Breaking News :

Tuesday, December 03
.

தமிழ் மொழிக்குப் புத்துயிர் அளித்து, புதுச் சக்தி ஊட்டியவர் பாரதியார்


தமிழ் மொழிக்குப் புத்துயிர் அளித்து, புதுச் சக்தி ஊட்டியவர் பாரதியார்.
 
பாமர மக்களும் படித்துப் பொருள் புரியும் வகையில் அறிவுக் கவிதைகளை அழகு தமிழில் அளித்த கவிஞர் பாரதியார்.
 
பாரதியின் நினைவுகள்

இனிய எளிய கவிதைகளால் தமிழ்க் கவிதை வானில் புரட்சியையும், எழுச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார்.
 
இன உணர்ச்சி, மொழி உணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி, தாய் நாட்டு உணர்ச்சி என்று கணக்கிலடங்கா உணர்ச்சிக் கவிதைகளைப் புனைந்து, தமிழன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார்.
 
தேசப் பற்றும், தமிழ்ப் பற்றும், கடவுள் பற்றும் நிரம்பி வழிந்த பெரும் புலவர் இவர்
 
"பாட்டுக்கொரு புலவன் பாரதியடா" என்று தமிழ்ப் புலவர்களைப் பாட வைத்த பெரும் புலவன் எங்கள் பாரதி.
 
 
1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொராம் திகதி எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இது தமிழுக்கு சித்திர பானு வருடம் கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதியாகும். 
 
தந்தையார் பெயர் சின்னச்சாமி அய்யர், தாயார் லட்சுமி அம்மாள். மூல நட்சத்திரத்தில் பிறந்த தங்கள் மைந்தனுக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றார்.
 
இவரது செல்லப் பெயர் சுப்பையா. "பாரதி" என்பது இவரது அறிவாற்றலுக்கும், கவிதை புனையும் ஆற்றலுக்கும் கிடைத்த பட்டப் பெயர்.
 
சுப்பிரமணியனுக்கு ஐந்து வயதாக இருக்கும் போதே தாயார் மரணமாகி விட்டார். இது நடந்தது 1887-ம் ஆண்டில். 
 
இரண்டாண்டுகள் கழித்து 1889-ல் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். இதே வருடத்திலேயே குலமரபுப்படி ஏழு வயதுச் சிறுவனாகவிருந்த சுப்பிரமணியனுக்குப் பூணூல் சடங்கும் நடைபெற்றது.
 
இளமையிலேயே அருட்கவி பொழியும் ஆற்றலை சுப்பிரமணியன் பெற்றிருந்தான். தமிழன்னையே இளைஞனின் நாவில் நர்த்தனம் புரிவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். 
 
1893-ம் ஆண்டில், பதினொரு வயதை மட்டுமே எட்டிப்பிடித்திருந்த இவரது கவித்திறன் எட்டயபுரம் மன்னரின் காது வரை எட்டயது. எட்டயபுரம் சமஸ் தானப் புலவர்கள் சபையில் சுப்பிரமணியனின் கவித்திறன் பாராட்டப ;பட்டு, "பாரதி" என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
 
பதினொரு வயதுப் பையனுக்குப் "பாரதி" என்ற பட்டமா என்று தமிழறிந்தோர் ஆச்சரியப்பட்டனர்!
 
 
பாரதிக்கு பள்ளிப்படிப்பு வேப்பங்காய் போலக் கசந்தது. ஆனால் கவிதைகள் புனைவதிலேயே அவரது மனம் இன்பம் கண்டது. 
 
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த பாரதியார், அப்போதே தமிழ்ப் பண்டிதர்களுடனும் வித்துவான்களுடனும் சொற்போர் புரிய ஆரம்பித்தார். 
 
இதனால் பாரதியாரின் தமிழ்ப் புலமை பற்றியே எங்கும் பேசப்படலாயிற்று.
 
