Breaking News :

Friday, April 19
.

ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம்


அம்பலப்புழை கோவிலில் ஒவ்வொரு நாளும் 32 இடங்கழி அளவுள்ள பாயசம், அதாவது நாற்பத்தி இரண்டு லிட்டர் குறைத்தபட்சமாகத் தயாரிக்கப்படும். ஆனால் பாயசத்திற்காக தினமும் எவ்வளவு பணம் பக்தர்களால் முன்கூட்டியே காட்டப்படுகிறதோ அதைப் பொறுத்து 200 லிட்டர் பாயசம் கூட செய்வது வழக்கமாம்.

 மற்ற கோயில்களில் எல்லாம் செய்து வைத்திருக்கும் பிரசாதங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் நிவேதனம் செய்ய கருவறைக்கு எடுத்துச் செல்வார்கள். பகவானுக்கு நிவேதிப்பதை யாரும் காண முடியாது. நடையடைத்து விட்டுதான் நிவேதனம் செய்வார்கள். ஆனால் அம்பலப்புழையில் எவ்வளவு பாயசம் ஒருநாளைக்குச் செய்யப்படுகிறதோ அவ்வளவு பாயசமும் அண்டா அண்டாவாகக் கொண்டு சென்று பகவானுக்கு முன்னால் வைப்பார்கள். நடையடைப்பதில்லை. பக்தர்கள் அனைவரும் காணவே நிவேதனம் செய்யப்படுகிறது. 

 

இத்தனை லிட்டர் பாயசம் இன்று உண்டாக்கியிருக்கிறோம் என்று பகவானுக்குக் கணக்கு சொல்லி சமர்ப்பணம் செய்கிறார்கள் தினமும். பால் பாயசம் நிவேதனம் செய்யப்படும் நேரத்தில் கோயிலுக்கு மேலே கிருஷ்ண பருந்து வட்டமிடுவதும் கூடுதல் சிறப்பு.

 

திடப்பள்ளி இருக்கும் இடத்திற்கு நேரெதிரே, பகவானின் திருநடைக்குச் செல்லும் வழி இருக்கிறது. சரியாக 12.30 க்கு உச்சிக்கால பூஜையின் போது பாயச நிவேதனம் செய்யப்படுகிறது. அதற்கு முன் பாயசப் பாத்திரங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதால் பக்தர்களை ஒதுங்கி நிற்கச் செய்கிறார்கள். பாயசம் எடுத்துச் செல்லும் வழியில் யாரும் நிற்கலாகாது. அந்த வழி முதலில் நீர் தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. பிறகு சங்கநாதம் முழக்கப்படுகிறது. பின்னர் பாயச அண்டாக்கள் திருநடைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. நிவேதனம் ஆன பிறகு முன்பணம் செலுத்திய பக்தர்களுக்கு விநியோகிக்கப் படுகிறது. பாக்கியம் இருந்தால்தான் இந்தப் பாயசம் குடிக்கக் கிடைக்கும் என்பார்கள். 

 

இந்த பாயசத்தை விநியோகிப்பதற்காக பாயச அண்டாவிலிருந்து முகர்ந்து ஊற்றுவதற்கென்றே வெண்கலக் கோரிகள் (வித்யாசமான கரண்டி) இருக்கும். பாயசம் செய்த உருளியில் பாயசம் உலர்ந்த பாலும் சர்க்கரையும் படர்ந்திருக்கும். இதை ஒரு வெண்கலச் சுரண்டி கொண்டு நன்கு சுரண்டி திரட்டி எடுக்கிறார்கள்.  இதனைப் பால் சுரண்டி என்கிறார்கள். இதனையும் ஆர்வமாகப் பெறுவதற்கு பணம் கட்டிக் காத்திருப்பவர் உண்டு.

 

இந்த பாயசத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு. இது வெறும் பாயசம் மாத்திரமல்ல, இதனை கோபாலக் கஷாயம் என்றும் சொல்கிறார்கள். ஒரு கஷாயம் வற்றுவது போல வற்றி வற்றிக் குறுகும் இதுவும் மருந்தாகவே, அதாவது அமிர்தமாகவே அங்கு கருதப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்குக் கூட இது கெடுதல் செய்வதில்லை என்று சொல்லப்படுகிறது.

