Breaking News :

Sunday, September 15
.

பதிவு செய்து விட்டு 75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் காத்திருப்பு - தமிழக அரசு


தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்கள் உடனுக்குடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்வோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 81 ஆயிரத்து 695 பேரும், அதேபோல் 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 582 பேரும் பதிவு செய்து உள்ளனர்.

24 முதல் 35 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 60 ஆயிரத்து 359 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 13 லட்சத்து 20 ஆயிரத்து 337 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 386 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 71 ஆயிரத்து 566 பேரும், பெண்கள் 37 ஆயிரத்து 261 பேர் என 1 லட்சத்து 8 ஆயிரத்து 827 பேரும், பார்வையற்ற ஆண்கள் 11 ஆயிரத்து 776 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 318 பேர் என 17 ஆயிரத்து 94 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 437 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 467 பேர் என 13 ஆயிரத்து 904 பேர் பதிவு செய்துள்ளனர்.


இதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 57 ஆயிரத்து 963 பேரும், என்ஜினீயரிங் படித்தவர்கள் 3 லட்சத்து 956 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 67 ஆயிரத்து 468 நபர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்து உள்ளனர்.

ஆக மொத்தம் 75 லட்சத்து 88 ஆயிரத்து 359 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.