Breaking News :

Wednesday, October 16
.

தொல்லைகள் அகற்றும் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவில் வரலாறு


தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலில் அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.

◆திருவனந்தபுரம் அருகே தொழுவன்கோடு என்ற இடத்தில் சாமுண்டிதேவி கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அன்னை, மக்களுக்கு அருள்வழங்கி காத்து வருகிறார். இந்த தலத்தில் அந்தணர் அல்லாதவர்களும், அம்மனுக்கு பூஜை செய்யும் சிறப்பு மிக்க வழக்கம் உள்ளது. அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.

தல வரலாறு :
 
◆தொழுவன்கோடு ஆலய வரலாறு பற்றி கூறும் முன்பு, அதோடு தொடர்புடைய பண்டைய கால திருவிதாங்கூர் மன்னர் குடும்ப வரலாற்றையும் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. அபூர்வ சக்திமிக்க சாமுண்டி தேவி ஆலயம் தோன்றிய முக்கிய காரணமாக திகழ்ந்தவர், மன்னர் மார்த்தாண்டவர்மா. அவர் வீர பராக்கிரமசாலியாகவும், திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரிந்து வரும் பத்மநாப சுவாமியின் பரம பக்தனாகவும் இருந்ததும், திருவிதாங்கூர் நாட்டை விரிவுபடுத்தி வலிமை மிக்கதாக மாற்றியமைத்தவர்.

◆ஆதி காலம் முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், மருமக்கள் தாயகம் என்னும் வழக்கம் நிலை கொண்டிருந்தது. ஒரு மன்னர் ஆட்சி காலத்தின் பின்னர், மன்னரின் தங்கை மகன்தான் (மருமகன்) ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் மார்த்தாண்டவர்மா ஆட்சிக்கு வரும் முன், அவரின் தாய்மாமன் ராமவர்மா மன்னராக இருந்தார்.

◆ஒரு முறை மன்னர் ராமவர்மா, சுசீந்திரத்தில் நடைபெறும் தேரோட்டத்தைக் காணச் சென்றார். அப்போது கோவிலில் அழகே உருவான அபிராமி என்றப் பெண்ணைச் சந்தித்தார். அவள் மீது மையல் கொண்ட மன்னர், அவளைத் திருமணம் செய்ய நினைத்து, தனது மனதைத் திறந்து அபிராமியிடம் சொன்னார்.

◆அபிராமி ஓர் நிபந்தனையை முன்வைத்தாள். ‘திருமணம் செய்திட எனக்கு சம்மதமே. ஆனால் என் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குதான் அரசு உரிமை வழங்க வேண்டும். மக்கள் தாயத்தை நிலை நிறுத்த வேண்டும்’ என்றாள்.◆◆

◆பரம்பரை வழக்கமான மருமக்கள் தாயக வழக்கத்தை மாற்றுவது கடினம். உரிமை மருமகனுக்கு என்ற வழக்கத்தை மீற முடியாது. வேறு எதுவாயினும் கேள்’ என்றார் மன்னர் ராமவர்மா.

◆ஆனால் அபிராமி ஒத்துக்கொள்ளவில்லை. ‘மன்னா! எந்த நாட்டிலும் தந்தையின் சொத்துக்கு உரிமை பிள்ளை செல்வங்களுக்கல்லவா? வரலாறுகளிலும் புராணங்களிலும் அதுவே கூறப்பட்டிருக்கின்றன. தங்களுடைய நாட்டில் மட்டும் இதென்ன வழக்கம்?’ எனக்கூறி மருமக்கள் தாயகத்தை அபிராமி புறக்கணித்தாள். தன் கருத்தில் பிடிவாதமாக நின்றாள்.

◆மன்னரும் வேறு வழியின்றி, அவள் மீது கொண்ட மையல் காரணமாக நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மணம் முடித்து வாழ்ந்து வந்தனர். ராமவர்மா- அபிராமி தம்பதியருக்கு பப்பு தம்பி, ராமன்தம்பி, உம்மணி தங்கை என்ற மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். அதே போல் ராமவர்மாவின் சகோதரி உமா தம்பதியருக்கு மார்த்தாண்டவர்மா பிறந்து வளர்ந்து வந்தார்.

