Breaking News :

Sunday, October 06
.

சிவ ஸ்தலம் : பட்டீச்சரம் (பட்டீஸ்வரம்)


சிவ ஸ்தலம் : பட்டீச்சரம் (பட்டீஸ்வரம்)

இறைவன் பெயர்

தேனுபுரீஸ்வரர்

இறைவி பெயர்

ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி

தேவாரப் பாடல்கள்

சம்பந்தர்

பாடன்மறை சூடன்மதி

எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மி. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்திற்கு அருகில் திருசத்திமுற்றம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை யடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்
பட்டீஸ்வரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612703
தொடர்புக்கு: 0435 - 241 6976
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

 

ஊர் - பழையாறை; கோயில் - பட்டீச்சரம்.

காமதேனுவின் புதல்வியருள், "பட்டி" பூசித்தது ஆதலின் பட்டீச்சரம் என்னும் பெயர் பெற்றது.

இங்கே அம்பிகை தவஞ்செய்ததால் 'தேவிவனம் ' என்றும் பெயர்.

ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதால், இங்குள்ள (ஐந்து நந்திகள் உள்ளன) நந்திகள் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.

இராமேஸ்வரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. இதனையொட்டி, இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது.

(மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடத் தொடங்கினார் என்றும் அது முற்றுப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது.)

தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் எனபட்டது. திருமலைராயனாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்திலுள்ள சிவாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. கோவிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமச்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், இராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் முதலானோர் சந்நிதிகள் உள்ளன. வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சந்நிதி இருக்கிறது. அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.

தலத்தின் மற்ற சிறப்புகள்:

பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.
விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.
வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.
மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.
இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியேயுள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்புடையது.
வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள்.காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.

கோவில் திருவிழாக்கள்:

விசாக விழா: வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் காலையில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு திருமலைராஜன் ஆற்றிற்குச் சென்று தீர்த்தங் கொடுத்து அங்கிருந்து இரவில் மூர்த்திகள் விமானங்களில் புறப்பட்டுக் காட்சி கொடுத்து ஆலயத்திற்கு வந்து சேரும்.
முத்துப் பந்தல் விழா: ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடைபெறும். இத்தலத்தின் சிறப்புவிழா இதுவேயாகும்.
மார்கழி விழா: மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுக்கும். இராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடைபெறுகிறது.
சிறப்புகள்

 

இங்கு தலவிநாயகராக அனுக்ஞை விநாயகர், மதவாரணப்பிளையார் உள்ளார்.

ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தர் அருளிய சிறப்புடைய தலம்.

இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன; அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான்.

இங்குள்ள துர்க்கை சோழர் காலப் பிரதிஷ்டை.

ஆனித் திங்கள் முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப்பந்தர் பெற்ற திருவிழா நடைபெறுகிறது.

இத்தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. இது தமிழில் உரைநடையில் பட்டீஸ்வரர் மான்மியம் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 
K.S.BALAMURUGAN.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.