1897-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் திகதி பாரதியாரின் வாழ்வில் மறக்க நாளாகும். பதினான்கு வயது மட்டுமே நிறைவு பெற்றிருந்த இவருக்கு அன்று தான் திருமணம் நடைபெற்றது. மனைவியாக வாய்த்தவள் ஏழு வயதுச் சிறுமியான செல்லம்மாள்.
 
இந்திய முறைப்படி இவர்களுக்குப் இவர்களுக்குப் பால்ய திருமணம் நடந்தேறியது,
 
திருமணமாகிச் சரியாக ஓராண்டு கழித்து, அதாவது 1898-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாரதியாரின் தந்தையாரான சின்னச்சாமி ஐயர் மரணமானார்.
 
இதனைத் தொடர்ந்து அவரது வாழ்க்கையில் பல கஷ்டங்களும், பெரும் துயரங்களுனும் ஏற்பட்டன.
 
 
அந்த வருடத்திலேயே பாரதியார் காசிக்குச் சென்றார். அங்கு வசித்துவந்த தமது அத்தையாரான குப்பம்மாளின் ஆதரவுடன் காசியில் குடியேறினார்.
 
காசி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று, மெட்ரிக்குலேஷன் பாரிட்சையிலும் சித்தி பெற்றார்.
 
இதனைத் தொடர்ந்து அலகபாத் சர்வகலாசாலையில் புது முகத் தேர்வுப் பாரிட்சையில் முதன் நிலையில் சித்தி பெற்றார். வட மொழியுடன், இந்தியையும் கற்கும் சந்தர்ப்பமும் இவ்வேளையில் பாரதியாருக்குக் கிடைத்தது. 
 
1902-ம் ஆண்டு வரை இங்கு வசித்து வந்த பாரதியார், இருபது வயதுக்குரிய வாலிப மிடுக்குடன் திகழ்ந்தார். மீசை வளர்த்து, கச்சம், வால் விட்ட தலைப்பாகையும் அணியும் பழக்கம் இந்நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டது. 
 
1903-ம் ஆண்டில் எட்டயபுரம் மன்னரின் வேண்டுதலுக்கு இசைந்து, அரசவைக் கவிஞர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் நீண்ட காலம் இவர் இப்பதவியில் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு வருட காலம் மட்டுமே இப்பதவியை அவர் வகித்தார்.
 
இருபத்தொரு வயதிலேயே அரசவைக் கவிஞர் பதவியை வகித்த பெருமை பாரதியாருக்குக் கிடைத்தது. மன்னருக்குத் தோழராகவும் விளங்கிய இவர், இச் சந்தர்ப்பத்திலே "விவேகபானு" என்ற பத்திரிகையில் "தனிமை இரக்கம்" என்ற பாடலை எழுதினார்.
 
எங்கள் மகாகவியால் எழுதப்பட்டு, அச்சேறிய முதற் கவிதை இதுவே.
 
இருபத்திரண்டு வயதான பாரதியார், 1904-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையான மூன்று மாதங்களும் மதுரை சேதுபதி கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராகப் பணி புரிந்தார். 
 
நவம்பர் மாதம் முதல், சென்னை "சுதேச மித்திரன்" நாளிதழில் துணை ஆசிரியர் பதவி வகித்து, பத்திரிகையைச் சிறப்பாக வெளியிட்டு வந்தார். இதே வேளையில் "சக்கரவர்த்தினி" என்ற மாத சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் பதவியையும் வகித்து வந்தார். 
 
பத்திரிகை, எழுத்து, கவிதைப் பணிகள் ஒரு புறமிருக்க பாரதியார் இக் காலகட்டத்தில் அரசியலிலும் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார்.
 
கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரபிள்ளையுடனும் தொடர்பு கொண்டதுடன் வங்கிக் கிளர்ச்சியிலும் நேரடியாகவே ஈடுபட்டார்.
 
1905-ம் ஆண்டில் கல்கத்தாவில், தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகா சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
 
இச் சமயத்திலே சுவாமி விவேகானந்தரின் சிஷ்ய நிவேதிகாதேவியைச் சந்திக்கும் பேறு அவருக்குக் கிடைத்தது, அவரிடம் ஆசி பெற்று, அவரையே தமது ஞானகுருவாகவும் ஏற்றுக் கொண்டார்.
 