 

*இத்தனை சுவையான பாயசத்தை திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலிலும் செய்ய வேண்டும் என்று திருவனந்தபுரம் ராஜா மகேந்திரவர்மர் மிகவும் விரும்பி, அம்பலப்புழையில் பாயசம் தயாரிக்கும் உருளி உட்பட, இப்பாயசம் தயாரிக்கும் கீழ்சாந்தி நம்பூதிரிகளையும் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு அவர்கள் தயாரித்த பாயசத்தில் அம்பலப்புழை பாயசத்தின் ருசி சுத்தமாக இல்லையாம். இதன் பிறகு ராஜாவுக்குப் புரிகிறது. அந்த பாயசத்தின் ருசிக்குக் காரணம் அங்குள்ள மணிக்கிணற்றின் நீர்தான் என்று*. . ,

 

இந்தக் கோவிலின் மற்றொரு விசேஷம் *இங்குள்ள குருவாயூர் நடை. குருவாயூருக்கும் அம்பலப்புழைக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது. திப்புசுல்தான் படையெடுப்பின் போது அவன் குருவாயூர் கோவிலுக்குள்ளும் நுழையக் கூடும் என்று அஞ்சி, மூலவிக்ரகத்தை கிணற்று நீரில் மறைத்து வைத்து விட்டு, குருவாயூரப்பனின் தங்கத் திருமேனியையும், தங்கத் திடம்பையும் அவனிடமிருந்து காக்கும் பொருட்டு அவற்றை குருவாயூர் மேல்சாந்திகள் தங்கள் தலையில் சுமந்து வந்து பாதுகாத்து வைத்த இடம் இந்த அம்பலப்புழை கோவிலில்தான். 

 

ஆம் பத்துப் பதினைந்து ஆண்டுகள் குருவாயூரப்பன் இங்கு தான் ஒரு தனி சந்நிதியில் இருந்து தன் பக்தர்களுக்கு அருள் பாலித்திருக்கிறான். அந்த பதினைந்து ஆண்டும் அம்பலப்புழையில்  பார்த்தசாரதிக்கு பாயசம் நிவேதிக்கும் போது அதில் கொஞ்சம் குருவாயூரப்பனும் நிவேதிக்கப் பட்டிருக்கிறது. பின்னர் அவன் மீண்டும்  குருவாயூருக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். அதன் பிறகு இரண்டு கோவிலிலும் சில துர்சகுனங்கள் ஏற்பட, உடனே பிரஷ்ணம் வைத்துப் பார்த்திருக்கிறார்கள். 

 

அதில் கண்டறிந்தது வேறொன்றுமில்லை. குருவாயூரப்பனுக்கு அம்பலப்புழை பால்பாயசம் வேண்டுமாம். அது தெரிந்த பின், தினமும் அம்பலப்புழையில் பால்பாயசம் நிவேதனம் செய்யப்படும் அதே நேரத்தில் குருவாயூரில் நடை அடைக்கப்பட்டு விடும். குருவாயூரப்பன் அம்பலப்புழையில் நடைபெறும் உச்சிக்கால பூஜை சமயத்தில் பால் பாயசம் உண்பதற்கு அம்பலப்புழைக்கு வந்து விடுவானாம்.  இதனால் குருவாயூரில் உச்சிக்கால சீவேலி மாலை நான்கு மணிக்கு மாற்றப்பட்டு விட்டது. பன்னிரண்டரை மணி முதல் நான்கு மணிவரை குருவாயூரில் நடை அடைத்திருக்கும்*

 

அம்பலப்புழையின் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அங்கு உத்சவ காலத்தில் ஒருநாள் நடக்கும் நாடகசாலை சத்யை (விருந்து) மிகவும் புகழ்பெற்றது. அன்று அங்கிருக்கும் மிகப்பெரிய நாடசாலை மண்டபத்தில் ஏராளமானோருக்கு மிக அருமையான விருந்தளிக்கப்படும், நான்கு வகை பாயசங்கள், மூன்று வகை பச்சடிகள், மூன்று வகை உறுகாய்கள், நான்கு வகை கறி, கூட்டு, ஓலன், காளன், அவியல், கூட்டுகறி, என்று தலைவாழையிலை போட்டு பிரமாதமான விருந்தளிக்கப்படும்.

 

 குருவாயூரப்பனின் பக்தரான வில்வமங்கள ஸ்வாமிகளின் வீட்டிற்கு அவர் பூஜை செய்யும் நேரத்தில் குருவாயூரப்பன் தினமும் வந்து விடுவானாம். அவனை தினமும் கண்டு பரவசாமாவார். ஒருநாள் அவன் பூஜைக்கு வரவில்லை. அவனைக் காணாத சோகத்துடன் அவர் அம்பலப்புழைக்கு வருகிறார். அந்நேரம் அங்கு நாடகசாலை சத்யை நடந்து கொண்டிருக்கிறது. வில்வமங்கள சுவாமிகளும் சாப்பிட அமர்கிறார். அப்போது குருவாயூரப்பனே ஒரு சிறுவன் வடிவில் வந்து வில்வமங்கள சுவாமிகளுக்கு நெய் விளம்பி விட்டு மறைந்தானாம்.

