Breaking News :

Sunday, October 27
.

திரையில் வஉசியாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகம் சிவாஜி..


சிலம்புச்செல்வர் ம.பொ.சி. எழுதிய கப்பலோட்டிய  தமிழன்  நூலை அடிப்படையாகக் கொண்டு நாடகக் கலைஞர் டி.கே. சண்முகம்,  வ.உ.சி. நாடகத்தை உருவாக்கினார். அதாவது  பாரதி விழாவில் (1952) வ.உ.சி.க்கும் கலெக்டர் வின்ச்சுக்கும் நடந்த  உணர்ச்சிகரமான உரையாடல் நாடக வடிவில் உருவாக்கப்பட்டது. சென்னை கச்சாலீஸ்வர் கோவில் அருகே  நடைபெற்ற முதல் வ.உ.சி. மேடைநாடகம்தான் கப்பலோட்டிய தமிழன் (1961) சினிமா வெளிவருவதற்கு வித்தாக அமைந்தது.
‘தளபதி சிதம்பரனார்’ (1955) என்ற பெயரில் ம.பொ.சி. எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூலை அடிப்படையாகக் கொண்டு சித்தராசன் என்பவர் எழுதிய பிரதி சென்னை வானொலியில் (14.4.1958) நாடகமாக அரங்கேறியது. அந்த  நாடகப் பிரதியை செப்பம் செய்தவர்கள் நாடக கலைஞர் பகவதி, புத்தனேரி சுப்பிரமணியம் மற்றும் சித்தராசன். கப்பலோட்டிய தமிழன் படத்துக்கு கதை வசனம் எழுதியவர் சுதந்தரப் போராட்டத்தில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்ற எஸ்.டி.சுந்தரம்.
தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை  பி.ஆர். பந்துலுவிடம் கப்பலோட்டிய தமிழனை படமாக எடுக்க வலியுறுத்தினார். பின்னர் அது திரைப்படமாக உருவானது. சிவாஜி கணேசன் வ.உ.சி.யாகவும், எஸ்.வி. சுப்பையா பாரதியாகவும், டி.கே. சண்முகம் சுப்பிரமணிய சிவாவாகவும் நடித்து வாழ்ந்திருப்பார்கள்.
சிவாஜி, தன் வாழ்க்கையில் பல நூறு படங்களில் நடித்திருந்தாலும் தனக்கான பெரும் சவாலான கேரக்டர் வ.உ.சி.யாக நடித்தது மட்டுமே என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். கப்பலோட்டிய தமிழன் படத்தின் ஆலோசனைக் குழு தலைவராக ம.பொ.சி. இருந்தார். முதற்கட்டமாக படத்தின் களஆய்வுக்காக ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை, கோவை  சிறைச்சாலை ஆகிய இடங்களுக்குச் சென்று பல தகவல்களைத் திரட்டினார்கள். இவருடன் சிவாஜிகணேசன், இயக்குநர் பந்துலு  ஆகியோரும் சென்றனர்.
தமிழ்நாடு அரசின் முதல் வரிவிலக்கு அளிக்கப்பட்ட படம் இதுவே.  தமிழக மக்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்டாலும், அன்றைய நாளில் படம் தோல்வியைச் சந்தித்தது. இதுவொரு காங்கிரஸ் படம் என்ற பிரசாரத்தாலும், அன்றைய காங்கிரஸ் கட்சியில் இருந்த சூழல் காரணமாகவும் கப்பலோட்டிய தமிழன் படமும்  வ.உ.சி.யின் போராட்டத் துயரவாழ்வைப் போலவே  ஆகிப்போனது.
ஒருமுறை  தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை சிவாஜியுடன் நாகர்கோவிலில் படப் பிடிப்பு முடித்துவரும் வேளையில், கவிமணியைப் பார்த்துவிட்டுப் போகலாமா? என்று சொல்லியுள்ளார். அப்போது தேசிக விநாயகம் பிள்ளையைக் காண சிலருடன் சென்றிருக்கிறார்கள்.
கவிமணி அனைவரையும்  விசாரித்து வரவேற்றவர் சிவாஜியைப் பார்த்து “யார் இந்த தம்பி” என்று கேட்டுள்ளார். அடுத்து “என்ன தொழில் செய்கிறார்”என்று வெளியுலகமே அறியாத கவிமணி  விசாரித்துள்ளார். சின்ன அண்ணாமலைக்கு சற்று அதிர்ச்சி. வந்தவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். சினிமா உலகில் சிவாஜி உச்சகட்டத்தில் இருந்த நேரம். சின்ன அண்ணாமலை ஒருவாறாக நிதானித்து கவிமணியிடம், “பாட்டா (நாஞ்சில் நாட்டில் கவிமணியை அன்புடன் அழைக்கும் சொல்) சிவாஜியைக் காட்டி, “இவர் மிகச்சிறந்த நடிகர்”  என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.   
உடனே கவிமணி, “தப்பாக நினைத்துக்கொள்ளவேண்டாம். நான் சினிமாவே  பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார். ஆனால், சிவாஜிக்கு பெரும் மனக் குறை. நாம் உலகமே போற்றும் புகழ்பெற்ற நடிகர் என்று நினைக்கிறோம். இன்னும் இந்த மாதிரி பெரிய மனிதர்களிடையே அறியப்படாமல் இருக்கிறோமே. கவிமணி போன்ற பெரிய மனிதர்கள் விரும்பும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையோ என்று மிகவும் மன வருத்தமடைந்துள்ளார் சிவாஜி.
