காங்., முன்னாள் தலைவர் ராகுல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அடிக்கடி வெளிநாடு சென்று விடுவது வழக்கம். 'ராகுல் தனி விமானம் மூலம் துபாய் செல்வது தான் எங்களுக்கு தெரியும். அங்கிருந்து எங்கே போகிறார் என்பது தெரியாது' என்கின்றனர் கட்சி தலைவர்கள். ராகுலுக்கு சோனியாவின் தாய் மீது அதிக பாசம்; அதனால் அடிக்கடி இத்தாலி சென்று பாட்டியை பார்க்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராகுல் எத்தனை முறை வெளிநாடு சென்றார், எங்கு சென்றார், அங்கு எத்தனை நாள் தங்கியிருந்தார் போன்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைத்த 2014ம் வருடத்திலிருந்து ராகுல்- இதுவரை, 247 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார் என, மத்திய அரசிடம் தகவல் உள்ளதாம். இந்த விபரங்களை எப்படி வெளியிடுவது என அரசு யோசித்து வருகிறது. அரசு வெளியிடுவதற்கு பதிலாக, நீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடர்ந்தால், அனைத்து தகவல்களையும் தர அரசு தயாராக இருக்கிறதாம்.
இல்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யாராவது கேட்டாலும் தரப்படுமாம். எது எப்படியோ, ராகுலின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக ஒரு புத்தகமே விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது