மனைவியைத் தாக்கி சித்ரவதை - DSP ஜாபர் சித்திக் சிறையிலடைப்பு.
விஜய் ஒரு தேசிய விருதாவது வாங்கினாரா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
முதல்வர் விஜய், 70 திரைப்படங்களில் நடித்தும் கூட அவரால் தேசிய விருது வாங்க முடியவில்லை, இதில் அரசியலில் எப்படி பாஸ் செய்ய போகிறார் என அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "சினிமா டயலாக்குல பேசுவோம். நடிப்பில் விஜய் சிறந்தவர்தான். ஆனால் நிர்வாகத்தில் ஜீரோ. நடிப்பில் ஹீரோ, நிர்வாகம் என வரும்போது அவர் ஜீரோ!
வாங்கியிருக்கிறாரா, எனக்கு தெரிந்தவரையில் இல்லை. இதுவரை 70 படங்களில் நடித்துள்ளார், ஒரு படத்திற்கு கூட அவர் தேசிய விருது வாங்கியதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த நிறைய நடிகர்கள் தேசிய விருதை வாங்கியிருக்கிறார்கள்.
ஆனால் 70 படங்கள் நடித்தும் அவரால் விருது வாங்க முடியவில்லை. அங்கேயே பாஸ் செய்ய முடியவில்லை. இதில் அரசியலா பாஸ் செய்ய போகிறார்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் மதுராந்தகம் தொகுதிக்குள்பட்ட எல்.எண்டத்தூரில் அவர் , வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மேலும் பேசுகையில், "இந்த தேர்தல் எதற்காக வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெட்டி மாறி போச்சு. அதனால் வந்த தேர்தல். நீங்கள் கால்கடுக்க நின்று அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என வாக்களித்தீர்கள்.
வெற்றி பெற்றவர் உங்களுக்கு உழைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக குதிரை பேரத்தின் வழியாக பெட்டி வாங்கினார். அவர்தான் நம்மை எதிர்த்து போட்டியிடுகிறார். நம் தொண்டர்கள், கூட்டணியினர் பாடுபட்டு, மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தால், குதிரை பேரத்தில் ராஜினாமா செய்துவிட்டு அங்கு போய் அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் சென்றுவிட்டனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் தண்டனை கொடுங்கள்.
நேற்று விஜய் வீர வசனம் பேசினார், குழந்தைகளை சீரழித்தவர்களை நான் தான் கைது செய்தேன் என்றார், அது பச்சைப் பொய். ஏற்கனவே திமுக ஆட்சியில் எஃப்ஐஆர் போட்டனர். கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் ஜூலை 20ல் விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 3ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சொன்ன போதும் வாய்தா கேட்டனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் நீதிபதியே மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால் வீரமணி கைது செய்யப்பட்டார்.
தவெக நிறைய அறிவிப்புகளை கொடுத்தது , எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் 31 ஆண்டு கால நிறைய திட்டங்களை கொடுத்தோம். அப்படி தவெக ஆட்சியில் ஒரு திட்டத்தையாவது சொல்ல முடியுமா?
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 என சொல்லி, கொடுக்கவில்லை, முதியோர் உதவித்தொகையையும் உயர்த்தவில்லை. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம், விசைத்தறி, கைத்தறி ஆண்டுக்கு 30 ஆயிரம் கொடுப்பதாகவெல்லாம் சொன்னார். ஆனால் எதையும் செய்யவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.