Breaking News :

Sunday, October 27
.

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், திருச்சி


காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்   –     காசி விஸ்வநாத சுவாமி, வைத்தியநாதர், ஜம்புகேஸ்வரர்,
ஏகாம்பரேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
அம்மன்   –     விசாலாட்சி, தையல் நாயகி, காஞ்சி காமாட்சி, மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம்   –     காவிரி
பழமை   –     500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்   –     கீழசிந்தாமணி – திருச்சி
மாவட்டம்   –     திருச்சி
மாநிலம்   –     தமிழ்நாடு

இராமாயணத்தில் சீதையை, இராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான். இது தவறான செயல் என்பதால் இராவணனின் தம்பி விபீஷணன் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, இராமருடன் சேர்ந்து இராவணனுடன் போர் புரிந்தான்.

இராமனுக்கு உறுதுணையாக இருந்த குரங்குபடைகள், இந்திரஜித்தின் தாக்குதலில் மயங்கி விழுந்தன. காசியிலிருந்து ஆத்மலிங்கத்தை எடுத்து வந்தால் மட்டுமே இதுபோன்ற தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என அனைவரும் கருதினர்.

ஆத்மலிங்கத்தைக் காசியிலிருந்து எடுத்துவந்தார் விபீஷணன். வழியில் காவிரிக் கரையில் ஆத்மலிங்கத்தை வைத்துவிட்டு, உச்சிபிள்ளையாரை தரிசனம் செய்தார். பின்னர் இலங்கைக்கு தன்னுடைய பயணத்தை தொடர முடிவு செய்தார். ஆனால் ஆத்மலிங்கத்தை தூக்கிய போது அதனை அசைக்க முடியவில்லை.

எவ்வளோவோ முயன்றும் முடியாததால், ஆத்மலிங்கத்திற்கு காவிரி கரையில் கோயில் எழுப்பிவிட்டு விபீஷணன் சென்றுவிட்டார்.
இதுவே தற்போது திருச்சி கீழசிந்தாமணி நகரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயில் என்ற பெயரில் அமைந்துள்ளது. இந்த கோயில் காவிரிக் கரையில் இருப்பதால் காவிரியில் வெள்ளம் வரும் போதெல்லாம் கோயிலில் உள்ள பொருட்கள் அடித்துச் செல்லப்படுகிறது.

குறிப்பாகக் கோயில் தல வரலாறு சம்பந்தமானவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இந்த கோயிலின் பக்க சுவர் ஆற்றின் உள்ளே இருப்பதால் தற்போதும் காவிரியில் ஓடும் தண்ணீர் கோயில் சுவரில் மோதி செல்கிறது.

மேலும் இந்த கோயிலில் காசிவிஸ்வநாத சுவாமி– விசாலாட்சி, வைத்தியநாதர்– தையல் நாயகி, ஏகாம்பரேஸ்வரர்– காஞ்சி காமாட்சி, மீனாட்சி– சுந்தரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர்– அகிலாண்டேஸ்வரி ஆகிய ஐந்து இலிங்கமும், ஐந்து அம்பாளும் இருப்பதால் பஞ்சலிங்க கோயில் என்று அழைக்கப்படுகிறது.

காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 6 அடி உயரத்தில் தான் காணப்படுகிறது. அதேபோன்று மூலவர் இருக்கும் கர்ப்பகிரகமும், விசாலாட்சி சன்னதியும் 5க்கு 3 அடி என்ற கணக்கில் மிகத் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்ப்பகிரகத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே செல்வதே பெரிய கஷ்டமாக இருக்கும்.
பக்தர்களும் நிமிர்ந்து நின்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. மிகவும் குனிந்து “ட” வடிவில் நின்று தான் தரிசனம் செய்ய முடியும்.

சமுதாயத்தில் நிமிர்ந்து நடக்கும் மனிதன் கடவுள் முன்பாவது பணிவாக மிகவும் குனிந்து தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். அதிக உயரம் கொண்டவர்கள் இந்த கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாது.

மேலும் இந்த கோயிலில் சிறப்பாக கங்கைக்கு என்று தனி சன்னதி உள்ளது. தற்போது நவக்கிரகம், துர்க்கை, மகாவிஷ்ணு ஆகியோருக்கும் தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, தீபாவளி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கீழசிந்தாமணி – திருச்சி,
திருச்சி மாவட்டம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.