஏன் வரவில்லை?

ஒரு கட்டத்தில் அங்கு சென்றவர்கள் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால், அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே இது மர்ம தீவாக மாறியது.

ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் :

ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் என்பவர் 1935ஆம் ஆண்டு தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார்.

என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் சிலரை அனுப்பி வைத்தார் விவியன். பல நாட்கள் போனதே தவிர, சென்ற விஞ்ஞானிகள் யாரும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்துக்கொண்டே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே ஆராய்ச்சி செய்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை.

பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை. இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்து வந்தவர்களிடம் தகவல்களை சேகரித்தனர்.

பிரம்மாண்ட ஒளி :

அந்த தீவில் பிரம்மாண்ட ஒளி ஒன்று வரும் என்றும் அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள் என்றும் அப்படித்தான் அங்கு போனவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்றும் பக்கத்து தீவுவாசிகள் கூறியுள்ளனர்.

பிரம்மாண்ட ஒளி எப்படி வருகிறது? அது மனிதர்களை எரித்து விடுகிறதா? அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே? என்ற கேள்விகளுக்கு விஞ்ஞானிகளுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு வருகின்றனர்.

இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.