 

இப்படி பல்வேறு சிறப்புகளும் கொண்டிருக்கும் அமபலப்புழையின் பால்பாயசத்தை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். நம்மிடம் மணிக்கிணற்று நீரும், திடப்பள்ளி கிணற்று நீரும் இல்லாவிட்டாலும் நம் பக்தியால் ருசியைக் கொண்டு வர முடியும் என நினைக்கிறேன்

 

*தண்ணீர் இரண்டு லிட்டர்*

 

*பால் இரண்டு லிட்டர்*.

 

*நன்கு கழுவி உலர்த்திய  பாயச அரிசி - 200 கிராம் (மிக்சியில் அதை ஒரு திருப்பு திருப்பினால் அரிசி பாதி பாதியாக உடையும். அதிகம் நொறுங்கி விடக் கூடாது. உலக்கையால் கூட லேசாக குத்தி எடுத்துக் கொள்ளலாம்*.

 

*சர்க்கரை –  500 gm (இனிப்பு சற்று குறைவாக வேண்டும் என்கிறவர்களுக்கு 400 கிராம் சர்க்கரை போதும்.)*

 

*நெய் 25 gm*

 

*இதன் செய்முறை*.

 

*உங்கள் வீட்டில் அடிகனமான பெரிய வாணலியோ, அல்லது வெண்கல உருளியோ,அல்லது குக்கரோ இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் இரண்டு லிட்டர் தண்ணீரை அதில் விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்க்கவும். தண்ணீர் நன்கு தளைத்துக் கொதிக்கும்போது அதில் இரண்டு லிட்டர் பாலையும் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாலும் நீரும் கலந்த கலவை வற்றிக் கொண்டே வரும். அது வற்ற வற்ற அதன் நிறமும் மாறிக் கொண்டு வரும். நான்கு லிட்டர் பால் மூன்று லிட்டராகக் குறுகியதும் . அரிசியை அதில் சேர்த்துவிட்டு மீண்டும் கைவிடாமல் கிளற வேண்டும். பால் இன்னும் வற்றும். அரிசி வெந்து வெந்து பாலோடு கலந்து முத்து முத்தாக பாயசத்தில் மிதக்கத் தொடங்கும். பாலும் நீரும் இப்போது ஒன்று அல்லது ஒன்றரை லிட்டராகக் குறுகி, ஷெண்பகப்பூவின் நிறத்திற்கு மாறியிருக்கும். இப்போது சர்க்கரை சேர்க்க வேண்டும். நீங்கள் அம்பலப்புழை வாசுதேவனை மானசீகமான நினைத்து சர்க்கரை சேர்ப்பதற்கு முன் வாசுதேவ்.! என்று அவனை பக்தியோடு அழையுங்கள். பின்னர் சர்க்கரையைப் பாயசத்தில் சேர்த்து கிளறி விடுங்கள். பால் சூட்டிலேயே சர்க்கரை கரைந்து விடும். உடனே அடுப்பை அணைத்து விடலாம். சர்க்கரை சேர்த்த பிறகு கொதிக்க விடவேண்டிய அவசியமில்லை.  பண்ணிய பாயசம் முழுவதையும் கிருஷ்ணனை நினைத்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து அன்போடும் ஆத்மார்த்தமான பக்தியோடும் நிவேதனம் செய்யுங்கள். மணிக்கிணற்றுத் தண்ணீரோ, மற்ற எதுவுமோ இல்லா விட்டாலும், அம்பலப்புழை பாயசத்தில் அதே அதிசய ருசிஇல்லாது போனாலும், நிச்சயம் உங்கள் பாயசத்திற்கும் அவன் ஒரு தெய்வீக ருசியை சேர்த்து விடுவான். முடிந்தால் ஒருமுறை அம்பலப்புழை சென்று அவனை தரிசித்து அந்தக் கோவிலின் அதிசயங்களையும் கண்டு, பால் பாயசத்தையும் ருசித்து விட்டு வாருங்கள்*.

            

*ஸ்ரீ குருவாயூரப்பன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*

 

*சௌஜன்யம்..!*

 

*அன்யோன்யம் .. !!* 

 

*ஆத்மார்த்தம்..!*

 

*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*

 

*அடியேன்*

*ஆதித்யா*


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.