திமுக - பாஜக கள்ளக் கூட்டணி - நாஞ்சில் சம்பத் விமர்சனம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100-வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சியை பிடித்து அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறினார். அண்ணா ஆட்சியை பிடிக்க 18 ஆண்டுகளும், எம்ஜிஆர் ஆட்சியை பிடிக்க 5 ஆண்டுகளும் எடுத்த நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மூன்று ஆண்டுகளுக்குள் ஆட்சியை கைப்பற்றியது மிகப்பெரிய அரசியல் நிகழ்வு என தெரிவித்தார்.
மேலும், ஆந்திராவில் என்.டி.ராமராவ் நிகழ்த்திய அரசியல் மாற்றத்தைப் போல தமிழகத்தில் விஜய் உருவாக்கியுள்ளதாகவும், தற்போது தமிழக அரசியலின் மையப்புள்ளியாக முதல்வர் விஜய் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்பு விஜய்யின் பெயரைச் சொல்லத் தயங்கிய அரசியல் எதிரிகள், இன்று அவரைப் பற்றிப் பேசாமல் அரசியல் நடத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.
திமுக குறித்து கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பல அமைச்சர்களை மக்கள் தோற்கடித்ததாகவும், திமுக தொண்டர்களிடையே கட்சியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டினார்.
காவேரி மற்றும் மேகதாது விவகாரங்களில் முதல்வர் விஜய் எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் முன்வைத்த கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு தீர்மானங்களில் இணைத்தது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக கூறினார்.
அதே நேரத்தில், திமுக மற்றும் பாஜக இடையே மறைமுக நெருக்கம் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் திமுக உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றார். மேலும், இந்திய அரசியலில் அமித் ஷாவை விட அதிக செல்வாக்கு கொண்ட தலைவராக முதல்வர் விஜய் உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தை பாஜக காவிமயமாக்க முயன்றதுபோல், திமுக கருணாநிதி மயமாக்க முயன்றதாகவும், பல திட்டங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டதாகவும் விமர்சித்தார். தற்போதைய தமிழக அரசு மாநில வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறினார்.