அழகு - சிறுகதை

azhagu-short-story
அழகு - சிறுகதை

இன்னும் ரெண்டுநாளில நடக்கப்போற அந்தப்போட்டிய நெனச்சி ஒறக்கமே வரல அவளுக்கு, இந்தத்தடவை எப்புடியாவது போனதடவ தன்ன செயிச்ச அந்தப் பொண்ணத் தோக்கடிச்சி முதல் பரிசு வாங்கியே ஆகனும். இல்லாட்டினா மனசு ஆறாதுன்னு நெனச்சி அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிக்கிட்டு இருந்தா.

ஏன்னா அந்தப்போட்டியே வித்யாசமான போட்டி. மத்த எடங்கள்ல பெண்களுக்கு வைக்கிற அழகுப்போட்டிமாதிரி இல்ல அது. போட்டிக்கு வீட்டில் இருந்தே தயாராகி வரணும் அங்கதான் போட்டி என்ன என்று அறிவிக்கப்படும். அப்படி அறிவித்தபின் 15 நிமிடங்களே கொடுக்கப்படும் . அப்போது அவர்கள் செய்யும் அலங்காரம் லைவாக ரெக்கார்டு செய்யப்படும். அப்படியே போட்டியும் தொடரும் இது எல்லாத்தையும் நடுவர்கள் மூன்றுபேர் பெண்கள்தான் லைவா பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதில் சிலரை அழைத்து சில கேள்விகள் கேட்பார்கள் அதன் பின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்.

போனதடவை அவர்கள் சொன்ன போட்டி பாதங்கள். அந்தப்போட்டியை அறிவித்த வுடன் போட்டியில் கலந்துகொள்ள விரும்பு பவர்களை த்தனியாக ஒரு அறையில் பிரித்து அவர்களுக்கு ஒரு உதவி யாளரை யும்சேர்த்து ஓர் அறையில் வைத்து நேரம் கொடுக்கப் பட்டது... அந்தக்குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் தங்களின் பாதங்களை அலங்காரம் செய்ய அனுமதித்தார்கள். அந்த நேரம் முடிந்தவுடன் அவர்களில் சிலரை மேடைக்கு அழைத்து சில கேள்விகள் கேட்டார்கள் பின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். அந்தப்போட்டியில் இவளுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது.

முதல் பரிசு பெற்ற பெண் கேள்விபதிலில் இவளை முந்திவிட்டாள்
இந்தமுறை அவளை எப்படியாவது ஜெயித்தே ஆகனும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தயாராகிக்கொண்டிருந்தாள். அப்போது அவளின்மாமியார் 65 வயசு இருக்கும். அவள் சொன்னாள் என்னையும் அழைத்துக்கொண்டு போ உனக்கு உதவியாக இருப்பேன் என்றாள்.

இவளுக்கு யோசனையாக இருந்தது, அழகுப்போடியில் 65 வயசுக்கிழவிக்கி என்ன வேலை இருக்கப்போகிறது. சென்றமுறை போலவே அந்த பியூட்டிசனைப்பயன் படுத்தினாலே ஜெயிக்கமுடியும் என்பதில் உறுதியாக இருந்தாள். அதனால் அந்த பியூட்டிசனுக்கு போன் செய்தாள். அவளும் அங்கே நேரடியாக வந்து விடுவதாகச் சொன்னாள். சரி என்று சொல்லிவிட்டாள்

நிகழ்ச்சியன்று கிளம்பும்போது இவளின் மாமியார் தானும் வருவதாகச்சொன்னார். இவளுக்கோ விருப்பமில்லை. அப்போது தான் அங்கு வருவதாகவும் தொந்தரவு செய்யமாட்டேன் என்றும் கெஞ்சியதாலும் அவளின் கணவன் கையில் காலில் விழுந்து கெஞ்சி நீ அழைத்துப்போகாவிட்டால் அம்மா கோவித்துக்கொள்வார்கள் பாவம் இதுபோன்று விழாக்கள் எல்லாம் பார்த்ததில்லை அவள் மிகவும் ஏழ்மையிலே வாழ்க்கையின் பெரும்பகுதியைக்கழித்தவர் என்று சொன்னதாலும் போனால் போகுதென்று அழைத்துசென்றாள்.

