Breaking News :

Monday, December 02
.

பாரதியார் கவிதைகள், Bharathiyar Kavidhaigal


"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"

இது பாரதியின் பாடல், பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக் கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும். 

நீலகண்ட பிரம்மச்சாரி.
நீலகண்டன்,  இவர் சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார். எனவே இவரை எருக்கூர் நீலகண்டன் என்று அழைப்பார்கள்.

சென்னையில் வங்கப் பிரிவினைக்கு எதிராக மெரினா கடற்கரையில் பேசிய விபின் சந்திரபாலின் ஆவேச முழக்கம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையான அமைந்தது. இச்சமயத்தில் தான் வ.உ.சி தன்னுடைய சுதேசி கப்பல் நிறுவனத்தை துவங்கினார். 
கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்கும் முழுநேர விற்பனையாளராக வேலையில் சேர்ந்தார். பாரதியாரின் உதவியோடு புரட்சி இயக்கத்தில் சேர்ந்து புரட்சியாளராக மாறினார்.

பாரதமாதா சங்கம்

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கு கொண்ட மிகப் பெரிய புரட்சிவிரன் நீலகண்ட பிரம்மச்சாரி. இவர் துவக்கிய பாரதமாதா சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்குரிய விதி முறையைப் பாருங்கள்!

காளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்து நீரை கையில் எடுத்து வெள்ளைக்காரர்களின் ரத்ததைக் குடிப்பதாகச் சொல்லி பருக வேண்டும். பின்பு கத்தியால் அவரவர்களின் வலது கை கட்டை விரலின் நுனியை அறுத்துக் கொண்டு வழியும் ரத்தத்தை அங்குள்ள வெள்ளைக் காகிதத்தில் ரேகைக் குறியிட்டு அடையாளம் செய்ய வேண்டும்.

என்ன பேராபத்து நேர்ந்தாலும் சங்க ரகசியங்களை வெளிநபருக்குத் தெரிவிக்கக்கூடாது. எதிர்பாராத சந்தர்ப்பத்தில் போலீசில் மாட்டிக் கொண்டால், தேவையானால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு உயிரை விட வேண்டும். இது தான் உறுப்பினர்கள் ஏற்கும் சபதமாகும்.

நீலகண்ட பிரம்மச்சாரி மூலம் வாஞ்சிநாதன் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்கிறான். மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று விட்டு தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார். நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு பெரிய புரட்சிப் படையை உண்டாக்கி 1857ல் நடந்தது போன்ற மிகப் பெரிய புரட்சியை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார். தனி நபரைக் கொலை செய்வதில் அவருக்கு உடன்பாடு கிடையாது.

வாஞ்சிநாதனை ஆஷ் கொலைக்கு தயார் செய்து அனுப்பியது வ.வே.சு.ஐயர்தான். தவிர நீலகண்டனுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது. ஆஷ் கொலையில் சம்மந்தப்பட்டாத நீலகண்ட பிரம்மச்சாரி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்படுகிறார். பெல்லாரி சிறையில் 71/2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். விடுதலை பெற்றவுடன் சென்னைக் வந்தார்.

பிச்சை எடுக்கும் நிலை

பகல் முழுவதும் சுதேசி பிரச்சாரம் செய்தார். தங்க இடம் இல்லை. உணவு கொடுக்க யாருமில்லை. பசி, பட்டினியால் உடல் தளர்ந்தது. இரவு நேரத்தில் ஒரு போர்வையால் முகத்தை எல்லாம் மூடிக் கொண்டு சில வீட்டு வாசலில் நின்று கொண்டு," அம்மாராப்பிச்சைக்காரன் வந்துள்ளேன், பழைய சோறு இருந்தால போடுங்களம்மா" என்று பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

சில நாட்கள் கழிந்தன. அவருடைய மனதில் "இது என்ன கேவலமான பிழைப்பு?" என்ற எண்ணம் தோன்றி பிச்சைக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டார். மூன்று நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்தார்.

பாரதியின் பாடல் :

அப்போது பாரதியாரும் திருவல்லிக்கேணியில் தான் தங்கியிருந்தார். பாரதியாரைப் பார்த்தாவாவது ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று நினைத்து பாரதியைத் தேடிவந்தார். நீலகண்டனைப் பார்த்து பல வருஷங்கள் ஆனதால் பாரதிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

"பாரதி ….. நான்தான் நீலகண்டன்" என்று சொன்னவுடன் நினைவு வந்தவராய் பாரதி ஆசையோடு, "டேய் பாண்டியா எப்படி இருக்கிறார்? என்று அவரைக் கட்டிப் பிடித்து ஆரத் தழுவினார்.

"பாரதி எனக்கு ஒரு நாலணா இருந்தால் கொடேன், நான் சாப்பிட்டு நான்கு நாளாச்சு" என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பாரதி, அவரை அழைத்துக் கொண்டு போய் முதலில் சாப்பிட வைக்கிறார்.

அப்போது தான் பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சி மிக்க பாடல் "தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடுகிறான்.

எனக்காக பாரதி ஒரு பாடலை பாடிவிட்டானே" என்று மனம் நெகிழ்ந்தார் நீலகண்டன்.பாரதியின் மரணச் செய்தி கேட்டு நீலகண்டன் பாரதியின் வீட்டுக்கு வருகிறார். பாரதியைச் சுடுகாட்டுக்கு பாடையில் எடுத்துச் சென்ற நான்கு பேரில் நீலகண்டனும் ஒருவர்.

கடைசிக் காலத்தில் "ஓம்" என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சாது ஓம்காரராக மாறி வட இந்திய யாத்திரைப் புறப்பட்டார். கடைசியாக கர்நாடகா மாநிலத்தில் நந்தி என்ற இடத்திற்கு வந்தார். அங்கேயே பல ஆண்டுகள் இருந்து தனது வாழ்க்கையை நிறைவு செய்தார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.