Breaking News :

Tuesday, April 30
.

ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்


நாக சதுர்த்தி

ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டு விசேஷங்களுக்கு பஞ்சமில்லை. இம்மாதத்தில், பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரத பூஜைகளும் நிறைய இருந்தாலும், அதில் முக்கியமானவை நாக சதுர்த்தி மற்றும் கருடபஞ்சமி விரதங்கள் ஆகும்.

காஸ்யப முனிவரின் பத்தினிகளான கத்ரு, வினதை என்பார்களின் புதல்வர்கள் நாகர்கள், கருடன். இவர்களின் மாற்றாந்தாய் உணர்வின் காரணமாகத் தீராப்பகை ஏற்பட, இறுதியில் மஹாவிஷ்ணுவானவர் பாம்பைத் தனது படுக்கையாகவும்; கருடனைத் தனது வாகனமாகவும் ஏற்றருளினார் என்பது புராண வரலாறு.

அருள்மழை பொழியும் 
ஆடி மாதம்... கடைப்பிடிக்க வேண்டிய விழாக்கள், விசேஷங்கள்!
எல்லா தோஷங்களை
யும்விடக் கடுமையானவை சர்ப்ப தோஷங்கள் என்கிறார்கள். ஜன்மாந்திரங்களாகத் தொடரும் தன்மை கொண்டவை. ஒருவர் ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் அமைந்திருந்
தால் திருமணத் தடை, குழந்தையின்மை, காரியத் தடைகள்; எதிலும் முன்னேற்றமில்லாத நிலை ஆகியன ஏற்படும். இவை நீங்கக் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் நாக சதுர்த்தி விரதம். ஆடிமாதத்து வளர்பிறை சதுர்த்தியில் விரதம் ஏற்றுச் செய்ய வேண்டிய பூஜை இது. முற்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்த சர்ப்ப ஹத்யாதி தோஷங்கள் நீங்கி சத்புத்திர ப்ராப்தி கிடைத்திட இந்த விரத பூஜையை அனுஷ்டிப்பது மரபு.

இந்நாளில் விடியற்காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, நீர் நிலைகளின் கரையோரங்
களிலோ, 
ஆலய வளாகங்களி
லோ, உள்ள கல் 
நாகர் திருமேனிகள் அல்லது புற்றுகளிலும் பசும்பாலால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு, பூ சாற்றி, தூப தீபாராதனை செய்து வழிபடுவர்.

நாக சதுர்த்தி
வெல்லம் சேர்த்த எள்ளுப் பொடி, அரிசி மாவு, முளைகட்டிய பச்சைப் பயிறு, காய்ச்சாத பசும் பாலுடன் நாவற் கனிகளும் நிவேதிப்பது சிறப்பு. அருகு மற்றும் நாகலிங்கப் பூ, தாழைமடல், மல்லிகை முதலான மலர்கள் கொண்டு பூஜிப்பது விசேஷம். பின்னர் இல்லத்துக்கு திரும்புகையில் வாயிற் நிலைப் படியில் மஞ்சள் குங்குமம் இட்டு, மலர்கள் தூவி வணங்கிவிட்டு பின் உள்ளே புக வேண்டும் என்பது ஐதிகம். சர்ப்ப உருவங்களை மஞ்சள் கொண்டு நிலைக்
கதவினில் வரைந்து குங்குமத் திலகம் இடுதலும், இயன்றவர்கள் வீட்டினுள் தூய்மையான இடத்தில் கோலமிட்டு, அலங்கரித்த மனையில் பொன், வெள்ளி, தாமிரம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட நாகர் வடிவம் நாகப்ரதிமையை தக்க ஆசனத்தில் அமர்த்தி பூஜிப்பதும் வழக்கம். சதுர்த்தியானது விநாயகருக்கும் உகந்த தினமாக அமைந்து விடுவதால், விநாயகர் சேர்ந்த வழிபாடும் இன்றைய தினம் சேர்வது இறையருள் என்றே சொல்ல வேண்டும்.

விநாயகர்
ஆடி மாதத்திய வளர்பிறை சுத்த பஞ்சமியில் அதாவது நாக சதுர்த்திக்கு மறுதினம் அனுஷ்டிக்க வேண்டியது கருட விரதமாகும். கருடன் பஞ்சமியில் பிறந்த திதி ஆகையால் இந்த தினத்தினை 'கருட பஞ்சமி' என்பர். உடன் பிறந்த சகோதரர்களின் நலனிற்காகவும், விஷ ஜந்துக்களால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் பெண்கள் இதை அனுஷ்டிப்பர்.

முன்தினம் பூஜித்த அதே இடத்திலேயே மாற்றாமல் அன்றைய தினமும் வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். மறுதினமும் முந்தைய நாள் போன்றே நாகர் கல் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும். எள்ளு மற்றும் உளுந்து பூரணம் வைத்த மோதகங்கள், அப்பம், சுழியம், பச்சரிசி இட்லி, பச்சைப் பயிறு சுண்டல், சர்க்கரைப் பொங்கல், போன்றவை
யுடன் இயன்றவற்றை நிவேதித்தல் சிறப்பு.

பின்னர் முதல் நாள் போன்றே அன்றைய தினமும் வாயிற்படியை வழிபட்டு உள் நுழைந்து பூஜையறையில் மீண்டும் வழிபடுதல் ஐதிகம். இப்படி பூஜை செய்பவர்களின் எல்லாவித கோரிக்கைளும் பூரணமாக நிறைவேறுவதுடன், முக்தியும் கிட்டும் என்பது புராணம் சொல்லும் பலன். சர்ப்பங்களுக்குச் செய்யும் வினைகளால் ஏற்படும் தோஷங்களை இவ்விரதம் இருந்து போக்கிக்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
சர்ப்பங்கள் காணும்போதே பயப்படும் கருடபகவானை இந்நாளில் வணங்கிட நமது சர்ப்ப தோஷங்கள் அகன்றிடும் என்பது ஐதிகம். அன்றைய தினம் செய்யும் வழிபாட்டினால் கருடனைப் போன்று அழகும்; ஆற்றலும் கொண்ட புத்திரர்களைப் பெறலாம் என்பர்.

இவ்விரதம் இருப்பதால் கிடைக்கும் பலாபலன்களை ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனாலும் சொல்லிட இயலாது என்பர்.

வியாச மாமுனிவரிடம் பெற்ற இவ்விரதத்தை, சுவீத முனிவர் என்பார் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து பின்னர் பூலோகத்தில் இதன் மகிமை பரவியது என்று கூறுவர். மிகுந்த புண்ணிய பலன்களை அளிக்கவல்ல இவ்விரத பூஜைகளை இயன்ற அளவு கடைப்பிடித்து சர்ப்ப தோஷங்கள் நீங்கப் பெற்று நன்மைகளைப் பெறலாம்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.