Breaking News :

Friday, October 25
.

‘பறித்ததா, கொறித்ததா?’- பெரியவாளின் ஜீவ காருண்யம்


‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால்  ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!

ஒருமுறை, தம் யாத்திரையில் ஒரு கிராமத்தில் பெரியவர் தங்க நேர்ந்தது. அங்கே மடத்துக்கு சொந்தமான நிலத்தில் அந்த வருடம் அமோகமாக கடலை விளைந்திருந்தது.

குத்தகைதாரர் அவ்வளவையும் அறுவடை செய்து விற்றும் விட்டார். பெரியவரின் தரிசனத்தின்போது, மகிழ்வோடு அதை குறிப்பிட்டார். அப்போது அவருக்கு படைப்பதற்காக எல்லாவிதமான பழங்களுடனும், முந்திரி, கற்கண்டு போன்ற பதார்த்தங்களுடனும் பலர் காத்துக் கொண்டிருக்க, அவைகளை ஏறெடுத்தும் பாராமல், அந்த நிலத்தில் நன்கு விளைந்ததாக சொன்ன கடலையில் ஒரு கைப்பிடியை ஆசையாகக் கேட்டார் பெரியவர்.

குத்தகை விவசாயி ஆடிப்போய்விட்டார்.
இப்படிக் கேட்பார் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.
அதேசமயம், அவ்வளவையும் விற்று விட்டதால் கைவசமும் கடலையில்லை. இது என்ன சோதனை என்று அவர் தவித்தாலும், அவருக்குள் ஒரு உபாயம் தோன்றியது.

‘இதோ போய் கொண்டு வருகிறேன்’ என்று ஓடினார். திரும்பி வரும்போது, ஒரு கைப்பிடி என்ன பல கைப்பிடி கடலை அவரிடம்! அதில் ஒன்றை எடுத்து பெரியவர் பார்த்தார். அந்த ஒன்றில் ஒரு ஓரமாய் எலி கொரித்தது போன்ற அறிகுறி.
உடனேயே கேட்டார் பெரியவர்: இது பறிச்சதா? கொரிச்சதா?” என்று…!

‘பறித்ததா, கொறித்ததா?’ என்று பெரியவர் கேட்ட கேள்வியில் இலக்கிய நயம் மட்டுமில்லை. இதயத்தின் நயமும் இருந்தது என்பது போகப்போக விளங்கத் தொடங்கியது. கடலையை முறத்தில் வைத்து எடுத்து வந்த அந்த நபர், பெரியவர் முன் திணறியபடி நின்றார். பின் அந்த கடலையை வயலில் உள்ள எலி வளைகளில் இருந்து எடுத்து வந்ததை மிகுந்த பயத்துடன் கூறினார்.

பெரியவர் முகத்தில் மெல்லிய சலனம்.

ஒரு துறவிக்கு ஆசையே கூடாது. அது அற்ப கடலைப்பயிர் மீதுதான் என்றாலும்,  அதிலும் சில சமயங்களில் இது போல சோதனைகள் ஏற்பட்டு விடுகின்றன.

எலி ஒரு பிராணி! வளைகளில் கடலைகளை சேமித்து வைத்துக் கொண்டு, அறுவடைக்குப் பிறகான நாட்களில், அது அதைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்தாக வேண்டும்.  வயலுக்கு சொந்தக்காரனுக்கு வேண்டுமானால், அது எலியுடைய கள்ளத்தனமாக இருக்கலாம். அதற்காக எலிகளுக்கு பாஷாணம் வைத்து கொல்லவும் முற்படலாம்.

 ஆனால், அன்பே வடிவான துறவி, எலியை ஒரு கள்ளப் பிராணியாகவா கருதுவார்? அதிலும், எலி எனப்படுவது கணபதியாகிய பிள்ளையாரின் வாகனம். அவரை வணங்கும்போது, நம் வணக்கம் எலிக்கும் சேர்த்துத்தான் செல்கிறது. இப்படி, வணங்கவேண்டிய ஒரு ஜீவனின் சேமிப்பில் இருந்து எடுத்து வந்திருந்த கடலையை பெரியவரால் சாப்பிட முடியவில்லை. மாறாக அந்த மனிதரிடம்,இதை எந்த வளையில் இருந்து எடுத்துண்டு வந்தீங்க? அந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்றுதான் கேட்டார். அவரும் ஆமோதித்தார்.

அடுத்த சில நிமிடங்களில், ஒரு முறத்தில் அந்த கடலையோடும் இன்னொரு முறத்தில் வெல்லப் பொரியோடும் அந்த இடத்துக்கு பெரியவரே போய் நின்றதுதான் ஆச்சரியம்.

வளை துவாரத்துக்கு முன்னாலே, அங்கிருந்து எடுத்ததோடு கொண்டு வந்திருந்த வெல்லப் பொரியையும் வைத்து விட்டு, மன உருக்கமுடன் அவர் பிரார்த்தனை செய்யவும், உள்ளிருக்கும் எலிகள் வெளியே தைரியமாய் வந்து, பெரியவர் படைத்த விருந்தை அனுபவிக்கத் தொடங்கின!

சூழ்ந்து நின்ற நிலையில் பார்த்தவர்களுக்கெல்லாம் ஒரே பரவசம். மெய்சிலிர்ப்பு!

‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே.

சொன்னவர்-இந்திரா சௌந்தரராஜன்
நன்றி-பால ஹனுமான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.