Breaking News :

Monday, April 29
.

வரலட்சுமி விரதம் ஏன்? எப்படி?


பண்டிகைகளை கோவில்களில் போய்   கொண்டாடுவோம். சில பண்டிகைகளையும், விரதங்களையும் மட்டும் வீட்டிலேயே கொண்டாடுவோம். அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரதம்.  

திருமணமான சுமங்கலி பெண்கள், கன்னி பெண்கள் பக்தி சிரத்தையுடன் இருக்கக்கூடிய சுமங்கலி பூஜை எனும் வரலட்சுமி விரதம்  தென் இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் மிகவும் பக்தி சிரத்தையாகப் பெண்களால்  கடைப்பிடிக்கப்படுகிறது .

இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ வேண்டும்.  

தொழில் சிறக்க வேண்டும். அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து கடைப்பிடிக்கும்   விரதமாகும்.

சுமங்கலி பெண்கள் மட்டுமல்லாமல் கன்னி பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு முழுமையான பெண்ணாவது அவள் திருமண உறவில் ஈடுபடும் போது தான்.  அவளுக்கு எல்லாமுமாக இருக்கக்கூடியவன் கணவன். அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லட்சுமியை வணங்கி விரதம் இருக்கின்றனர்.

வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் சுமங்கலி பெண்கள் முதல் நாளன்று வீட்டைச் சுத்தப்படுத்தி அரிசி மாவில் கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்ட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து,  அதன் மீது  மரப்பலகை  சுத்தம் செய்துவைக்க வேண்டும்.  அதன் மீது அரிசி மாவில் கோலம் போட வேண்டும். மரப்பலகை மீது வெள்ளி தாம்பாலம் அல்லது பித்தளை தட்டு அல்லது வாழை இலை வைக்க வேண்டும். (எவர் சில்வர் பாத்திரங்களை பூஜையின் போது தவிர்க்க வேண்டும்.).

அதன் மீது மகாலட்சுமியை பிரார்தித்து பச்சரிசி அல்லது நெல் மூன்று கைப்பிடி வைத்து பரப்பவும். 

பித்தளை அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு,நாணயங்கள், (முடிந்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறிய தங்க காசை கணவரிடம் சொல்லி வாங்கி பூஜைக்கு பயன்படுத்தலாம். அப்படி தங்கம் அல்லது வெள்ளி காசு இல்லாவிட்டால் சாதாரண நாணயங்கள் (9 அல்லது 11 நாணயங்கள்)  ஜாதிக்காய், மாசிக்காய் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) ஏலக்காய், கிராம்பு எலுமிச்சை பழம், கருகமணி இவை உள்ள போட வேண்டும். வாசனை பொருட்களும் போடலாம். இந்த கலசத்தின் வாய்பகுதியில் மாவிலை வைத்து அதன் மீது தேங்காய் வைக்க வேண்டும்.  தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் சந்தனத்தால் செய்தோ(அ)வெள்ளி முகம் வைத்தோ அவரவர் வசதிக்கு ஏற்ப வைக்கலாம். அம்மனுக்கு கலசத்தின் மீது புதிதாக வாங்கிய   மஞ்சள்  அல்லது  சிகப்பு நிற பட்டாடை கட்டவும். அல்லது புதிய புடவை, ஜாக்கெட் துணியை கட்டலாம். சில அம்பாள் அலங்காரம் செய்வதற்கான நகைகளை வைத்து அலங்காரம் செய்யலாம்.   

வாசலுக்கு அருகில் அம்மனை   இன்று  (19 - 08 - 2021) வியாழக்கிழமை இரவே வைத்து விட வேண்டும் மறுநாள்   (20 - 08 - 2021)  வெள்ளிக்கிழமை  வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். 

வாசலில் வைத்த  லட்சுமி  அம்மனை அழைக்கும் விதமாக "எங்கள் வீட்டில் எழுந்தருளி எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வர்யங்களை தந்து அருள்வாயாக!" என்று லட்சுமி அம்மனை அழைத்து வந்து வீட்டில் கிழக்கு முகமாக வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு முகமாக அமர்ந்து   கும்ப பூஜைக்கு பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜிக்க வேண்டும்.  >> பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம்.  அன்னைக்கு பல வகை சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். 

வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு தனம், தான்யம், ஐஸ்வர்யம், சந்தான பாக்கியம், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுள், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்று அன்னை பார்வதி அருளியிருக்கிறார். 

நோன்பு  மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். மலர்களால், தீபங்களால் அம்பாளை ஆராதனை செய்து 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கணவரிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டி விடச் சொல்லி, சரடை கட்டிக் கொண்டு ஆசிர்வாதம் பெற வேண்டும். சுமங்கலி பெண்களுக்கும் நோன்புக்கயிறு கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அம்பிகையை எண்ணி உணவு கொடுத்து வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத்துணி, இனிப்பு, பழம் ஆகிய பொருட்களை தாம்பூலமாக கொடுத்து உபசரிக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழும் வரத்தை  அன்னை வரலட்சுமி நமக்கு தருகிறாள் . சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் அன்னை மகாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வளமான வாழ்வு கிடைக்கும். 

பூஜை செய்த அன்று மாலை பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய், பச்சரிசி வைத்து விட்டு   கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும்.    மறுநாள் காலை  எளிமையான பூஜை செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.   இதன் மூலம் அன்னபூரணியின் அருள் நமக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

>> சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலையை மறுநாள் நீர் நிலைகளில் கரைத்துவிட வேண்டும்.

மறு வெள்ளியன்று பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் செல்வச் செழிப்பு பெருகும், என்றும் நிறைந்திருக்கும்.

வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம:

வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 - 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது.

இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம். அப்படி இல்லை என்றால், பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.