Breaking News :

Monday, May 06
.

அழகர் ஆற்றில் இறங்கினால், காஞ்சி வரதர் கிணற்றில் இறங்குவார் ஏன்?


சித்ரா பெளர்ணமி: அழகர் ஆற்றில் இறங்கினால், காஞ்சி வரதர் கிணற்றில் இறங்குவார்!

காஞ்சிபுரம் நடவாவி உற்சவம் பற்றிய விரிவான பதிவு.

இன்று சித்ரா பெளர்ணமி. மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். இதே நாளில் காஞ்சியில் வரதர், நடவாவி கிணற்றில் இறங்கி அருள்பாலிப்பார்.

 

அன்று மாலை, அடியில் உள்ள மண்டபத்தில் காஞ்சி ஶ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருள்வார். வளர்பிறையில் பிரம்மாவின் வேள்வியில் இருந்து அவதரித்தவர் ஶ்ரீவரதராஜ பெருமாள் என்கிறது தலபுராணம். சித்ரா பெளர்ணமி தினத்தில் பிரம்மதேவன் வரதரை வழிபடுவதாக ஐதீகம். இங்கே ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று நடவாவி உற்சவமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் யாத்திரையை தொடங்கும் வரதர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து, செவிலி மேடு, தூசி, அப்துல்லாபுரம், ஐயங்கார் குளம் வழியாக நடவாவி கிணற்றுக்கு வருகிறார்.

 

வழிநெடுக சாலைகளை அலங்கரித்து, தண்ணீர் தெளித்து தோரணங்களால் அழகுப்படுத்தி வைத்திருப்பார்கள் மக்கள். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம், சாம்பார் சாதம் என வழியெங்கும் அன்னதானமும் நடைபெறும். வெயிலில் வருபவர்களின் தாகம் தணிக்க ஆங்காங்கே பானகம், மோர், தண்ணீரும் வழங்கப்படுகிறது.

 

`வாவி’ என்றால் கிணறு என்று பொருள். `நட’ என்றால் நடந்து வருதல் என்று பொருள். கிணற்றுக்குள் ஒரு கிணறு எனத் திகழ்கிறது நடவாவி. தரைத்தளத்திலிருந்து படிக்கட்டுகளால் சுரங்கம் போன்றதொரு பாதை செல்கிறது. அதற்குள் மண்டபம். மண்டபத்திற்குள் கிணறு. இதுதான் `நடவாவி கிணறு' என்று அழைக்கப்படுகிறது. சித்திரை பௌர்ணமியின் இருதினங்களுக்கு முன்பே, மண்டபத் தில் நீர் தேங்காத அளவிற்கு கிணற்றிலிருக்கும் நீரை வெளியேற்றுகிறார்கள்.48 மண்டலங்களைக் குறிக்கும் வகையில் 48 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.27வது படி வரை கீழே இறங்க முடியும். 27 படி ஆழத்தில் மண்டபத்தை அடையமுடியும். 12 ராசிகளை குறிக்கும் வகையில் 12 தூண்களால் கிணற்றை சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் நாற்புறமும் பெருமாளின் அவதாரம் சிறிய மற்றும் பெரிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

மேளங்கள் முழங்க, சிறப்பு அலங்காரத்துடன் நடவாவிக்குள் இறங்கும் வரதராஜர், உள்ளே உள்ள கிணற்றை மூன்று முறை சுற்றுகிறார். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் நான்கு திசைக்கும் ஒரு முறை தீபாராதனை நடைபெறுகிறது. கற்கண்டு, பழங்கள், என மொத்தம் 12 வகையான பிரசாதங்களை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். இரண்டாம் நாள் ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் நடவாவி கிணற்றுக்கு வந்து செல்கிறார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் கிணற்றில் நீராடி மகிழ்கின்றனர்.

 

சித்திரை பௌர்ணமி முடிந்தும் 15 முதல் 20 நாள்வரை நீராடலாம். நடவாவி கிணற்றில் இருந்து கிளம்பும் வரதருக்கு, பாலாற்றில் வைத்து பூஜை நிகழும். ஆற்றில் நான்குக்கு நான்கு அடி அளவில் ஊறல் (அகழி போன்ற பள்ளம் ) எடுத்து, பந்தல் அமைக்கப்படும். அங்கே அபிஷேகம் நடைபெறும். இதற்கு `ஊறல் உற்சவம்’ என்று பெயர். அதைத் தொடர்ந்து காந்தி ரோடு வழியாக கோயிலுக்கு வந்தடைவார் வரதர். இந்த வைபவத்தைத் தரிசித்தால் வாழ்வில் சகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும் என்பது நம்பிக்கை.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.