அன்று அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லோரும் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் சென்ற முறை ஜெயித்த பெண் இந்த முறையும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தாள் அவளும் இவள் என்ன செய்யப்போகிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

போட்டி நேரமும் வந்துவிட்டது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களை தனி அறைக்குச்செல்ல அறிவிப்பும் வந்தது. ஆனால் அன்று அங்கு வருவதாகச்சொன்ன பியூட்டிசன் வரவில்லை. போன் செய்து கேட்டபோது அவள் வரும் வழியில் ஒரு விபத்து என்றும் கையில் அடிபட்டு காயமாகி மருத்து வமனை சென்று கொண்டி ருப்பதாக வும் வேறு ஏற்பாடு செய்துகொள்ளவும் என்றும் வருந்துவதாகவும் சொன்னாள்.
இவளுக்குப்படபப்பு அதிகமாகியது. யாரை இந்த நேரத்தில் அழைப்பது என்று தெரியவில்லை. மேக்கப் மெட்டீரியல் இவளிடம் கொஞ்சம் இருந்தது. ஆனாலும் யார் மேக்கப் செய்வது என்று கலங்கிப்போனாள். ஒரு சிலரிடம் கேட்டபோது அவர்களும் போட்டியிலிருந்ததால் மறுத்தார்கள்

அப்போது நேரம் முடியும் தருவாயில் இருந்தது இவளின்மாமியார் வேண்ணா நான் வந்து போட்டுவிடவா என்று கேட்டாள். கோபம் கோபமாக வந்தாலும் வேறு யாரும் கிடைக்காததாலும் வேறு வழியே இல்லாத தாலும் வந்து தொலை என்று நாக்கு நுனிவரை வந்த வார்த்தையை கட்டுப்படுத்திக்கொண்டு உடன் அழைத்துச்சென்றாள்
இந்தமுறை போட்டி இரு கரங்களை அழகுபடுத்துவது என்று அறிவிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. இவளின் மாமியார் நான் கைகளில் மெகந்திபோடட்டுமா என்று கேட்டாள். சரி நான் சொல்லுவதுபோல் செய்யுங்கள் என்று சொன்னாள் இவள் அதற்கு அவளின் மாமியார் எனக்கு ஒரு ஐடியா இருக்கின்றது அதுபோல் செய்யலாமா என்று கேட்டபோது இவள் அதெற்கெல்லாம் நேரமில்லை நான் சொல்லுவது போலச் செய்தால் போதும் என்று சொன்னதால் வேறுவழியின்றி மெகந்தி அவள் சொன்னது போல் போடத்தொடங்கினாள்...

லைவ் போய்க்கொண்டிருந்தது ஜூம் கேமிரா பங்கேற்பாளர்களைச்சுற்றிச் சுற்றி க் கவரேஜில் இருந்தது. கிட்டத்தட்ட நேரம் முடியும்தருவாய் சென்றமுறை முதல்பரிசு வாங்கிய பெண் கூடவந்தவர் இவளை லேசாக இடித்தபடி செல்ல இவள் தடுமாறி கீழே விழும்போது கையூண்டியதால் போட்ட மெகந்தி பாழானது.. கிட்டத்தட்ட இவளுக்கு அழுகையே வந்துவிட்டது... என்னசெயவதென்று தெரியவில்லை. அந்தமுதல் பரிசு வாங்கிய பெண் தூரத்தில் இவளைக்கேலிசெய்வதுபோல்சிரிப்பது தெரிந்தது... இவள் கண்களில் கண்ணீர் ஊற்றியது.... தலையில் கைவைத்து அமர்ந்த போது இவளின்மாமியார் சொன்னால் எப்படியும் செய்தது வீணாகி விட்டது எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது அதைசெய்யவா எனக்கேட்டபோது வேறு வழியுமில்லை நேரமும் இல்லை. சரி என ஒத்துக்கொண்டாள்

அப்போது அவள் மாமியார் செய்த வேலை யைப்பார்த்தவுடன் அவளை அடிக்கும் அளவுக்கோபம் வந்துவிட்டது . இருந்தாலும் வேறு வழியில்லை நேரம் முடிந்துவிட்டது அவள் அதைச்செய்து முடித்தபோது...
இப்போது அங்கிருக்கும் அனைவரின் கரங்களையும் காண்பிக்குமாறு சொல்லி கேமரா சுத்திவந்து படம் எடுத்தது.. அதன் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேர் பெயர் அறிவிக்க இன்னும் 10 நிமிடங்களாகும் என்று அறிவிக்கப்ப்ட்டது....இவள் சோர்ந்துபோய் இருந்தாள்....

அப்போது ஒவ்வொரு பேயராக அறிவிக்கப் பட்டது வழக்கம்போல சென்றமுறை முதல் பரிசு வாங்கிய பெண் பெயர் முதலாவதாக அழைக்கப்பட்டது. அப்போது இந்த முறை அவருக்கு மேக்கப் போட்டவரும் அழைக்கப் பட்டார். கேள்விகள் மேக்கப் போட்டவரிடமே கேட்கப்பட்டது. என்ன டிசைன் போடப்பட்டது. அதற்கான மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டது என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

அவரும் அழகாகப்பதில் சொல்ல அரங்கம் அதிர்ந்தது. அடுத்து இரண்டாவதாக சென்றமுறை இவள் அழைப்பட்டாள் ஆனால் இந்தமுறை வேறு யாரையோ அழைத்தார்கள் இப்படியாக ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தார்கள். இவளுக்கு நம்பிக்கை முதலிலேயே இல்லை ஆகையால் சோர்ந்து வீட்டுக்குச்சென்று விடுவது என்று முடி வெடுத்து மாமியாரையும்அழைத்துக்கொண்டு வெளியே சென்றுகொண்டிருந்தாள்... அப்போது 9 வது போட்டியாளர் மேடையில் இருந்தார்.

