Breaking News :

Wednesday, November 29
.

திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள்திருநாங்கூர் திவ்யதேச கோவில்களில் 11 கருட சேவை" இந்த ஆண்டு 2022 தேதி பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் , செவ்வாய் மற்றும் புதன்கிழமை வாய்ப்பு கிடைக்கும் பாக்கியம் பெற்றோர் சென்று தரிசியுங்கள் 
தை அமாவாசைக்கு மறுநாள்- கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் எழுந்தருள… திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை- மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்

ஆண்டு தோறும் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் சந்நிதியில் தை அமாவாசைக்கு மறுநாள் 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் உற்ஸவம் நடைபெறும்.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..!

தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்து சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!

பெருமாள்கள் வீதியுலா காட்சியுடன் 11 கருட சேவையை தரிசித்தால் புண்ணியங்களின் பலன்கள் ஏராளம் கிடைக்கும்
திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரிலுள்ள ஆறு திவ்ய தேசங்களையும் இவ்வூரைச் சுற்றி அருகருகே, ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து வழங்கப்படும் பெயராகும்.சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.
மயிலாடுதுரை மற்றும் சீர்காழியில் தங்கி, இந்த திவ்ய தேசங்களைப் பார்க்கலாம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி பார்க்க முடியும்.
பகவானின் தரிசனம் கிடைப்பது விசேஷம். அதிலும் கருட சேவையை தரிசிப்பது இன்னமும் விசேஷம். ஏன்? ‘ஆதிமூலமே’ என்று அலறிய கஜேந்திரனின் குரலைக் கேட்டமாத்திரத்தில் வந்த கோலம்; பாண்டிய மன்னனின் அவையில் பொற்கிழி அறுபடுமாறு வாதம் புரிந்த பெரியாழ்வார் பெற்ற பாராட்டைக் காணவந்த கோலம்; பக்தனைக் காணவும், பக்தனைக் காக்கவும் பெருவேகத்தில் வரும் பரம அனுக்ரக வடிவம். அதனால்தான், கருட சேவை அவ்வளவு விசேஷம். ஒரு கருட சேவையே இப்படி என்றால், பதினொரு கருட சேவை பற்றி என்ன சொல்ல? அதை நாம் காண்பது திருநாங்கூரில்!

ஏன் இந்த வைபவம்?

ஒரு சமயம் சிவபெருமான் ஏகாதச ருத்ர அச்வ மேதத்தை செய்தபோது, பகவான் வெளிப்பட்டாராம். அவரிடம் சிவபிரான் கேட்டவண்ணம், 11 வடிவங்களாகவும் காட்சி தந்தார். இந்தச் சம்பவம் நடந்தது திருமணிமாடக் கோயில் என்ற நல்லூரில். ஆகவே, 11 கருட சேவை இந்தக் கோயிலில் நடைபெறுகிறது.

திருமங்கையாழ்வார், இந்த 11 வைணவ திருத்தலங்களையும் தரிசித்து மங்களாசாசனம் செய்து விட்டு வரும்போது, வழியில் ஸ்ரீரங்கம் பள்ளி கொண்ட பெருமாளையும், நாச்சியார் கோயில் அருள் மிகு சீனிவாசனையும் சேவிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார். இந்த இருவரிடமும் திருமங்கை மன்னனுக்கு தனி விருப்பம் உண்டு. ‘நாச்சியார் கோயிலில் பெரிய திருமடல். சிறிய திருமடல் என்று பிரபந்தம் பாடினார்; அரங்கத்துக்கு மதில் எடுப்பித்தார் என்கிறது திருமங்கையாழ்வார் சரிதம். அவருடைய எல்லையற்ற பக்திக்குக் கட்டுப்பட்டவன் அல்லவா பெருமாள்! மஞ்சக்குடி என்ற இடத்தில் இந்த இரண்டு பெருமாள்களும் எழுந்தருளி ஆழ்வாருக்கு அருள் வழங்கினாராம்! இதைக் காண, 11 திவ்ய தேசத்து நாயகர்களும் கருட வாகனத்தில் எழுந்தருளினார்கள்! இதை உணர்த்தும் வண்ணம் இன்றும் ஸ்ரீரங்கத்திலிருந்தும், நாச்சியார் கோயிலிலிருந்தும் ஆழ்வாருக்கு மாலைப் பிரசாதம் எடுத்துக்கொண்டு, பட்டர்கள் செல்கின்றனர்!

கருட வாகனத்தில் எழுந்தருளும் பகவானை தரிசிப்பதால், காரியத் தடைகள், எதிர்ப்புகள், தவறே செய்யாமல் உண்டாகும் அபவாதங்கள் போன்றவை நீங்கும். திருநாங்கூர் போவோமா?

செல்லும் வழி:

சீர்காழியிலிருருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாங்கூர். பஸ்-ஆட்டோ வசதிகள் நிறைய உண்டு.