1907 ஏப்ரலில் தமிழகத்தினட தலைநகரான சென்னையிலிந்து "இந்திரா" என்ற புரட்சிகர வார இதழ் வெளிவர ஆரம்பமானது. அதன் முதல் ஆசிரியர் பதிவியையும் பாரதியாரே வகித்தார். 
 
"பால பாரதம்" என்ற ஆங்கில இதழையும் இதே வேளையி; பாரதியார் பொறுப்பேற்று நடத்தினார்.
 
இதே ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று, திலகரின் தீவரவாத இயக்கத்தில் மோகம் கொண்டார்.
 
அரவிந்தர், லாலா லஜபதிராய் ஆகியோரின் தொடர்பும் இப்வேளை பாரதியாருக்கு ஏற்பட்டது. வி. கிருஷ்ணசாமி ஐயரின் தேசியப் பாடல்கள் பாரதியாரின் மனதைக் கொள்ளை கொண்டது.
 
இதனால் ஏற்பட்ட மனமகிழ்ச்சியின் காரணமாக, "சுதேச கீதங்கள்" என்ற தமது பாடல்களை நான்கு பக்கச் சிறு பிரசுரங்களாக வெளியிட்டு இலவசமாகவே விநியோகம் செய்தார்.
 
1908-ம் ஆண்டு பாரதியாரின் முதலாவது கவிதை நூல் வெளியானது. "ஸ்வதேச கீதங்கள்" என்பது இந் நூலின் பெயர்.
 
இந்திய விடுதலைக் கிளிர்ச்சியில் மிகுந்த ஊக்கத்துடன் பாரதியார் ஈடுபடலானார். தீவிரவாதிகளின் கோட்டையாக சென்னை விளங்கியது. "சுயராஜ்ய" தினக் கொண்டாட்டத்தை அடுத்து, வ. உ. சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு எதிராக நடந்த வழக்குகளில் பாரதியாரும் சாட்சி சொன்னார். ஆனாலும் வ. உ. சி., சிவா ஆகியோருக்குச் சிறைத் தண்டையே கிடைத்தது.இதனால் பாரதியார் சோர்ந்து விடவில்லை. தாம் ஆசிரியராகவிருந்த "இந்தியா" என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்டத்துக்கு முடுக்கி விட்டார். 
 
பாரதியாரின் வீரம் மிகுந்த பாடல்கள், கேலிச் சித்திரங்கள், உணர்ச்சிக் கட்டுரைகள், தலையங்கங்கள் அரசியல் பிரச்சாரத்துக்கு கை கொடுத்து வழி நடத்தின.
 
இதனால் "இந்தியா" பத்திரிகை மீது அரசின் பார்வை விழுந்தது. பாரதியார் மீது அரசு வாரண்ட் பிறப்பித்ததாக தகவல் வந்தது. 
 
பாரதியார் சென்னையிலிருந்து தலைமறைவாகி புதுவைக்குச் சென்றார்.
 
புதிய இடம், புதிய சூழல், முன்பின் பழக்கமில்லாத மக்கள். அங்கும். போலிஸாரின் "கெடுபிடி" அதிகரித்தது, இச் சந்தர்ப்பத்திலேயே குவளைக் கண்ணனின் நட்பு பாரதியாருக்குக் கிடைத்தது.
 
 
1908-ம் ஆண்டு முதல் "இந்தியா" பத்திரிகை புதுவையிலிருந்து வெளி வந்தது. 
 
பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தமது பேனாவை வன்மையாகப் பாரதியார் பயன்படுத்தினார். இவரது பிரச்சாரத்துக்கு நாட்டில் பெரும் வரவேற்புக் கிடைத்தது. பத்திரிகையின் செல்வாக்கும் அதிகரித்தது.
 
