நான் அமைச்சராக இருந்தபோது வானத்தில் மட்டும்தான் மின்வெட்டு - ஜெயக்குமார்
நான் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது வானத்துலதான் மின்வெட்டு இருக்கும், தமிழ்நாட்டில் இருந்ததே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சி.பா.ஆதித்தனாரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்றைக்கு சட்டசபை நாரத கான சபாவாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு உள்ளாக முடிக்க வேண்டியது சபாநாயகரின் கடமை.
ஒரு விவாதத்தை முடிக்காமல், சபாநாயகர் முற்றுப்புள்ளி வைக்காமல் விவாதத்தை சண்டை போட விடக் கூடாது சபாநாயகர் நாரதர் வேலை பார்க்க கூடாது. சரியான வகையில் அவையைக் கொண்டு செல்லவில்லை என்பதால் விமர்சனம் செய்கிறோம் என்றார்.
ஜெம் வீரமணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சருக்கு ஆதரவு கொடுக்கக் கூடிய கட்சியை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்கள். ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.
எலுமிச்சம் பழத்தை மறைக்கலாம், மாம்பழத்தை மறைக்கலாம், பூசணிக்காவை மறைக்க முடியுமா? ஆனால் அந்த வல்லமையை தவெக பெற்றுள்ளது என விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியக்கூடிய அளவில் காட்டுமிராண்டி தனமான செயல். எதிர்காலத்தில் இம்மாதிரியான செயல் நடக்கக் கூடாது.
RTI தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவு, எதே அதிகாரத்தின் உச்சக்கட்டம், சர்வாதிகாரத்தின் உச்சகட்டம். எங்களுடைய ஆட்சியில்தான் ஆர்டிஐ கொண்டு வரப்பட்டது. அதனால் தான் பொதுமக்களுக்கும் என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக தெரியும். இதுவரை எந்த அரசாங்கமும் இதை செய்தது கிடையாது. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போல உள்ளது என விமர்சனம் செய்தார்.
மதுராந்தகத்தில் முதலமைச்சர் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் கையில் இருந்த இரட்டை இலை மறைக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, வன்மையான செயல். எம்ஜிஆர் தொண்டர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சுகின்ற செயல். எப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.
பிரச்சாரமா ஓட்டு பிச்சையா? ஓட்டுகளை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்கான தந்திரம் உள்ளது. உள்ளம் அளவில் எம்ஜிஆரை பூஜிக்கிறவர்கள் தவெகவினர் கிடையாது ஓட்டுக்காக மட்டுமே அவரை பயன்படுத்துகிறார்கள்.
பஸ்ஸுக்கும் கழிப்பிடத்திற்கும் வெற்றி திட்டம் என பெயர் வைப்பதும், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி நிறத்தை பூசுகிறவர்கள், ஏன் திட்டங்களுக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரை வைக்க மறுக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
தவெக அரசு மோசமான அரசு. மதுரையில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கூட பவர் கட். செங்கோட்டையன், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் என அமைச்சர்கள் பேசும் கூட்டத்திலேயே கரன்ட் கட் என்றால் எப்படி?
நான் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது வானத்தில் மட்டும்தான் மின்வெட்டு, தமிழகத்தில் மின்வெட்டு இருந்ததில்லை. தடங்கலற்ற மின் விநியோகத்தை எங்கள் ஆட்சியில் கொடுத்தோம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.