உக்ரைனில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, அங்கேரி ஆகியவற்றுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டு அங்கிருந்து இந்திய மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
நேற்று முதல் மீட்பு விமானம் மூலம் 219 பேர் மும்பை வந்தடைந்தனர். நாடு திரும்பிய இந்திய மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து வரவேற்றனர்.
அங்கு படிக்கும் மாணவி கூறும்போது, ‘‘உக்ரைனின் செர்னிவிஸ்ட் நகரில் இருந்து வெளியேறியது எங்களுக்கு எளிமையாக தான் இருந்தது. ஆனால் கிழக்கு உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த பகுதி ரஷிய எல்லைக்குள் மிக அருகில் உள்ளது. அவர்கள் பயத்துடன் பதுங்கு குழிகளில் உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கூட கிடைக்கவில்லை’’ என்றார்.