இவள் கண்ணீரைத்துடைத்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தபோது மேடையில் இருந்து 10 வது போட்டியாளராக இவள் பெயர் அறிவிக்கப்பட்டது. இவளால் நம்ப முடியவில்லை அப்போதும் பெரிதாக நம்பிக்கை இல்லை. மாமியாரை அழைத்துக்கொண்டு மேடை ஏறினாள் அப்போது இவள் கரங்களில் மாமியார் செய்த ஒப்பனை திரையில் காட்டப்பட்டது

அதைப்பார்த்து எல்லோரும் சிரித்தனர். ஏனென்றால் அந்த ஒப்பனை இரண்டு கரங்களிலும்முழுதாக கருப்பு வண்ணம் அடிக்கப்பட்டு அதில் இரண்டு கரங்களிலும் கீற்றாக சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டிருந்தது
அதைக்கண்ட பெண்கள் கைதட்டிச் சிரித்தார்கள். இவளுக்கே அசிங்கமாக இருந்தது தலையைக் கவிழ்ந்து கொண்டாள் அப்போது மேக்கப் செய்தவர் என்ற முறையில் இவளின் மாமியார் அதை விளக்குமாறு அழைக்கப்பட்டார்.. இவள் நெழிந்து கொண்டிருந்தாள் இது மேக்கப் இதுக்கு விளக்கம் வேற என்ற எண்ணமோடியது அவள் மனதில் அப்போது மாமியார் பேச ஆரம்பித்தார்.

இது இன்று போட்ட டிசைன் அல்ல. பத்து வருடம் முன் வரை தினம் எனது கரங்களில் காலம் போட்ட டிசைன் தானிது. அப்போது நான் பல வீடுகளில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தேன். எனது கரங்களில் பாத்திரம் தேய்த்து தேய்த்து ரேகைகள் மறைந்து பெர்மணண்ட் ஆக கரி ஒட்டிக்கொண்டுவிட்டது அதனால் எப்போதும் என் கரங்கள் கரிஅப்பியே கிடக்கும்.

ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும்போது பாத்திரத்தில் இருந்த பிசிறு கைகளைக்கிழித்து விட்டது அப்போது கரிஅப்பிய கரங்களில் ரத்தம் கீற்றாக கசிந்துகொண்டிருந்தது... அதை என்னால்துடைக்க முடியவில்லை அப்படியே பாத்திரங்களைக்கழுவி முடித்தேன் வலியுடன் அந்த வேதனை ஓவியமாக என் மனதில் பதிந்து விட்டது அதுதான் இன்று அவசரத்துக்கு என்னால் வரையமுடிந்தது என்னை மன்னிக்கவும் சரியாக மெகந்திபோடாதற்கு என்று சொல்லிவிட்டு கண்ணீர்வழிய நின்றாள்

அப்போது அரங்கில் ஒருமெளனம் நிலவியது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து கண்ணீருடன் கைதட்ட ஆரம்பிக்க அவரைப்பார்த்து ஒவ்வொருவராக எழுந்து நின்று பிறகு மொத்த அரங்கும் நடுவர்களும் எழுந்து நின்று கண்ணீர்வழியக் கைதட்ட அரங்கம் அதிர்ந்தது......

இவளாலும் கண்ணீரை அடக்கமுடியாமல் மாமியாரைக கட்டிப்பிடித்துக்கொண்டாள்
அப்போது ரிசல்ட் அறிவிக்க வந்தவர் மூன்றாவது மட்டும் இரண்டாவது பரிசுகளை அறிவித்துவிட்டு த்தொடர்ந்தார். ஆயிரம் விதமான அழகுகளைப்பார்த்திருக்கிறோம் அவை எல்லாம் வேறு வேலை செய்யாமல் அழுகுபடுத்துவதையே முழுதாகச் செய்யப்பட்ட அழகூட்டல் கள் ஆனால் தன்வயிற்றையும் பிள்ளைகளின் வயிற்றையும் நிரப்பவேலை செய்யும்போது தானாக அப்பிக்கொள்ளும் கரியும் அதனூடே கசிந்த உதிரத்தின் வலியும் உன்னதமானது அது என்னவோ சொல்கிறது நமக்கு நெஞ்சை உறுத்துகிறது என்றுசொல்லிக்கொண்டே கண்ணீரையும் துடைத்துக்கொண்டு அந்த கரி ஓவியத்தை முதலாவது வெற்றியாளராக அறிவித்துவிட்டு இவளின் மாமியாரின் கரங்களைக் கண்களில் ஒற்றிக்கொண்ட போது அரங்கம் அதிர்ந்தது கைதட்டல் களினால் விழிகள் நிறைந்தன கண்ணீரால்....

அ.முத்துவிஜயன்