இதனை அவதானித்த அரசு, இப் பத்திரிகையைப் பொது மக்கள் படிப்பதற்குத் தடை கொண்டு வந்தது. சென்னையில் பிறந்து புதுவையில் வளர்ந்த "இந்தியா" பத்திரியையும் நின்றது.
 
இந்த நிலைமையைப் பயன்படுத்தி, தமது இரண்டாவது கவிதை நூலான "ஜன்ம பூமி" யைப் பாரதியார் வெளியிட்டார். 1909-ம் ஆண்டில் இது வெளியானது.
 
1910-ம் ஆண்டில் விஜயா (தினசரி), சூரியோதயம் (வாரந்தம்), பாலபாரதம் (வாராந்தம்), கர்மயோகி (மாதாந்தம்) ஆகிய பத்திரிகைகளும் வெளிவருவதும் தடைப்பட்டது. "சித்ராவளி" என்ற ஆங்கில தமிழ் கார்ட்டூன் பத்திரிகையை வெளியிடும் முயற்சியும் கைவிடப்பட்டது.
 
இதே வருடம் ஏப்ரல் மாதம், பாரதியாரும் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அரவிந்தர் புதுவை வந்தார். இவ்வேளையிலேயே வேதப் பொருள் ஆராய்ச்சியும் நடைபெற்றது.
 
1910-ம் ஆண்டு நவம்பர் மாத்தில், பாரதியாரின் "கனவு", "சுயசரிதை" முதலிய கவிதைகள் அடங்கிய "மாதாமணிவாசகம்" என்ற நூல் வெளியிடப்பட்டது. 
 
இவ்வேளையில் வ. வே. சு. ஐயர் புதுவைக்கு வந்தார். ஐயரின் சந்திப்பால் பாரதியார் புத்துணர்வு பெற்று, அரசியல், கலை, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தார்.
 
அடுத்த வருடம், மணியாச்சி என்ற இடத்தில் மாவட்ட கலக்டர் ஆஷ் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் பயனாக புதுவையிலிருந்த தேசபக்தர்கள் மீது போலிஸார் தங்கள் பார்வையை வீச ஆரம்பித்தனர். பலர் புதுவையிலிருந்து வெளியேறினர்.
 
இதன் பயனாக, பாரதியாருக்கு சிஷ்யர்களும், அன்பர்களும் நாடெங்கும் அதிகரிக்கத் தொடங்;கியது.
 
1912-ம் ஆண்டே பாரதியாரின் வாழ்வில் உழைப்புமிக்க வருடமாகும். பகவத் கீதையை இவ்வாண்டிலேயே தமிழில் மொழி பெயர்த்தார்.கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய கவிதை நூல்களும் வெளியாகின. "பஞ்சாலி சபதத்தின்" முதலாம் பகுதியும் அச்சேறியது. 
 
பாரதியாரின் புத்தங்களைப் பொது மக்கள் ஆர்வத்துடன் விரும்பிப் படிக்கத் தொடங்கினர்.
 
சுப்பிரமணிய சிவாவின் "ஞான பானு" என்ற பத்திரிகைக்கு 1913-ம் ஆண்டு காலப் பகுதியில் பாரதியார் பல விஷயதானங்களை எழுதினார். 
 
இவரது தேசபக்திப் பாடல்களைக் கொண்ட "மாதாமணி வாசகம்" என்ற நூல் இவ்வாண்டில் தென்னாபிரிக்கா நேடாவில் பிரசுரம் செய்யப்பட்டது.
 
1914-ம் ஆண்டு-
 
முதலாவது உலக யுத்தம் ஆரம்பமாகி விட்டது. 
 
புதுவையில் வாழ்ந்த தேச பக்தர்களுக்குப் பெரும் துயர்களும் தொல்லைகளும் ஏற்பட்டன.
 
அடுத்த மூன்றாண்டுகளும் பாரதியாரின் வாழ்வு சொல் லொணாக் கஷ்டங்களுக்கு மத்தியில் உருண்டோடியது. "அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது?" என்ற நிலையில் அவர் வாழ நேர்ந்தது.
 