◆மருமக்கள் தாயகம் நிலை நாட்ட மன்னர் குடும்பத்தினர் முயன்றனர். மக்கள் தாயகத்தை நிலை நாட்ட அபிராமியும், அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் மார்த்தாண்டவர்மா, தனது முறைப்பெண் உம்மணி தங்கையுடன் காதல் கொண்டிருந்தார். இதனை அவளது சகோதரர்கள் கண்டித்தனர். அவர்களின் காதலை பல வழிகளில் தடுத்தனர்.

◆மக்கள் தாயகத்தை நிலை நாட்டும் பிரிவில் எட்டு வீட்டுப் பிள்ளைகள் என ஒரு குழு தீவிரமாக ஒத்துழைத்தது. எட்டு வீட்டு பிள்ளைகளில் வீரபராக்கிரமசாலியாகவும், சதி திட்டங்கள் வகுப்பதில் வல்லவராகவும் இருந்த கழக்கூட்டத்து பிள்ளை என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஒரு முறை மார்த்தாண்டவர்மா படைவீரர்கள், கழக்கூட்டத்தப் பிள்ளையைப் பிடிக்க முயன்றனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை ஒரு காட்டில் சென்று மறைந்தார். மார்த்தாண்டவர்மா படையினரும் அவரை காட்டுக்குள் விரட்டிச் சென்றனர். பிள்ளையைக் காணவில்லை. அங்கு ஒரு பெரிய நாகப்பாம்பு படமெடுத்து, படைவீரர்களை தடுத்து நின்றது. இதனால் படைவீரர்கள் திரும்பி வந்து விட்டனர்.

◆மற்றொரு முறை விரட்டி வரும் படைவீரர்களுக்கு பயந்து, மேனம் குளம் என்ற இடத்தில் உள்ள மீன குடிசைக்குள் புகுந்தார் கழக்கூட்டத்துப் பிள்ளை. வீரர்களும் அந்த குடிசைக்குள் புகுந்தனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை அங்கு இல்லை. இதனால் படைவீரர்கள் குடிசையை உடைத்தெறிந்தனர். யாரும் இல்லாத வீட்டுக்குள் இருந்து வயதான மீனவப் பெண் ஒருத்தி, தலையில் கூடையை சுமந்தபடி வெளிப்பட்டாள். இதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

◆இந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்த மார்த்தாண்டவர்மா, தன் பக்கம் துணைபுரியும் ராமைய்யன் என்பவரிடம் இதற்கு காரணம் கேட்டார்.

◆அவரோ, ‘கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் ((சண்டை பயிற்சி வழங்கும் இடம்) ஓர் அரிய சக்தியாக ஆதிபராசக்தி குடியிருக்கிறாள். கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் பயிற்சி ஆசானாக ‘பணிக்கர்’ என்னும் திறமைசாலி இருக்கிறார். அங்கே சாமுண்டி வடிவில் அன்னை புவனேஸ்வரியும் அமர்ந்திருக்கிறாள். தேவியையும், குருவான பணிக்கரையும் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் கழக்கூட்டத்துப் பிள்ளையை வெற்றிபெற முடியாது’ என்றார்.

◆இதனைக் கேட்ட மார்த்தாண்டவர்மா, அரண்மனை ஜோதிடரை வரவழைத்து ஜோதிடம் கணித்துப் பார்க்கச் சொன்னார்.

‘குருவையும், அம்மனையும் அங்கிருந்து அகற்ற, பத்மநாப சுவாமியின் அருளைத் தேடுங்கள்’ என்றார் ஜோதிடர்.

◆அதன்படி மார்த்தாண்டவர்மா பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று மனமுருக வேண்டினார்.

