Breaking News :

Wednesday, May 08
.

ஆன்மீக கதைகள்: கஷ்ட காலங்களில் தைரியம் தேவை


கஷ்ட காலங்களில் தைரியத்தை இழக்காதீர்கள். 

 

உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்.

 

ஒரு மனிதன், ஒரு நெடும்பயணமாக 

வாழ்க்கைப் பயணம் மேற்கொண்டிருந்தான். 

 

நீண்ட தூரம் சென்ற பின் தான் கவனித்தான்.... 

 

அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி 

கால் தடங்கள்!

 

அவனுக்கு ஆச்சரியம்!

 

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. 

 

சத்தமாகக் கேட்டான்,

"என்னுடன் வருவது யார்?"

 

"நான் கடவுள்!" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

 

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்!' பயணம் தொடர்ந்தது.

 

அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான்!

 

சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. 

 

சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. 

 

துன்பமும் துக்கமும் அதிகமாயின. 

 

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.

 

'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா?!' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான். 

 

அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன!

 

அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். 

 

அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. 

 

அவனுக்கு அழுகையாய் வந்தது. 

 

கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்......,

 

"கடவுளே, என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள். 

 

துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே! இது நியாயமா?"

 

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் 

உன்னுடையவை அல்ல. என்னுடையவை. 

 

இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். 

 

அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை.

 

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

 

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். 

 

அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதில்லை. 

 

கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை.

 

மனிதனுக்கு சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது, இருக்கவே இருக்கிறார் கடவுள், அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள!

 

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். 

 

எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

 

அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. 

 

கடவுள் கணக்கு சொல்வதில்லை. 

 

எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

 

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது. 

 

எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. 

 

அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. 

 

நம் முந்தைய செயல்களின் விளைவுகள். 

 

நாமே வரவழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.

 

இனி கஷ்ட காலங்கள் வரும் போது கடவுளை திட்டாதீர்கள். 

 

அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள். 

 

வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். 

 

முடிவு கண்டிப்பாக இனிமையாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.