அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில், திருப்பாலைவனம்.

arulmigu-paleeswar-temple-tiruppalaivanam
அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில், திருப்பாலைவனம்.

 இறைவன் : பாலீசுவரர்
 இறைவி     : உலகாம்பிகை 
 விருட்சம்    : பாலை மரம் 
  தீர்த்தம்      : அமிர்த தீர்த்தம் 
 ஆகமம்       : காரணாகமம்

திருக்கயிலை நாதன் இப்பூவுலகில் உள்ள எல்லா பொருட்களின் வடிவமாகவும் அவற்றோடு ஒன்றாகக் கலந்தும் அவற்றைக் கடந்தும் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றார். தன்னை நாடி வந்து நாள்தோறும் பக்தியோடு வணங்கும் அடியவர்களின் திருவுள்ளத்திலும் அவர்கள் மனம் உருகி வழிபாடு செய்யும் சிறப்பு வாய்ந்த திருத்தலங்களிலும், அவர்கள் பொருட்டு எழுந்தருளி அருள் மழை பொழிகின்றான் ஈசன்.  அன்பினால் அகம் குழைந்து அவன் பொற்பாத கமலங்களில் சரணடைந்து வணங்கும் பக்தர்களை தானே தேடிச் சென்று வேண்டும் வரங்களை வேண்டிய வாறு வழங்குவான் கயிலை நாதன். 

"நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்" என்று பாடி பரவசப்பட்டுள்ளார் ஞானசம்பந்தப் பெருமான். இவ்வாறு தன்னைத் தேடி வந்து துதிப்பவர்களின் துன்பங்களைக் களைவதற்காக இறைவன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அரிய  திருத்தலம் பொன்னேரிக்கு அருகில் திருப்பாலைவனம் என்னும் தலத்தில் உள்ள அருள்மிகு லோகாம்பிகை சமேத அருள்மிகு பாலீஸ்வரர் திருக்கோயிலாகும்.

தலத்தின் சிறப்பு 
 
தேவர்களும் அசுரர்களும் மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் நாகத்தைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை அமுதம் வேண்டி க் கடைந்தனர். அப்போது முதலில் வெளிப்பட்ட நஞ்சை தனது திருக்கழுத்தில் அடக்கி இவ்வுலக உயிர்களைக் காத்து அருளியதால் "நஞ்சுண்ட கண்டன்" என்ற பெயர் பெற்றார் உமையொருபாகன். அதன் பின்பு தோன்றிய அமுதத்தினை கடத்தில் (குடத்தில்) அடைத்து விட்டு நீராடச் சென்ற தேவர்கள் திரும்பி வந்து அதனை எடுக்க முயன்றனர். அப்போது குடத்தில் இருந்த அமுதத்தின் ஒரு பகுதி பாதாளம் வரை ஊடுருவி இருப்பதையும் மேற்பரப்பில் இருந்த அமுதம் இறுகி கெட்டியாக மாறி லிங்க வடிவமாக இருப்பதையும் கண்ட தேவர்கள் அந்த மூர்த்திக்கு "அமிர்தலிங்கம்" என்றும் "அமிர்தகடேஸ்வரர்" என்றும் பெயரிட்டு பூஜித்து வந்தனர். சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலமே தற்போது "திருக்கடையூர்" என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகின்றது. 

குடத்தில் இருந்த அமுதத்தை சரிபாதியாக ஏற்றுக்கொண்டு நன்மை பெற வேண்டுமென அசுரர்கள் தேவர்களை வற்புறுத்தினர். ஆனால் அசுரர்கள் உண்டால் ஆபத்து என்பதை அறிந்த தேவர்கள் அந்த அமுதத்தை அசுரர்கள் அறியாத வண்ணம் எடுத்துக்கொண்டு மறைவான இடம் தேடி வந்தனர். இறைவனுக்கு பூஜை செய்த பின்னரே அமுதத்தை உண்ண வேண்டும் என்று கருதிய தேவர்கள் தங்கள் கையில் இருந்த அமுதத்தின் ஒரு பகுதியை சிறு லிங்கமாக பிரதிஷ்டை செய்து வைத்து வழிபாடுகள் நடத்தினர். தேவர்கள் அமுதத்தை லிங்க வடிவில் அமைத்து வணங்கிய இடமே "திருப்பாலைவனம்" என்ற திருத்தலமாகும். 

சோழ மன்னனுக்குத் தரிசனம்! 