1917-ம் ஆண்டில் இவரது "கண்ணன் பாட்டு" என்ற நூலை பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்டார்.
 
அடுத்த ஆண்டில் "நாட்டுப் பாட்டு" என்ற பெயரில் இவரது சுதேச கீதங்கள் புத்தகமாக வெளிவந்தது. இதனையும் பரலி சு. நெல்லையப்பரே வெளியிட்டார்.
 
புதுவை (புதுச்சேரி) வாழ்க்கையிலும் பாரதியாருக்கு வெறும்பேற்பட்டது.
 
1918 நவம்பர் 20-ம் திகதி-
 
புதுவையிலிருந்து புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்தபோது பாரதியார் கைது செய்யப்பட்டார்.
 
முப்பத்திநான்கு நாட்கள் "ரிமாண்டில்" இருந்த பின்னர் "வழக்கு இல்லை" என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் தமது மனைவியின் ஊரான கடயத்துக்குச் சென்றார்.
 
அடுத்த இரண்டாண்டுகளையும் கடயத்திலேயே செலவிட்டார். எட்டயபுரம், திருவனந்தபுரம், காரைக்குடி, கானாடு காத்தான் ஆகிய பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்.
 
வறுமை மீண்டும் பாரதியாரை வாட்டத் தொடங்கியது.
 
தமது நிலையை விளக்கி எட்டயபுரம் மன்னருக்குச் சீட்டுக் கவிதைகளை எழுதி அனுப்பினார். மன்னரிடமிருந்து எதிர் பார்த்த உதவி கிடைக்கவில்லை. 
 
இதனால் அவரது உடல் நிலை பாதிப்படைந்தது.1919 மார்ச் மாதம் 19-ம் திகதி மீண்டும் சென்னைக்கே திரும்பினார்.
 
இந்திய அரசியல் மேதை ராஜாஜி வீட்டுக்கு ஒரு தடவை சென்றபோது மகாத்மா காந்தியை பாரதியார் சந்தித்தார். இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி, பாரதி ஆகிய மூவரும் ஒன்றாகச் சந்தித்தது இதுவே முதலும் கடைசியுமாகும். 
 
1920 டிசம்பர் மாதத்திலிருந்து மித்திரன் பத்திரிகையிலும் மீண்டும் உதவி ஆசிரியர் பணியை ஏற்றார். பல வெளியூர்களில் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பமும் இக் காலப்பகுதியில் பாரதியாருக்குக் கிடைத்தது. 
 
 
1921 ஜூலை ஆகஸ்ட் மாதத்தில்-
 
திருவள்ளிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையின் கோபத்துக்கு இலக்காகி, பாரதியார் தாக்கப்பட்டார். தலையிலும் காலிலும் சிறு காயங்கள் ஏற்பட்டன. 
 
காயங்கள் குறைவாகவே இருந்த போதிலும், தாக்குதல் அதிர்ச்சி பாரதியாரை நோயாளியாக்கியது.
 
செப்டம்பர் மாதம் 11-ம் திகதி-
 
தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட போதிலும், வயிற்றுளைவு நோயினால் பாரதியார் பாதிக்கப் பட்டார். மருந்து சாப்பிடவும் மறுத்துவிட்டார்.
 
செப்டம்பர் 11-ம் திகதி நள்ளிரவு தாண்டி, 12-ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வு நீங்கினார்.
 
இறக்கும் போது பாரதியாருக்கு 39 வயது மட்டுமே!
 
பாரதியாரை மாபெரும் கவிஞர் என்று மட்டுமே மக்கள் அறிவர்.
 
அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியாது. 
 
அவர் ஒரு சிறந்த தேவியக் கவிஞராக மிளிர்ந்த போதும், தமிழுக்குச் செய்த தொண்டு மகத்தானது.
 
பாரதியாரின் கவிதை நடைப் புதுமையை, அவரது வசன நடையிலும் காணலாம். படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கு உணர்ச்சியும், புத்துணர்வையும் அது ஏற்படுத்தும் 
 
தமிழ் மொழியில் அவருக்கிருந்த கற்பனைத் திறனும், சிந்தனைத் திறனும் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தவை.
 
