மதுரை வந்த விஜய்.. தனி விமான செலவு தெரியுமா?

madurai-tvk-cm-vijay-private-flight-cost
மதுரை வந்த விஜய்.. தனி விமான செலவு தெரியுமா?

மதுரையில் நடைபெறும் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இந்த பயணத்திற்காக VT-KJR என்ற பதிவு எண்ணைக் கொண்ட Embraer Legacy 650 business jet பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்ற மதுரைக்கு விஜய் முதன்முறையாக வருகை தந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

2026 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் செயல்படுத்தப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். பின்னர் சட்டசபையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டத்திற்கான டெண்டரில் பல நிறுவனங்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்ற நிலையில், மோதிரங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் தாய்-சேய் நல மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் மதுரை பயணம் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றது. அவர் பயணம் செய்த விமானத்தை FlightRadar24 தளத்தில் ஒரே நேரத்தில் சுமார் 3,900-க்கும் மேற்பட்டோர் கண்காணித்ததாக கூறப்படுகிறது. இதனால், விஜய்யின் விமானப் பயணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவின.

Embraer Legacy 650 ரக விமானத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.135 முதல் ரூ.140 கோடி வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தின் வாடகை கட்டணம் பயண தூரத்தைப் பொறுத்து மாறுபடும் நிலையில், சென்னை முதல் மதுரை போன்ற ஒரு பயணத்திற்கு சுமார் ரூ.14 லட்சம் வரை செலவாகலாம் என கூறப்படுகிறது.

இதனால், “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்ட தொடக்க விழாவுக்காக விஜய்யின் தனி விமானப் பயணம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.