Breaking News :

Friday, July 12
.

“எங்கிருந்தோ வந்தார்” ரங்காராவ்!


தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார் எஸ்.வி.ரங்காராவ்.

தாயார் இட்ட பெயரும் குடும்பப் பெயருமாக இணைந்து ‘சாமர்லா வெங்கட ரங்காராவ்’ என அழைக்கப்பட்டார். இதன் சுருக்கப் பெயராக ‘எஸ்.வி.ரங்காராவ்’ எனும் பெயர் நிலைத்துவிட்டது.

 
அவரது பள்ளிப் படிப்பு பிறந்த கிராமத்திலும் சென்னையிலும் கழிந்தது.

விசாகப்பட்டணம், காக்கிநாடாவில் கல்லூரி வாழ்க்கை. இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று தீயணைப்புத் துறையில் பணியில் சேர்ந்தார்.

பள்ளிக்கல்வியில் தொற்றியது நடிப்புக் கிறுக்கு. பள்ளி நாடகத்தில் அவர் போட்ட முதல் வேடம், பில்லி சூனிய மந்திரவாதி பாத்திரம். காக்கிநாடாவில் தொழில்முறையற்ற (அமெச்சூர்) நாடகக்குழு ஒன்றில் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்டார்.

இங்கு இவரது சம பங்காளிகளாக இருந்தவர்கள், பின்னாளில் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான பி.எஸ்.சுப்பாராவ், அஞ்சலி தேவி, ஆதி நாராயணராவ் போன்றவர்கள். இந்த நாடகக்குழுதான் இவருக்கு நாடகப் பள்ளியாக அமைந்தது.

1951-ல் வெளியான ‘பாதாள பைரவி’ படத்தில், அவர் ஏற்ற நேபாள மாந்திரீகன் வேடம்தான் எஸ்.வி.ரங்காராவ் கற்ற வித்தைகளைக் கொட்டும் பாத்திரமாக அமைந்தது.

மறைந்து வாழும் நேபாள மாந்திரீகவாதியாக எஸ்.வி.ரங்காராவ், அவரிடம் சிக்கிக்கொள்ளும் துடிப்பு மிக்க வீரனாக என்.டி.ராமாராவ். வீரனின் காதலியாக மாலதி.

என்.டி.ஆரின் வீரதீர சாகசங்களே கதை என்றாலும், அவரை மிரட்டும் கொடூர மாந்திரீகவாதியாகவும் இளவரசி மாலதியை அடைய நினைக்கும் தந்திரனாகவும் எஸ்.வி.ரங்காராவ் மிரளவைத்தார்.

தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி. தெலுங்கில் 25 வாரங்கள் ஓடிய முதல் படமும் இதுதான். வெற்றியின் ரகசியம் நேபாள மாந்திரீகவாதி.

எஸ்.வி.ரங்காராவின் உடல்மொழியும் குரல்மொழியும் ஒருங்கிணைந்து மாயாஜாலம் காட்டின. அதேசமயம் மிக இயல்பான நடிப்பு, அலட்டல், மிரட்டல்…. இதற்கான தடயங்களை அவர் ஷேக்ஸ்பியரிடமிருந்து எடுத்துள்ளார்.

எஸ்.வி.ரங்காராவ் நடித்த படங்களை வரலாற்றுப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் என வளமையான சினிமா ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர்

‘பார்த்திபன் கனவு’ படத்தில் நரசிம்ம பல்லவன், ‘அனார்கலி’ படத்தில் அக்பர், ‘சாரங்கதாரா’ படத்தில் நரேந்திர மன்னர் உள்ளிட்ட சில வரலாற்றுக் கதைகளில் நடித்துள்ளார். இவற்றில் ‘பார்த்திபன் கனவு’ இவருக்குப் பெயர் சொல்லத்தக்க படம்.

மன்னர் நரசிம்ம பல்லவராகவும் சந்நியாசியாகவும் மறைந்து வாழ்ந்து படம் முழுக்க பார்வையாளர்களுக்கு இருவரும் ஒருவரா அல்லது இருவரா என அறிய முடியாமல் அற்புத நடிப்பை வழங்கினார்.

ஆனால், புராணப் படங்களே அவருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்தவை. புராணப் படங்களில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சிவாஜி, ஜெமினி, அஞ்சலிதேவி, ஜி.வரலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாவித்திரி போன்றவர்கள் நாயக, நாயகிகளாக நடித்தனர்.

ஒவ்வொரு முறை பேசியதும் அல்லது பேச்சினூடே கழுத்தை லேசாக வெட்டிச் சுளுக்குவார், ஒரு கண்ணை மட்டும் ஓரமாகச் சிமிட்டுவார்.

மாயாபஜாரில் ஆஜானுபாகுவாகக் கையில் கதாயுதத்துடன் கௌரவர் கூட்டத்தைக் கலக்கும் கடோத்கஜன் வேடத்தில், ‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்… ஹஹ்ஹ்ஹ்ஹஹா… ஹஹா ஹஹா’ என மேற்கத்திய மெட்டு கலந்த பாடலில், மெல்லுணர்வின் மூலமாக நகைச்சுவையையும் வழங்கினார்.

சிறந்த இயக்குநருக்கான பிரிவின் கீழ் ‘சதுரங்கம்’ படத்துக்கு ‘நந்தி விருது’ பெற்றவர். ‘விஸ்வ நட சக்கரவர்த்தி’, ‘நட சிம்ஹா’, ‘நட சர்வபூமா’ ஆகிய பட்டங்களையும் பெற்றவர்.

