Breaking News :

Monday, April 29
.

வாழ்க்கை காபியை போன்றது


தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.

திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டு வந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் ‘வெள்ளி, பீங்கான்’, போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் ‘கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்’ போன்ற சாதாரண கோப்பைகள் வரை பல வகைகள் இருந்தன.

அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்து கொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப் பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்.

இப்போது பேராசிரியர் பேசலானார் , “உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள். கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை. விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.

வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.

“எளிமையாய் வாழுங்கள்!
கருணையுடன் பேசுங்கள்
எல்லோரையும் நேசியுங்கள்!
வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்” என்றார் பேராசிரியர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.