தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி குடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் இளநீர் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்பனையான பெரிய இளநீர் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் விலையே அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இவற்றின் விலை ரூ.60-ல் இருந்து 70 ஆகவே இருந்தது. தற்போது ரூ.80 -ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இடங்களுக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரோட்டோர இளநீர் வியாபாரிகளுக்கு வாரத்துக்கு 200 இளநீர் கிடைப்பதே அரிதாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணம் என்று இளநீர் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். சிறிய ரக இளநீர் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் விலை முன்பு ரூ.35 ஆக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இளநீரின் திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதனை வாங்கி குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.