திவ்ய தேசங்களின் விவரம்:

திருக்காவளம்பாடி: கோபால கிருஷ்ணன் - செங்கமலநாயகி

திருஅரிமேயவிண்ணகரம்: குடமாடு கூத்தர் - அம்ருதகடவல்லி

திருவண்புருடோத்தமம்: புருஷோத்தமன் - புருஷோத்தம நாயகி

திருசெம்பொன் செய்கோயில்: செம்பொன்னரங்கர்-அல்லிமாமலர் நாச்சியார்

திருமணிமாடக்கோயில்: நாராயணப்பெருமாள் - புண்டரீகவல்லி

திருவைகுந்தவிண்ணகரம்: வைகுந்தநாதன் - வைகுந்தவள்ளி

திருத்தேவனார் தொகை: ஸ்ரீமாதவப் பெருமாள் - கடல்மகள் நாச்சியார்

திருத்தெற்றியம்பலம்: ரெங்கநாதன் - செங்கமலவல்லி

திருமணிக்கூடம்: வரதராஜப்பெருமாள் திருமாமகள்.

திருவெள்ளக்குளம்: அண்ணன் பெருமாள் - அலர்மேல் மங்கை

திருப்பார்த்தன்பள்ளி: ஸ்ரீபார்த்தசாரதி (தாமரையாள் கேள்வன்) - தாமரை நாயகி

திருநாங்கூர் மணிமாடக் கோவில் கருட சேவை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அதற்கேற்ப நம் பயண நாட்களைக் கூட்ட வேண்டி வரும்.

திருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர். பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.

திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள்

திருக்காவளம்பாடி
திருஅரிமேய விண்ணகரம்
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன் செய்கோயில்
திருமணிமாடக் கோயில்
திருவைகுந்த விண்ணகரம்

திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள்

திருத்தேவனார்த் தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன் பள்ளி

ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்) காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தைக் கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும், திருமங்கையாழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும்..

சில சிறிய கோயில்களில் அர்ச்சகர்கள் 2 அல்லது 3 கோயில்களுக்கு சேவை செய்வதால் செல்லும் வழியில் உள்ள கோயில்களில் ஒரு அர்ச்சகரைக் கேட்டுச் செல்லவும். உங்களுடன் வந்து சேவை செய்து தருவார். இது சில ஆண்டுகளுக்கு முன்பான எங்கள் அனுபவம்.

அருகில் சென்று வரக்கூடிய ஏனைய முக்கிய கோயில்கள், பார்க்க வேண்டிய இடங்கள்…….வைத்தீசுவரன் கோயில் சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்கொள்ளிடம் ஆறு மற்றும் பாலம், பூம்புகார் மற்றும் டேனிஷ் கோட்டை.

வசதியாகப் பார்க்க வேண்டுவோர், சொந்தக் காரில் அல்லது வாடகை வண்டிகளில் சென்று வருவது நல்லது. நம் வசதிக்கேற்ப பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். 

மயிலாடுதுறை அமைந்திருப்பது இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில். ஏற்கெனவே குறிப்பிட்ட 11 திருநாங்கூர் திவ்ய தேசங்களைத் தவிர இந்த மாவட்டத்தில் அமைந்த ஏனைய 8 திவ்ய தேசங்கள்

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள்(மயிலாடுதுறை 30 கி மீ)
தேரெழுந்தூர் தேவாதிராஜன் (மயிலாடுதுறை 10 கி மீ)
தலச்சங்காடு நாண்மதிய பெருமாள் (சீர்காழி 15 கி மீ)
திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் (மயிலாடுதுறை 2 கி மீ)
திருவிக்ரம நாராயணர் (சீர்காழி 2 கி மீ)
திருவாலி திருநகரி(சீர்காழி 9 கி மீ)

திருக்கண்ணங்குடி (நாகப்பட்டினம் 8 கி மீ)
நாகப்பட்டினம் திருமேகநாதர்

இந்த 8 திவ்ய தேசங்களையும் சீர்காழி/மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து சென்று தரிசிக்கலாம்.   
இந்த இடங்களை நம்முடைய வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ சென்று வந்தால் நேரத்தைச் சேமிக்கலாம். காலை உணவை உண்டு விட்டு மதிய உணவிற்கு நாம் தங்கிய இடத்திற்கு வரலாம். வழியில் சில ஓட்டல்கள் உணவருந்த உண்டு. தரம் பற்றிக் கூற முடியவில்லை. கையில் உணவை எடுத்தும் செல்லலாம். இறையை தொழச் செல்லும் இடத்தில் இரையைப் பற்றி அதிகம் கவலை வேண்டாம்
திருவாரூர் நாகப்பட்டினத்திலிருந்து 8 கி மீ தொலைவில் உள்ளது,

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.