அம்மா மனசு - சிறுகதை

amma-manasu-short-story
அம்மா மனசு - சிறுகதை

மயன் ரொம்பநாளா உள்ளூருல இல்லவெளியூர்ல பொழப்புக்காக போயிருந்தான். அவனுக்கும் ஒரு ஆசை இருந்துச்சு அம்மா கூடவந்து இருந்தா நல்லா இருக்குமேன்னு. ஆனா வெளியூருல இருந்த வரை அது முடியாமப் போச்சு.. இப்ப உள்ளூருல வீடுகட்டி குடித்தனமும் வந்துட்டான். அந்த வீட்டுல அம்மாவுக்காகவேஎல்லா வசதியும் இருக்குறமாதிரி கக்கூஸ் படுக்கை எல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சிட்டு வாம்மா வந்து அங்க இருக்கலாமுன்னு கூப்புட்டான்.

அம்மாவுக்கும் ஆசைதான் மயன் கூட இருக்கனுமுன்னு. சரிடா வாறேன்னு சொல்லி மாத்திர மருந்து சேலை துணிமணி எல்லாம் எடுத்துக்கிட்டு அவன் கூட கெளம்பி வந்துச்சு. வாரப்பையே சொன்னான் அம்மா ஒனக்காக எல்லா ஏற்பாடும் செஞ்சி வைச்சிருக்கேன் என் சம்சாரம் ஒன்ன பொத்தி பொத்திப்பாப்பா நீ கவலையில்லாம இருக்கலாம் . என்ன வேணுமானாலும் சொல்லு நான் வாங்கித் தாறேன் அதே மாதிரி ஒனக்கு ஏத்தமாதிரி சமைச்சித்தர சொல்லிருக்கேன் அவ செஞ்சி குடுப்பான்னு சொல்லி க்கூட்டியாதான்

சொன்ன மாதிரியே தான் எல்லாம் வசதியாத்தேன் இருந்துச்சு. கக்கூசு பெட் தனி ரூம் பக்கத்துலயே மருமக கவனிச்சிக்க ஏற்பாடும் செஞ்சிருந்தான் சோறு வெஞ்சனம் கொழம்பு எல்லாம் என்ன வேணுமோ அதுமாதிரி சுகருக்கும் பிரசருக்கும் பிரச்சனை வராதமாதிரி சமைச்சிக் குடுக்கச் சொல்லி ருந்தான்.

டி,வி யும் பிடிக்கிற மாதிரி சேனல் நாடக மெல்லாம் பாக்கா வைச்சிருந்தான். அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். மயனும் மருமகளும் கவனிச்சிக்கிட்டதுல.

தெனம் அம்மாகிட்ட விசாரிப்பான். என்னம்மா சவுகரியமா இருக்குதா. என்னா கொறையின்னாலும் சொல்லு. நான் சரிபண்ணுறேன். புடிக்கிறத்ச்சொல்லு செஞ்சி குடுக்கச்சொல்றேன்னு . அதுக்கு அம்மா சொல்லும் என்ன மகாராணி மாதிரி வைச்சிருக்க எனக்கென்னடா கொறச்சல் நல்லா இருக்கேன். இது மாதிரி பிள்ளை யும் மருமகளும் கெடைக்க குடுத்து வைச்சி ருக்கனும்னு சொல்லும் .

இவனுக்கும் சந்தோசமா இருக்கும். சரிம்மா நான் வெளிய வேலையா போய்ட்டு வாறேன்னு சொல்லிட்டுக்கெளம்புவான்...
அம்மா சாயங்காலமா வெளிய வந்து வாசல்ல ஒக்காந்து வேடிக்கபாக்கும். ஆனா என்ன வேடிக்கை பாக்க ஒன்னுமில்ல. அது புதுசா கட்டுன வீடு பக்கத்துல ஒன்னுரெண்டு வீடுகதான் அதுனால ஆள் நடமாட்டம் அம்புட்டா கெடையாது. பகல்ல கொஞ்சபேரு போவாக வருவாக. அப்புறம் யாவாரிகதான் காய் கறி பழம் பாத்திரபண்டம் விக்கிறவுக வருவாக.. பெருசா ஒன்னும் ஆள் நடமாட்டம் இல்ல...அம்மா ஒக்காந்து தனியாப்பாத்துட்டு அப்புறம் உள்ளாற வந்திரும். ஆனா அம்மாவ வருத்தமா பாக்கல ஆன ஏதோ கொறன்றமாதிரியே இருந்துச்சு என்னான்னு கேட்டா ஒன்னுமில்ல நல்லாத்தேன்

