Breaking News :

Sunday, October 06
.

சங்கட ஹர சதுர்த்தி வரலாறு


‘சங்கட’ என்றால் துன்பம், ‘ஹர’ என்றால் அழித்தல். ஆக, துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

 

வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றிய பரத்வாஜ முனிவர் ஒரு சமயம் நர்மதை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்நதியில் நீராடிக் கொண்டிருந்த ஒரு மங்கையை பார்த்து மனம் மயங்கி, அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று இல்லறம் நடத்தினர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் ஒரு தேவலோக மங்கை என்பதால், குழந்தை பிறந்த பிறகு குழந்தையை விட்டுவிட்டு அவள் தேவலோகம் திரும்பி விட்டாள். முனிவரும் அந்தக் குழந்தையை அவந்தி நகரிலேயே விட்டுவிட்டு மீண்டும் தனது தவத்தைத் தொடர்ந்தார்.

 

அந்தக் குழந்தையை பூமா தேவி எடுத்து வளர்த்து வந்தாள். குழந்தையின் மேனி அக்னி போல செந்நிறமாக ஒளி வீசியதால் அதற்கு, ‘அங்காரகன்’ எனப் பெயர் சூட்டினாள்.

 

அந்தக் குழந்தைக்கு ஏழு வயது ஆனபோது பூமாதேவியிடம் அது, “அம்மா எனது தந்தை யார் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசையாக உள்ளது. என்னை எனது தந்தையிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று கேட்டான்.

 

பூமாதேவி குழந்தையை பரத்வாஜ முனிவரிடம் அழைத்துச் சென்று, “முனிவரே இவன்தான் தங்களது மகன். இவனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டினாள். முனிவரும் தனது மகனை அகமகிழ்ந்து  ஏற்றுக்கொண்டு பல கலைகளிலும் சிறந்த வல்லவனாக வளர்த்து வந்தார். முனிவரிடம் அங்காரகன், “தந்தையே இவ்வுலகில் உள்ள எல்லா கலைகளிலும் நான் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

 

அதற்கு பரத்வாஜ் முனிவர், “நீ விநாயகப் பெருமானை நோக்கி தவம் செய்தால் சர்வ கலைகளிலும் வல்லவனாக திகழ்ந்து நீ நினைத்தது அனைத்தும் நிறைவேறும்” என்று கூறி அதற்குரிய மந்திரங்களை உபதேசம் செய்த அனுபவித்து வைத்தார்.

 

அவந்தி நகரை அடுத்த ஒரு காட்டில் தனது தவத்தைத் தொடங்கினான் அங்காரகன். பல வருடங்களாக கடுந்தவம் மேற்கொண்டதன் பலனாக மாசி மாதம் சதுர்த்தி திதி அன்று இரவு வேளை சந்திரோதயம் காலத்தில் விநாயகர் பெருமான் அங்காரகனுக்கு காட்சி தந்தார். அதனைக் கண்டு அகம் மகிழ்ந்த அங்காரகன் விநாயகப் பெருமானை பலவாறு போற்றித் துதித்தான். “ஐயனே எனக்கு தாங்கள் சில வரங்களை அருள வேண்டும்” என்று வேண்டினான்.

 

“உன்னுடைய கடுந்தவத்தால் கட்டுண்டேன். நீ கேட்கும் வரங்கள் எதுவாயினும் தருகிறேன் கேள்” என்று கூறினர் விநாயகர். “ஐயனே சர்வ மங்கல ரூபத்தோடு தங்களை தரிசித்த நான் அனைவராலும், ‘மங்களன்’ என்று அழைக்கப்பட வேண்டும் .தேவலோகத்தில் தேவாமிர்தம் பருகி அமரனாக வேண்டும். என்னை வழிபடுபவர்களுக்கு எல்லாம் நான் செல்வம் அளிக்கும் கிரகமாக மாற வேண்டும். நான் தங்களை தரிசித்த இந்த சதுர்த்தி நாளை அனைவரும் கொண்டாட வேண்டும். யாரெல்லாம் இந்த சதுர்த்தி நாளன்று தங்களை வழிபடுகிறார்களோ அவர்களின் துயரங்களை நீங்கள் நீக்க வேண்டும்” என்று பலவாறு வரங்களைக் கேட்டான்.

 

“நீ கேட்ட வரங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்” என்று கூறியதோடு மட்டுமில்லாமல், யாரெல்லாம் சங்கடஹர சதுர்த்தி அன்று என்னை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி வாழ்வில் அனைத்து வளங்களையும் தருவேன்” என்ற வரத்தையும் விநாயகப் பெருமான் தந்தருளினார். அந்த அங்காரகனே செவ்வாய் கிரகமாக அனைத்து மக்களுக்கும் செல்வம் அளிக்கும் கிரகமாக இருந்து கொண்டிருக்கிறார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.