Breaking News :

Saturday, April 27
.

'ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்'- தமிழக அரசு அறிவிப்பு!


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பதிவான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (21/05/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடியில் 22/05/2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14/05/2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.


இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

 1.இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திருமபப் பெறப்படும்.

2. 22/05/2018 அன்று நடந்த சம்பவத்திற்கு முன்னர் இந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

3. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்து விட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும்.

4. ஆணையம் அளித்துள்ளப் பரிந்துரையின் அடிப்படையில் இப்போராட்டத்தின்போது தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.