இருக்குறேன்னு சிரிக்கும் ஆனா அந்த சிரிப்புல உசிர் இல்ல. மனசு நெறஞ்சசந்தோசமா அது இல்ல. அது ஏன்னு இவனுக்கும் புரியல... கொளம்பிக்கிட்டே கெடந்தான். சம்சாரத்துக்கிட்ட விசாரிச்சும்பாத்தான் . அம்மா வருத்தமா இல்ல ஆனா ரொம்ப சந்தோசமாவும் இல்ல ஒனக்குத்தெரியுதான்னு கேட்டான். அவ சொன்னா ஆமா ஆனா என்னான்னு தெரியலன்னா...
வந்து ஒரு வாரத்துல அம்மா மகனக்கூப்புட்டு நான் அங்கயே போறேன்.. நு சொன்னவன்ன அவனுக்கு திடுக்குன்னு ஆயிப்போச்சு. அப்ப அம்மாகிட்டக்கேட்டான். ஏம்மா நல்லாத்தான கவனிச்சிக்கிறோம் ஒனக்கு இங்குனக்குள்ள என்னா கொறை . எல்லா வசதியும் இருக்கு வேளைக்கி சாப்பாடு டி.வி பேச்சுத் தொணைக் கி மருமக என்னா பிரச்சனை நா இல்லாத நேரத்துல மருமக ஏதும் ஒனக்குப்பிடிக்காதத செஞ்சிபுட்டாளா சண்டசச்சரவான்னு கவலையாக்கேட்டான்
அதுக்கு அம்மா சொல்லிச்சி. அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. மருமக தங்கம் கொற சொல்லமுடியாது. நல்லா கவனிச்சிக்கிருச்சி ஆனா ஒரு விசயத்த நீதான் கவனிக்கல . எனக்கு வயசானதுபோல உன் பொண்டாட்டிக் கும் வயசாயிடுச்சு. அந்தப் பிள்ளைக்கும் சுகர் எல்லாம் இருக்குது. பாவம் அதுக்கே முடியல அதோட என்னையும் காலையில எந்திரிச்சி படுக்குறவரைக்கும் கவனிக்க வேண்டியதிருக்கு.

எனக்கு பிரஸர் இருக்குறதுனால எனக்காகச் சமைக்க வேண்டியிருக்குறதால நல்லத பொல்லதை சமைச்சி சாப்புட முடியிறத்தில்ல. தனியா சமைச்சி சாப்புட வழியில்ல. பாவம் அது மெல்லமாட்டாம முழுங்கமாட்டாம சொல்லமுடியாம அவஸத்தைப்படுது . அது என்னய சங்கடப்படுத்துது. அதான் செரமம் குடுக்க வேணாமுன்னு பாக்குறேன்னு சொல்லிச்சி...
ஆனா அது அவனுக்கு ஏத்துகிறமாதிரி இல்ல இருந்தாலும் அதை கண்டுபிடிக்கனும்னு தீர்மானம் பண்ணிக்கிட்டான். அப்ப சரிம்மா உன் விருப்பப்படியே அங்குனக்குள்ள கொண்டுபோய் விடுறேன்ன்னு சொல்லி ஒரு நாஅங்க கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டான் .

ரெண்டுநா கழிச்சி எதேச்சையா அம்மா இருக்குற எடத்துக்குப்போனான். அப்ப அம்மா அம்மாவோட வயசுள்ள ஒரு பாட்டிக்கூடப் பேசிக்கிட்டு இருந்துச்சு. அப்பப்பாத்தா ரெண்டு பேர் மொகத்துலயும் அம்புட்டு சந்தோசத்தை பாக்க முடிஞ்சது. அது பேச இது சிரிக்க இதுபேச அது சிரிக்க ஒரே கொண்டாட்டமா இருந்துச்சு. அப்பத்தான் ஒன்னு புரிஞ்சது...
அதுக்கேத்தமாதிரி அங்க இருந்த ஒருத்தர் சொன்னாரு இவுக ரெண்டுபேரும் தான் பிரண்டு. இவுக வயசுல இருந்தவுக எல்லாம் போய் சேந்தாச்சு. அந்த வயசுல இவுக ரெண்டுபேரும்தான் இருக்காக. என்னாதான் நாம பேசுனாலும் வேற யாரு பேசுனாலும் அந்தவயசுக்குண்டான பேச்சுக அவுகதான் பேசிக்க முடியும். அது அந்த ஜெனரேசன். அவங்ககூட பேசுறதுல வார சந்தோசம் மத்தவங்க கூடப்பேசுறதுல கெடைக்காது..

நானும் இவங்கமாத்திரமில்ல ரொம்ப வயசானவுககூட பேச இப்ப ஆளுக இல்ல. இருக்குறவுகளுக்குப்பேச நேரமுமில்ல. ஆனா இவுக ஏங்குறது அதுக்குத்தான். அவுகளுக்கு பேச்சுத்தொணைக்கி ஆள் கெடைச்சிட்டா அவுகளுக்கு பசிக்காது. ஒடம்புல இருக்குற நோவு தெரியாது... ஒலகத்தையே மறந்து பேசிக்கிட்டு இருப்பாக..... அதுதான் அவங்களுக்கு சொர்க்கத்தை விட மேலானாது அது மத்தவங்களுக்குப்புரியாதுன்னார்...

அவனுக்கும் புரிய ஆரம்பிச்சது. தன்னோட பேசவும் சகவயசு ஆளுக இல்ல. அதுக்கு தானும் ஏங்கிட்டு இருக்குறது. இருக்குற ஒரே தொணை பொஞ்சாதிதான்... அவளுக்கும் அதே பிரச்சனை இருக்கக்கூடும்ன்றதும் புரிய ஆரம்பிச்சது.

அ.முத்துவிஜயன்