மும்மூர்த்திகள் தரிசனம் :

◆வழிபடுவோரை கைவிடாத பரந்தாமன், மார்த்தாண்டவர்மாவை காத்திட முன்வந்தார். தன் செயலுக்கு பிரம்மதேவனையும், சிவபெருமானையும் துணைக்கு சேர்த்துக்கொண்டார். மூவரும் இரவு நேரத்தில் பணிக்கர் நித்திரையில் இருக்கும் போது, சாமுண்டியைச் சந்தித்தனர். ‘தேவி இந்த வேணாட்டிற்காகவும், பக்தர்களின் நலன் காக்கவும் வேண்டி, இந்த களரியை விட்டு வேறிடம் சென்று குடியிருக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

◆அன்னையும், ‘நல்லது. தங்கள் சித்தப்படியே ஆகட்டும். ஆனால் எனது அருள்வடிவம், இனி எங்கே பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ, அங்கு மும்மூர்த்திகளான நீங்கள் மூவரும் முன்னிலை வகிக்க வேண்டும். மேலும் பிரதிஷ்டை வருடாந்திர தினத்தில் மூவரும் வருகை தந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்றாள்.

◆அதற்கு திருமூர்த்திகளும் ஒப்புதல் தெரிவித்து மறைந்தனர். இதையடுத்து சாமுண்டி தேவியான, புவனேஸ்வரி தனது பரம பக்தரான குரு பணிக்கருடன், கழக்கூட்டத்துப் பிள்ளையிடம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்து பயணமானாள். தேவியின் உபதேசப்படி, பணிக்கர் மேடு பள்ளங்களையும், நீர்நிலைகளையும் கடந்து, சாமுண்டி சிலையுடன் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தார். மும்மூர்த்திகளும் அசரீரியாக குறிப்பிட்ட இடத்தில், சாமுண்டியை குடியிருத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தொழுதபடி நிற்கும் இந்தக் காடு, காலப்போக்கில் தொழுவன்காடு என்று மாறி புனித தலமாக உருவெடுத்தது.

◆பணிக்கர் வழக்கப்படி சாமுண்டி தேவியை பூஜித்து வந்தார். பொழுது புலரும் நேரத்தை காட்டிலிருந்த ஒரு கோழி உணர்த்தியது. அதனையே தேவிக்கு சமர்ப்பித்தார் பணிக்கர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. பக்தர்கள் அன்னைக்கு கோழியை சமர்ப்பித்து வேண்டுதல் செய்கின்றனர்.

◆கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் இருந்து சாமுண்டிதேவி மாற்றிடம் சென்றதும், மார்த்தாண்டவர்மா எட்டு வீட்டு பிள்ளைகளையும் வென்று சிறந்த ஆட்சியை தொடர்ந்தார். தொழுவன்காடு என்பது தொழுவன்கோடு என்றானது. அந்த இடத்தில் இருந்து அன்னையானவள், மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

◆இந்த ஆலயத்தில் உள்ள அன்னையை மனமுருக வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் தீரும். ஏவல், பில்லி, சூனியம் விலகும். திருமணத்தடை அகலும். இந்த ஆலயத்தில் திருவிழாக்காலங் களின் போது ‘ஔடத கஞ்சி’ வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் பிரசாதமாக உள்ளது.

◆இந்த ஆலயத் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், இறுதிநாளான 12-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடைதிறந்திருக்கும்.

நவக்கிரக சன்னிதி :

◆தொழுவன்கோடு சாமுண்டி தேவி ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, கந்தர்வன், அனுமன், நாகராஜா, நாகயட்னி, துர்க்காதேவி ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தேவியின் கருவறைக்கு அருகில் கருங்காளி தேவிக்கு தனிக் கோவில் இருக்கிறது. கணபதி மற்றும் நாகராஜா சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனவை என்பது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக சிலைகள் பெரிய உருவத்தில் தங்கள் வாகனங்களுடன் இருப்பதைக் காணலாம். இங்கு வந்து சனி தோஷத்திற்காக வழிபட்டு நிவாரணம் பெற்றுச் செல்பவர்கள் ஏராளம்.

அமைவிடம் :

◆திருவனந்தபுரம் கிழங்கு கோட்டையில் இருந்து வடகிழக்காக 7 கிலோமீட்டர் பயணித்தால் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலை அடையலாம்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.