தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று, மே மாதம் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதல்வராக மே7ஆம் தேதி பதவியேற்றார்.
இந்த 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (21.06.2021) கூடுகிறது. கூட்டத்தில் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்துகிறார். ஆளுநரின் ஆங்கில உரையை, சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்கிறார்.
கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும். சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். தமிழக மக்களுக்கு புதிதாக ஏதாவது அறிவிப்புகள் வருமா என எதிர்பார்க்கப்படுகிறது.