உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை இன்று தமிழக அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைக்கின்றனர். மாடுபிடி வீரர்கள் 700 பேரும், 300 காளைகளும் பங்கேற்று களமாட உள்ளனர்.
கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி 14-ஆம் நாள் அவனியாபுரத்திலும், 15-ஆம் நாள் பாலமேட்டிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 16-ஆம் நாள் நடைபெற வேண்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, தமிழக அரசின் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டது.
கரோனா தொற்றைத் தவிர்ப்பதற்காக மாடுபிடி வீரர்களும், காளைகளும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் போட்டிகளில் தலா 700 வீரர்கள் 300 காளைகள் பங்கேற்றனர். ஒரு போட்டியில் பங்கேற்றவர்கள் மற்ற போட்டியில் பங்கேற்க முடியாது, அதேபோன்று வீரர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். அதில் தேர்வாகும் காளைகள் மற்றும் வீரர்கள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்படுவர். காலை 7.30 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை ஏறக்குறைய 8 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு போட்டியிலும் 50 வீரர்கள் களமிறக்கப்படுவர். அவர்களில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவர். இறுதியாக அதிக காளைகளைப் பிடிக்கும் வீரருக்கும், சிறப்பாக விளையாடும் காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மேலும் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படவுள்ளது. மேலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் தங்கக்காசு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். சிறந்த மாடு பிடி வீரருக்கான கார், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கப்படவுள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவை ஒட்டி மாவட்ட காவல்துறை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் கால்நடைத்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.