முதல்வர் விஜய் வரும்போது உதயநிதியை எழுந்து நிற்க சொல்லுங்க - அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் அவைக்கு வரும் போது எழுந்து நிற்க வேண்டும் என்ற கண்ணியத்தை உங்கள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு கற்றுக் கொடுங்கள் என அமைச்சர் ரமேஷ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் வருவாய் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது சட்டசபையில் கண்ணியம் குறித்து முன்னாள் முதல்வரும், திமுக எம்எல்ஏவுமான ஓபிஎஸ் பேசினார்.
அப்போது அமைச்சர் ரமேஷ், சட்டசபையில் கண்ணியமாக பேச வேண்டும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். அதை முதல் முறை சட்டசபைக்கு உறுப்பினர்களாக வந்துள்ள நாங்கள் கற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் தலைவருக்கு முதலில் அவையின் கண்ணியத்தைக் கற்பிக்க வேண்டும். முதல்வர் விஜய் அவைக்குள் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பதில்லை.
முதல்வருக்கு மரியாதை தர வேண்டும் என்ற கண்ணியத்தை எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லித் தர வேண்டும். 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதல்வர் ஜோசப் விஜய் உள்ளே வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் அவையில் அமர்ந்திருக்கலாமா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் அவைக்குள் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா? கூடாதா? என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கேள்வி எழுப்பினார்.
அப்போது கே.என்.நேரு சட்டென எழுந்து, எங்கள் தலைவர் பெயரை அமைச்சர் உச்சரித்ததற்கு முதல்வர் சரியாக கையாண்டதில் (மன்னிப்பு கேட்டதை) மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் உள்ளே வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றதே இல்லை. அது அது அவரவர் நடைமுறை. இதை பெரிதுப்படுத்த தேவையில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்ணியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என சொல்வது தவறு என கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டசபையில் தொடங்கியது. அப்போது வருவாய் துறை மானியக் கோரிக்கை மீதான உரையில், திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேசினார்.
அவர் பேசுகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் ஒருங்கே பெற்று எந்த ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல் எதையும் துணிவுடன் எதிர்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
தவெக வாக்குறுதிகளில் எதையும் 3 மாதங்களில் நிறைவேற்றவில்லை. திமுகவின் வயது 75. ஒவ்வொரு வரும் போராட்டங்களில் பங்கேற்று, மக்களுக்காக சிறைக்குச் சென்றவர்கள். கொள்கையில் அனைவரிடமும் சிறந்த கட்சி எங்களுடையது.
நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா காலத்திலேயே 4000 ரூபாய் நிவாரணம் வழங்கினோம். தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 கிடைக்கும், வீட்டில் வேலையில்லாமல் இருந்தால் ரூ 4000 கிடைக்கும். சிலிண்டர் கிடைக்கும் என்றார்கள். ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என பேசினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ரஞ்சித் குமார், ஆவேசமாக எழுந்து ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்தும், அதிமுக ஆட்சியில் பெரிதும் விமர்சனமாக முன் வைக்கப்பட்ட ஒரு பார்முலா குறித்தும் ஆவேசமாக பேசினார்.
அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை மறைந்த முன்னாள் முதல்வர் என சொல்லாமல் அப்படியே தலையில் அடித்தாற் போல் பெயரை சொல்லியதும் திமுகவினர் கொந்தளித்துவிட்டார்கள்.
அப்போது ஓபிஎஸ் பேசும் போது, "கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். நீ மன்னிப்பு கேள் என்று உறுப்பினரிடம் சொன்னவர் எம்ஜிஆர். அதே கண்ணியத்தை உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியிருந்தார். கண்ணியம் குறித்து ஓபிஎஸ் பேசியதால் அமைச்சர் ரமேஷ் பேசினார்.