Breaking News :

Friday, April 26
.

தியானம் செய்தால் துன்பம் தீருமா ?!!


துன்பம் என்பது நமக்கு மேலாக இருக்கும் அப்பாற்பட்ட சக்தியை தெரிந்து கொள்வதற்காக, வாழ்க்கையில் இறைவன் தரும் வாய்ப்பாகும்.  இன்பத்தைக் காட்டிலும் துன்பமானது,  இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள சந்தர்ப்பமாக அமைகிறது.

 உதாரணமாக,  இளமை காலத்தில் தன் வாழ்வில் முன்னேறிய ஒருவர், தன் திறமையினால்தான் வெற்றி அடைந்ததாக  நினைத்துக் கொள்கிறார்.  பிறகு காலப்போக்கில் அவர் வாழ்வில் சரிவு வரும்பொழுது, அதே திறமையைக்கொண்டு வழக்கத்தின்படி தன்னுடைய முயற்சியால் அத்துன்பத்தை மாற்றி சரி செய்ய முடியும் என்று நம்புகிறார்.  இது அவருடைய அகங்காரத்தின் மீதான நம்பிக்கை ஆகும்.

துன்பம் என்பது நமக்கு அப்பாற்பட்டு இயங்கும் சக்தியின் இயக்கத்தை உணராமல் நமது முயற்சியால்  அனைத்தையும் மாற்றி விட முடியும் என்று தவறான புரிதலால் வாழ்வில் ஏற்படும் போராட்டம் ஆகும்.

நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றின் தீர்மானமே,  அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணமாகும்.  இதில் நம்முடைய முயற்சி  எதுவும் இல்லை என்று புரிந்து கொள்ளாமல், உடனடியாக அந்தத் துன்பத்திலிருந்து தப்பி ஓட நினைக்கிறோம்.

துன்பத்தை பரிகாரம், ஜோதிடம், தாந்ரீகம்  போன்ற வழிகளில்  மாற்ற முடியும் என்று நம்புகின்றோம்.   துன்பத்தின் மூலகாரணம்  ஆராயாமல், துன்பம் போனால் போதும் என்று  போலியான நபர்களை நம்பி நம்மிடம் உள்ள பெரும்பான்மையான பணத்தை செலவு செய்து ஏமாறுகிறோம். 

அதிக செலவு செய்தும் துன்பம் மாறவில்லை என்பதை புரிந்து கொள்ளாமல், மீண்டும் மீண்டும் துன்பத்தை போக்குவதற்காக, பலவழிகளைத் தேடி நிம்மதி இழந்தும் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். ஆனால் துன்பம் மட்டும் தீருவதில்லை.

உண்மையில் தியானம்  துன்பத்தை போக்காது.   துன்பம் எதனால் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ளக் கூடிய அறிவை கொடுக்குமே தவிர, தியானம் எந்த வகையிலும் துன்பத்தை போக்காது.

 தியானத்தின் விளைவாக நன்மையோ அல்லது தீமையோ எதுவும் கிடைக்காது.  மாறாக தியானத்தின் அமைதியில் கூர்மையான அறிவும், தெளிவான பார்வையும் கிடைக்கும்.  இந்த தெளிவை  பயன்படுத்தி சிக்கல்களை தீர்க்கும் நுட்பத்தை அறிந்து கொள்ள முடியும்.

 தியானத்தின் மூலம் துன்பத்தை உணர்ந்து அதை போக்கிக்கொள்ள முடியும். தியானம் செய்வதால் துன்பத்திற்கான  பிரச்சினைகளை ஆராய்ந்து அது எதனால் வந்தது என்பதை உணர்ந்து கவனிக்கும் போது,  நாம் மேற்கொண்டு செய்யவேண்டிய  செயல்களைத் திருத்திக் கொள்ள முடியும்.  

பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய அறிவை தியானமானது கொடுக்கிறது.  அப்பொழுது துன்பமானது  நம்மிடமிருந்து விலகத் தொடங்குகிறது. புதிதாக இனிவரும் துன்பம்கூட தியானத்தால் விலகிவிடும். 

 தியானத்தால் நேரடியாக துன்பத்தை போக்க முடியாது.தியானத்தில் அமைதியாக கவனிப்பதால் எல்லாவற்றையும் நமக்கு சாதகமாக மாற்றியமைக்கும் நுட்பம் கைகூடும்.  இதன் பயனாக துன்பமும் இன்பமாக மாறிவிடும்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.