Breaking News :

Thursday, May 09
.

கோவில்களில் நைவேத்தியம் வேறுபாடு ஏன்?


துாய்மையான பக்தி கொண்ட  ஒரு வீட்டில் உணவு அருந்திய சிவபெருமான்

சுவாமிக்கு நைவேத்தியம் படைப்பது பொதுவாக இருந்தாலும், சில ஊர்களில் சுவாமிக்கு படைக்கப்படும் நைவேத்தியம் பொது நியதியை மீறியதாகவே இருக்கும். அது குறித்த வரலாறு இது:

கஞ்சனுார் எனும் திருத்தலத்தில், அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சுரைக் கொடி ஒன்றை நட்டு வளர்த்தார். நின்றாலும், நடந்தாலும், செயல்புரிந்தாலும் சிவபெருமானை மறந்ததில்லை, அந்த அடியார்.

அதனால், நன்கு வளர்ந்து காய்க்கத் துவங்கியது, சுரைக் கொடி. தினமும் அக்காய்களை பறித்து, சிவபெருமானுக்கு படைத்த பின், அதை சமைத்து, அடியார்களுக்கு அன்னம் இடுவார்.

இதன் காரணமாக, அவரை, 'சுரைக் குடையான்' என்றே அழைத்தனர்.

நாளாவட்டத்தில் மெல்ல காய்ப்பு குறைந்து, ஒரே ஒரு காய் மட்டும் இருக்கவே, அது, விதைக்காக இருக்கட்டும் என்று விட்டு விட்டார், சுரைக் குடையான்.

ஒருநாள், சுரைக்குடையான் வெளியே சென்றிருந்த நேரத்தில், அடியவரை போல வேடமிட்டு, அவரது வீட்டிற்கு வந்தார், சிவபெருமான். அவரை வரவேற்று உபசரித்தார் சுரைக்குடையான் மனைவி. அப்போது, அடியவர் உருவில் இருந்த சிவபெருமான், 'அம்மா... எனக்கு சுரைக்காய் என்றால், மிகவும் பிடிக்கும்; கொடியில் உள்ள காயை பறித்து எமக்கு சமைத்துப் போடு...' என்றார்.

'அது, விதைக்காக விடப்பட்டிருக்கிறது; கணவர் வெளியே சென்றிருக்கிறார்; வந்து விடட்டும்...' என்றாள், சுரைக்குடையான் மனைவி.

சிவபெருமான் விடுவாரா... 'அவர் வரும்போது வரட்டும்; சுரைக்காய் விதைக்காக விடப்பட்டதாக சொன்னாயல்லவா, அதில் பாதியை எனக்கு சமைத்துப் போட்டுவிட்டு, மீதியை விதைக்காக வைத்துக் கொள்ளேன்...' என்றார்.

இக்கட்டான நிலையில், வேறு வழியில்லாமல், சுரைக்காயை பறித்து, சிவபெருமான் சொன்னபடியே சமைத்து, உணவிட்டார், சுரைக்குடையான் மனைவி.

உண்டு முடித்து, வாழ்த்தி, விடைபெற்றார், அடியவர் உருவில் இருந்த சிவபெருமான்.
சற்று நேரத்தில் வீடு திரும்பிய சுரைக்குடையான், சுரைக்காய் பாதியாக அரிந்து இருப்பதைப் பார்த்து, மனைவியிடம் கேட்க, 'அடியார் ஒருவர் பசியோடு வந்தார்;

சுரைக்காயை பார்த்து, அதை சமைத்துப் போடுமாறு கேட்டார். நான் விஷயத்தை சொல்லியும், 'பாதி விதைக்காக இருக்கட்டும்; மீதியை சமைத்து போடு...' என்றார். வேறு வழியில்லாமல் அப்படியே செய்தேன்; சாப்பிட்டுப் போய் விட்டார்...' என்று நடந்ததைக் கூறினாள்.

சுரைக்குடையானுக்கு கோபம் தாங்கவில்லை; 'விதைக்காக விடப்பட்டதை அரிந்த உனக்கு தண்டனை கொடுத்தே தீருவேன்...' என்று சொன்னதோடு, தண்டிக்கவும் முற்பட்டார்.

சிவபெருமானை எண்ணி, முறையிட்டுப் புலம்பினார், அவர் மனைவி. அப்போது அசரீரியாக, 'அன்பனே... துாய்மையான பக்தி கொண்ட உனக்காகவே, யாம் அடியாராக வந்து உன் இல்லத்தில் அமுதுண்டோம். உனக்கும், உன் மனைவிக்கும் இனி பிறவியில்லை; யாம் முக்தியை அளித்தோம்...' என்று கூறி அருள் புரிந்தார், சிவபெருமான்.

சுரை என்ற சொல்லுக்கு, பதிமூன்று அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, அமுதம்!

அன்று முதல் கஞ்சனுார் கோவிலில், சுரைக்காய் நைவேத்தியம் செய்யப்படுகிறது. சில கோவில்களில் நைவேத்தியம் வேறுபாடாக இருப்பதற்கான காரணத்தை சொல்லும் இக்கதை, அடியாருக்கு அன்னம் இடுவதன் பெருமையையும், இறைவனின் கருணையையும் வெளிப்படுத்துகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.