தொடர்ந்து ‘அன்னை’, ‘சாரதா’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’, ‘நர்த்தனசாலா’ ஆகிய படங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருதும், ‘பந்தவயலு’ படத்துக்குச் சிறந்த நடிகர் விருதும் பெற்றவர்.

தமிழில் ‘கல்யாணம் பண்ணிப் பார்’  (1951) இவருக்கு முதல் படம். இதில்தான் சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சாவித்திரி, இரண்டாவது நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் சாவித்திரியின் தந்தை 54 வயது ஜமீன்தார், ஜில்லா போர்டு மெம்பர், பஞ்சாயத்து பிரசிடென்ட் தணிகாசலம் பிள்ளையாக ரங்காராவ் நடித்தார்.

அப்போது, அவரது உண்மையான வயது வெறும் 34 தான். நொடித்துப்போன அதேநேரம் தான தர்மத்தை விட்டுக்கொடுக்காத ஜமீன் வேடம். பெரிதான ஒப்பனை கிடையாது.

ஆறடி உயரத்தில் வெடவெடத்த உடல், பஞ்சகச்ச வேட்டி, தொளதொள ஜிப்பா, தோளில் ஒரு துண்டு. ஊருக்குள் யார் வந்தாலும் முதல் விருந்து ஜமீன் வீட்டில்தான்.

இதற்காகவே ஊர் எல்லையில் காத்திருந்து பிடித்து வர இரண்டு வேலையாள்கள். அதேநேரம் விருந்தளித்தே நொடித்துப்போனதால், தன் ஒரே மகளுக்குத் திருமணம் செய்துவைக்க சல்லிக்காசுகூட ரொக்கமாக இல்லாத நிலைமை. நகைச்சுவை உணர்வுகொண்ட இப்பாத்திரத்துக்காகவே ஒரு மேனரிசம் பின்பற்றுவார் ரங்காராவ்.

இந்தப் பாத்திரம்தான் தமிழ், தெலுங்குத் திரையுலகினில் நிரந்தர ஜமீனாகவும் அப்பாவாகவும் ரங்காராவை நிலைக்கச் செய்தது. எத்தனைவித ஜமீன்கள்? எத்தனைவித செல்வந்தர்கள்? எத்தனைவித அப்பாக்கள்?

செல்வச் செருக்குமிக்க செல்வந்தராக ‘இரும்புத்திரை’, நகைச்சுவை மிளிரும் செல்வந்தராக ‘சபாஷ் மீனா’, ‘மிஸ்ஸியம்மா’, பழைமை வாதமும் சாதிப்பெருமிதமும் மிக்க செல்வந்தராக ‘சாரதா’, ஓஹோவென வாழ்ந்தபோது மிடுக்கும் நொடித்துப்போனதும் கவலை ரேகைகளும் கொண்ட ஜமீனாக ‘படிக்காத மேதை’.

தனது மகளின் வெகுளித்தன்மையைப் பயன்படுத்தி எவனோ ஒருவன் புகைப்படம் எடுத்து மிரட்ட, அவள் திருமணம் தடைப்படுகிறது. ஊரே அந்த வெகுளிப்பெண் கெட்டுப்போனவள் (!) என்கிறது.

இதை அவளது சகோதரனும் நம்புகிறான். அவளுக்குத் திருமணம் நடந்தால்தான் இளைய மகளுக்கும் திருமணம் சாத்தியப்படும். இத்தகைய உணர்ச்சிமிக்க பாத்திரத்தில் குமுறும் தந்தையாக ‘கைகொடுத்த தெய்வம்’.

மகள் சம்பாத்தியத்தில் வாழும் சுயநல அப்பாவாக ‘குலவிளக்கு’, சூழ்நிலையால் தடுமாறி மறைந்து வாழும் தந்தையாக ‘குங்குமம்’, வாழ்ந்து கெட்ட சிடுசிடுக்கும் ஜமீன் தந்தையாக ‘பந்தபாசம்’,

நேர்மையான ரயில்வே அதிகாரியாக ‘பச்சை விளக்கு’, மிடுக்கு நிறைந்த காவல்துறை அதிகாரியாக ‘சிவந்த மண்’, மனைவியின் சொல்லைத் தட்ட முடியாத சூழ்நிலைக் கைதியாக ‘வசந்த மாளிகை’ ‘வாழையடி வாழை’ எனத் தமிழ் மற்றும் தெலுங்கில் 100-க்கும் அதிகமான படங்களில் விதவிதமான அப்பாக்களாக வாழ்ந்து காட்டினார்.

‘நம்நாடு’ படத்திலும் மாநகராட்சி தலைவரையே ஆட்டிப் படைக்கும் வில்லனாக பயமுறுத்தினார்.

அவரது கடைசிப் படங்களில் ஒன்றான ‘ராஜா’வில் மிகப்பெரிய கள்ளக் கடத்தல் கும்பலின் தலைவனாக மறைந்து வாழும் டானாக மிரட்டினார்.
இறுதியாக தமிழ்ப்படத்தில் கண்டசாலாவின் குரலுக்குப் பாசமுள்ள அண்ணனாக ரங்காராவ் வாயசைத்து நடித்த பாடல்.
 " முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக.."

 1974-ல் மாரடைப்பு ஏற்பட்டு 53 வயதில் காலமானார் ரங்காராவ்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.