Breaking News :

Friday, July 19
.

திருக்குறள் கதைகள் - குறள் 38


"தன்மயி" என்று அழைத்தார் சத்வர்.

"வந்தேன் ஸ்வாமி."

"நான் யாகசாலைக்குக் கிளம்புகிறேன்."

"ஸ்வாமி, ஏதும் உண்ணாமல் நாள் முழுவதும் வெய்யிலிலும் மழையிலும் யாகம், யோகம் என்று உடலை வருத்திக் கொள்கிறீர்கள். இரவில் கொஞ்சம் பச்சைக்காய்களை உண்டு விட்டுச் சற்று நேரம் உறங்குகிறீர்கள். தூண் போல் இருந்த  உங்கள் உடம்பு துரும்பாக இளைத்து விட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது."

"உடலை வருத்தி யாகம் செய்தால்தானே உயர்நிலையை  அடைய முடியும்? நீ என் உடல் வாடுவதை உணர்வது போல் பகவானும் உணர்வார். அப்போது அவர் என் முன் தோன்றி எனக்கு அருள் புரிவார். அப்புறம் நான் சொர்க்கம் புகுவேன். நீயும் என்னுடன் வருவாய். நம் இருவரையும் இந்திரன் மாலை மரியாதைகளோடு வரவேற்பான்."

முனிவர் கிளம்பி விட்டார்.

தன்மயி சுசுறுப்பானாள். பானையில் இருந்த அரிசியைக் கொஞ்சம் எடுத்து அந்த மண் குடிலில் இருந்த பல பொந்துகளிலும் போட்டாள். எறும்புகள் சாப்பிடும். எலிகள் கூடச் சாப்பிடும். சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே!

உலையில் கொஞ்சம் அரிசி வைத்தாள். அரிசி களைந்த நீரைக் கொல்லைப்புறம் போய் மாட்டுத் தொழுவத்தில் இருந்த தொட்டியில் கொட்டினாள்.

சாதம் வடித்ததும், முதலில், வடித்த கஞ்சியை எடுத்துக் கன்றுக்கு வைத்தாள். பின்பு சாதத்தில் கொஞ்சம்  எடுத்துப் பின்புறம் ஒரு மேடையில் காக்கைக்காக வைத்தாள்.


சாதப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தபோது அவளை எதிர்பார்த்து ஒரு பூனையும், நாயும் காத்திருந்தன. இரண்டுக்கும் தனித் தனியாக இரண்டு இடங்களில் தரையில் சாதத்தை வைத்தாள். அவை அதை ஆவலோடு உண்ணத் தொடங்கின.

காலியான பாத்திரத்தை, கழுவும் தொட்டியில் வைத்து விட்டு வெளியே வந்தாள். கணவர் சாப்பிட மாட்டார் என்பதால் அவளும் சாப்பிடுவதில்லை. சாதம் வடித்ததே காக்கைக்கும், பூனைக்கும், நாய்க்கும்தான்!

வாசலில், பக்கத்தில் இருந்த  குடில்களிலிருந்து சில பெண்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள். தன்மயி அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையை அசைத்தாள். அவர்கள் அவளுக்கு சைகை மூலம் நன்றி தெரிவித்து விட்டு தோட்டத்தில் விளைந்திருந்த காய் கனிகளைப் பறித்துக் கொண்டார்கள்.

தன்மையிக்கும் முனிவருக்கும் எந்தக் காய்கள் எத்தனை வேண்டும் என்பது அந்தப் பெண்களுக்குத் தெரியும். அவற்றை மட்டும் விட்டு விட்டு மீதமிருப்பதிலிருந்து தங்கள் வீட்டுத் தேவைக்கான காய் கனிகளைப் பறித்துக் கொள்வார்கள்!

மாமரக் கிளை ஒன்றிலிருந்து ஒரு பழத்தைக் கடித்துக் கொண்டிருந்த அணில் ஒன்று அவளைப் பார்த்து விட்டுத் தன் வாலை வேகமாக மரக்கிளையின் மீது அடித்தது.
தன்மயி உள்ளே  வந்தாள். பூஜையறையில் அமர்ந்து சோஸ்திரங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

"தன்மயி!"