மகாகவியின் கவிதைகளை தேசிய கீதங்கள், பக்திப்பாடல்கள், ஞானப் பாடல்கள், தனிப் பாடல்கள், கண்ணன் பாட்டுக்கள், குயில் பாட்டுக்கள், பாஞ்சாலி சபதம், புதிய பாடல்கள், வசன கவிதை எனப் பலவாறாகப் பிரிக்கலாம்.
 
அவரது கதைகளையும் ஞானரதம், நவ தந்திரக் கதைகள், தராசு, சில வேடிக்கைக் கதைகள் என வகைப்படுத்தலாம்.
 
காக்காக்கள் பார்லிமென்ட், சும்மா, கிளி, குதிரைக் கொம்பு, மழை, காற்று, கடல், மாலை நேரம், கடற்கரை யாண்டி என்பன இவரது வேடிக்கைக் கதைகளில் சிலவாகும். சந்திரிகையின் கதை, சின்னச்சங்கரன் கதை ஆகியன எழுதி முடியுமுன்னரே, பாரதியார் பூவுலகு நீங்கினார்.
 
பாரதியாருக்கு இரண்டு புதல்விகள் பிள்ளைச் செல்வங்களாகக் கிடைத்தனர்.
 
ஒருவர் சகுந்தலா பாரதி. மற்றவர் தங்கம்மாள் பாரதி, பாரதியாரின் கூடப் பிறந்த சகோதரரான சி. விசுவநாத அய்யர் இப்போது மானமதுரையில் வசிக்கின்றார். தலைமை ஆசிரியராகப் பதவி வகித்து, ஓய்வு பெற்ற இவருக்கு இப்போது வயது 86 ஆகும்.
 
இன்று உலகம் போற்றும் கவிஞராகத் திகழும் பாரதியாரின் இறுதிச் சடங்கு வைபவங்களில் கலந்து கொண்டவர்கள் இருபது பேர் மட்டுமே என்று கூறப்படுகின்றது. 
 
பாரதியாரின் பேரர்கள், பூட்டர்கள் பலர் கனடா, கலிபோர்னியா, மலேஷியா, டோரண்டோ ஆகிய இடங்களில் இன்று தொழில் புரிகின்றார்கள்.
 
புதிய ரஷ்யாவையும், ஜேர்மனியையும் புகழ்ந்து பாடிய முதற் கவிஞர் பாரதியாரே. வீழ்ந்துபட்ட பெல்ஜியத்துக்காகவும் முதற் குரல் கொடுத்தார் இவரே!
 
புரட்சி, பொதுவுடமை என்ற சொற்களைத் தமிழில் தந்த புரட்சிக் கவிஞரும் இவரே.
 
குழந்தைகளுக்காச் சின்னஞ்சிறு கவிதைகளைப் பாடிய குழந்தைக் கவிஞரும் இவரே.
 
பாரதி பாடாத பொருளே இவ்வுலகில் இல்லை எனலாம். இதனால் தான் பாரதியாரை, உலகக் கவிஞன், உண்மைக் கவிஞன், தேசியக் கவிஞன், குழந்தைக் கவிஞன். குதூகலக் கவிஞன், புதுமைக் கவிஞன், புதுயுகக் கவிஞன், வீரக் கவிஞன், விடுதலைக் கவிஞன், கண்டனக் கவிஞன், காதற் கவிஞன், சுதந்திரக் கவிஞன் என்ற பல்வேறு பெயர்களால் உலக மக்கள் மகிழ்வுடன் அழைக்கின்றனர். 
தமிழ் மொழிக்குப் புத்துயிர் அளித்து, புதுச் சக்தி ஊட்டியவர் பாரதியார்.
 
பாமர மக்களும் படித்துப் பொருள் புரியும் வகையில் அறிவுக் கவிதைகளை அழகு தமிழில் அளித்த கவிஞர் பாரதியார்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.