ஒருமுறை சிலோன் சென்றிருந்த சிவாஜியிடம் அப்துல்ஹமீது பேட்டி கண்டார். நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் சவாலான கதாபாத்திரம் எது? எனக் கேட்க,  “வ.உ.சி.யாக நடித்ததுதான் என் வாழ்வில் சவாலான கதாபாத்திரம்” என்றார் சிவாஜி.  நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பெரியவர் வ.உ.சியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதனை மக்கள் நம்பவேண்டுமல்லவா என்றும் பேட்டியில் குறிப்பிட்டாராம்.  
சிவாஜி, தன் வழக்கமான உடல்வாகு கொண்ட கம்பீரத்தை வஉசி கதாபாத்திரத்திற்காக எந்தவித மிகை நடிப்பின்றி அடக்கிவாசித்திருப்பார். “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி செப்பித் திரிவாரடி கிளியே…”  என்ற பாரதியின் பாடல் காட்சி வரும். வஉசி வணங்குவார். அவர்கள் கண்டுகொள்ளாமல் போவார்கள்.  அந்த இடத்தில் வ.உ.சி.யை கண்முன்னால் அப்படியே கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் சிவாஜி. 
தாய் நாட்டுக்காகப் போராடிய வ.உ.சி.யின் முழு உழைப்பையும் அங்கீகரிக்காத  நிலையையும், வறுமைநிலையின் சுயகழிவிரக்கத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து அசத்தலான நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார்.  வ.உ.சியின் உண்மையான  பெரிய மனிதத்தன்மையை நன்றாக உள்வாங்கி, வெகு அடக்கமான உடல்மொழியால் நடிப்பில் காவியமாக மாற்றினார். பெரும்பாலான காட்சிகளில்  தன் தலை மற்றும் தோள் பகுதியை மட்டுமே இணைக்கவைத்து மிகையற்ற நடிப்பால் பார்வையாளர்களிடம் ஆச்சரியங்களை உருவாக்கினார்.
கப்பலோட்டிய தமிழன் வெளியான பிறகு வ.உ.சி.யின் மகன், “எங்க அய்யாவை நேரில் பார்த்தேன்” என்றாராம். அந்த தருணத்தில்தான் சிவாஜியின் மனசுக்குள்ளிருந்த  ஓர் அச்சம் கலந்த படபடப்பு முடிவுக்கு வந்ததாம். ஏனெனில் வாழும் காலத்தில் உள்ள பெரிய மனிதரை திரையில் வெளிப்படுத்தும்போது, அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பார்க்கும்போது ஓர் உண்மைத்தன்மை வரவேண்டுமல்லவா? அதற்காகவே  நான் மிகவும் மெனக்கெட்டு நடித்த சவால் நிறைந்த படமாக இருந்தது என ஒரு  பேட்டியில் நினைவுகூர்ந்தார் சிவாஜி.
வீரபாண்டிய கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யையும்  படமாக்கத் திட்டமிட்டவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன். ஆனால் செயலில் வென்று முடித்தவர் இயக்குநரும் தயாரிப்பாளருமான பி.ஆர். பந்துலு. வணிகரீதியில்  சோதனையாக கருதப்பட்டு வசதிபடைத்த பலரும் செய்யத் துணியாத சரித்திரப் படங்களை எடுக்கத் துணிந்தவர். image
படம் வெளிவந்த நேரத்தில் பி.ஆர். பந்துலு, சென்னை தாம்பரத்தில் ஒரு தியேட்டருக்கு தோழர் ஜீவாவை குடும்பத்தோடு அழைத்துச்சென்றிருக்கிறார். கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஜீவா, துக்கம் தாளாமல் தேம்பித் தேம்பி  அழுதிருக்கிறார்.  உடனிருந்த ஜீவா மகள் டாக்டர் உமாதேவி,  “அப்பா இப்படி அழுது நான் பார்த்ததில்லை”என்று நெகிழ்ந்துள்ளார். 1963, டிசம்பர் ‘தாமரை’ இதழில், கப்பலோட்டிய தமிழன் படம் பற்றி தலையங்கமும் எழுதியுள்ளார் ஜீவா. அதில் படத்திற்காக வரிவிலக்கு அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
தமிழர்களின் மனங்களில் இந்த அளவுக்காவது வஉசி நிற்கிறார் என்றால், அதற்கு வித்திட்டவர் ம.பொ.சி. தண்ணீர் பாய்ச்சியவர் பி.ஆர்.பந்துலு. மரமாக்கியவர் சிவாஜி கணேசன். இமைகளையும் பேசவைத்த நடிகர் திலகத்தின் நினைவுநாளில் தமிழ்க் கலைவெளியை அழகும் ஆழமும் மிக்க கலைப்படைப்புகளால் செழிப்பாக்கிய மாபெரும் கலைஞர்களை நாம் நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்வோம்.
நன்றி..Natesan natesan..

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.