தன்மயி திகைப்புடன் திரும்பிப் பார்த்தாள். முனிவர் அதற்குள் திரும்பியிருக்க மாட்டார். அதுவும் இது அவர் குரல் இல்லையே! வேறு யார் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடப் போகிறார்கள்? பிரமையாக இருக்குமோ?

"தன்மயி!"

குரல் முன் பக்கத்திலிருந்தல்லவா வருகிறது? தன்மயி தன் முன்பிருந்த கடவுள் படத்தைப் பார்த்தாள். பத்ரி நாராயணரின் உருவப்படத்தில் சிறிய அசைவு தெரிந்தது. மின்னல் போல் ஒரு ஒளிக்கீற்றும் தோன்றி மறைந்தது .

'பத்ரி நாராயணரா பேசுகிறார்?'

"ஆமாம்" என்றது பத்ரி நாராயணரின் திருவுருவப்படம் அவள் மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பதுபோல்!

"பத்ரி நாராயணா!" என்றாள் தன்மயி நம்ப முடியாமல். "அங்கே என் கணவர் உங்கள் தரிசனத்துக்காக யாகம் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் என் முன் தோன்றுகிறீர்களே!"

"நீ செய்வதும் யாகம்தான். நீ வாழும் அற வாழ்க்கையே ஒரு யாகம்தான். உன் கணவருக்கான கடமைகளைச் செய்கிறாய். நீ சாப்பிடாமல் இருந்தாலும் உணவு சமைத்துப் பிற உயிர்களுக்கு வழங்குகிறாய்.

உன் தோட்டத்தில் விளையும் காய்கனிகளை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறாய். நாள் தவறாமல் நீ செய்யும் அறம் நீ கேட்காமலேயே பெரும் பயனை உனக்கு வழங்கும்.'

"எனக்கென்று எதுவும் வேண்டாம் நாராயணா! எல்லாப் பிறவிகளிலும் நான் என் கணவரோடு இணைந்து இருக்க வேண்டும். அவ்வளவுதான் நான் வேண்டுவது."

"அது மட்டும் நடக்காது தன்மயி!"

"ஏன் பரந்தாமா?"

"நீ தினமும் தொடர்ந்து செய்து வந்த அறத்தின் பயனாக இனி உனக்குப் பிறவி கிடையாது."

"என் கணவருக்கு?"

"அவன் தேவலோகத்தையல்லவா வேண்டுகிறான்? அவன் விருப்பப்படி அவனுக்கு தேவலோகம் கிடைக்கும். அங்கே சிறிது காலம் உல்லாசமாக வாழ்ந்து விட்டு அவன் கர்மங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்க வேண்டியதுதான்."

"அவருக்கும் பிறவி இல்லாமல் செய்ய முடியாதா?'

"அவன் விரும்புவதைத்தானே நான் கொடுக்க முடியும்?"

"நான் அவருடனேயே இருக்க விரும்பினால்?"

"அது இந்தப் பிறவியில் மட்டும்தான் சாத்தியம். உனக்கு மறு பிறவி இல்லை. உன் கணவனுக்கு மறு பிறவி உண்டு. அதனால் உங்கள் இருவருக்கும் உள்ள   தொடர்பு இந்தப் பிறவியிலேயே முடிந்து விடும். இது குறித்து நீ வருந்தத் தேவையில்லை இந்தப் பாசம், பிணைப்பு இதெல்லாம் இந்தப் பிறவியில் மட்டும்தான் உனக்கு இருக்கும். உன் கடமைகளை நீ தொடர்ந்து செய்து வா."

தன்மையிக்குத் தான் கண்ணைத் திறந்து கொண்டே கனவு கண்டோமா அல்லது களைப்பால் கணநேரம் உறங்கிப் போய் அதில் கனவு வந்ததா என்று தீர்மானிக்க முடியவில்லை.

குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

பொருள்:
ஒருவன் நாள் தவறாமல் அறச் செயல்களைச் செய்து வந்தால் அச் செயல் அவனுக்கு மறு பிறவி இல்லாமல் செய்யும்.

 

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.