Breaking News :

Wednesday, November 29
.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் பிரம்மா


பிரம்மா தான் குருபகவானின் அதிதேவதை. எனவே ஒவ்வொரு வியாழன் தோறும் குருவை வழிபடுவதோடு பிரம்மாவையும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஸ்வாமியையும் வழிபட வேண்டும் !இறை சிந்தனை நமக்குள்  புகுத்தி நம்மை  வளர்த்த பெற்றோருக்கும் , குருமார்களுக்கும் பெரியோர்களுக்கும் வணக்கம் செலுத்தி பிரம்மா தான் நம்மை படைத்தார்.

ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

 திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்

அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)

தல விருட்சம் : மகிழமரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்

ஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்

மாவட்டம் : திருச்சி

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

இங்கு பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம் இது. சிவன் கோவிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.

சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இந்த கோவில் உள்ளது.

திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

'குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மகேச்வர, குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ’ என்ற குரு மந்திரப்படி அமைந்த கோவில் இது. பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோ தரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர்.

பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோவிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

பிரம்மன் வழிபட்ட சோடச லிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது.

இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.

வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் பதஞ்சலி பிடவூர் எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக் கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார்.

அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்ம நாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது.

தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார்.

தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய், எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார்.

படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார்.

பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.

என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.

முகவரி:

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,

சிறுகனூர்,

திருப்பட்டூர்-621 105,

திருச்சி மாவட்டம்.

போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்: காலை 9.30 - மாலை 6 மணி)
   
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

திருப்பட்டூர் கோவில் பற்றிய 20 தகவல்கள்
திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமய புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

* இத்தலத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ ஆனது.

 
* புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம் இதுவாகும்.

* இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

* இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.

* திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.

* சிவபெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.

* சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான்.

* பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

* பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்ம சம்பத் கவுரி என்ற திருநாமத்துடன் அம்பாள், கனிவு ததும்ப.. கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.

* பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

* குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா, இந்த ஆலயத்தில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரம்மாவை வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம்.

* இங்குள்ள சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

* தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.

* தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

* இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் வீற்றிருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வரியம் கிடைக்கும்.

* 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்து பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.

* இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வ நாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத் துணர்ச்சி கிடைக்கும்.

* திருப்பட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.

* இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சன்னிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

* வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.