முதலாம் ராஜேந்திர சோழன் தனது பெரும்படையுடன் வடதிசை சென்று வெற்றி வாகை சூடி கங்கை நீரைக் கொண்டு வருகையில் இத்திருப்பாலைவன த்தில் தனது பரிவாரங்களுடன் பாசறை அமைத்துத் தங்கி இருந்தான். இரவு நேரத்தில் அருகில் இருந்த ஒரு பாலை மரத்தில் அரசனது பட்டத்து யானையையும் குதிரையையும் அவனது வீரர்கள் கட்டி வைத்திருந்தனர். பொழுது விடிந்ததும் பாலை மரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டத்து யானையும் குதிரையும் இறைவனின் சூட்சுமத்தால் மயங்கி விழுந்திருந்தன. இதனை அறியாத மன்னன் அதிர்ச்சி அடைந்து காரணத்தை அறிய தனது படை வீரர்களைக் கொண்டு பாலை மரத்தை வெட்டி பரிசோதிக்கக் கட்டளையிட்டான். வீரர்கள் பாலை மரத்தைக் கோடரி கொண்டு வெட்டும்போது முதலில் பாலும் பின்னர் ரத்தமும் பீறிட்டது. இதைக்கண்டு திகைத்த மன்னன் பாலை மரத்தை பக்குவமாக அகழ்ந்து எடுக்க ஆணையிட்டான். அச்சமயம் பொன்னார் மேனியனின் வெண்ணிற லிங்கம் மரத்தின் மேற்பகுதியில் காட்சி தரக் கண்டு நடந்த தவறுக்கு மன்னித்தருளுமாறு கண்ணீர் மல்க ஈசனிடம் மன்றாடினான் மன்னன். அவனது வேண்டுதலுக்குச் செவி சாய்த்த இறைவன் தனக்கு இத்தலத்தில் திருக்கோயில் அமைத்து வழிபாடுகள் மேற்கொள்ள ஆணையிட மன்னனும் அருள்மிகு பாலீசுவரர் என்ற திருநாமத்துடன் திருக்கோயில் அமைத்து வழிபாடுகள் நடத்தி மகிழ்ந்தான். 


 திருக்கோயில் அமைப்பு 

தெற்கு நோக்கிய நுழைவாயிலை உடைய கோயிலில் முதலில் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது ஆடவல்லானின் அம்பலக் கோயில். அடுத்து முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறையோடு கூடிய அழகிய இச் சந்நிதியில் இறைவன் பாலீசுவரப் பெருமானை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். செவிக்கினிய செந்தமிழாய், நாவிற்கு இனிய பழச்சுவையாய், கண்ணிற்கு இனிய கருவிழியாய் புலன்களுக்கு மட்டுமின்றி மனத்தில் உள்ள அஞ்ஞான இருளை அகற்றும்  "அறிவொளியாக" கருவறையில் அமைக்கப்பட்ட ருத்ராட்ச மண்டபத்தில் அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இறைவனின் கருவறை தூங்கானை மாடம் என்ற யானையின் முதுகு போன்ற அமைப்பில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

ஈசனின் திருச்சந்நிதியைப் போன்று அன்னை உலகாம்பிகை என்னும் லோகாம்பிகையின் சந்நிதியும் முக மண்டபம் அர்த்தமண்டபம் மற்றும் கருவறையோடு அமையப்பெற்று இறைவனின் வலது பக்கத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றாள் அம்பிகை. இதனால் இத்திருக்கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தி வைக்கப்படுகின்றன. லோகநாயகி, பிரியாத நாச்சியார் உலகமாதேவி என்னும் பல திருநாமங்களில் வணங்கப்படுகிறாள் உமையவள். இறைவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் தனிச் சந்நிதியில் ஆறுமுகப்பெருமான் இந்திர மயிலின் மீது அமர்ந்து தேவியர் இருவருடன் அற்புதத் திருக்காட்சி தருகின்றார். 

திருக்கோயிலின் வெளிப் பகுதியில் ராஜகோபுரத்தின் எதிரில் அமைக்கப்பட்டுள்ள 16 தூண்களுடைய ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கோயிலின் தலபுராணத்தை விளக்கும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கூடிய எழிலார்ந்த சிற்பங்கள் கண்ணிற்கு கவின் மிகு விருந்தாக அமையப் பெற்றுள்ளன. 

இறைவனின் திருநாமங்கள் 

தேவர்கள் அமுதத்தின் ஒரு பகுதியை எடுத்து அதில் லிங்கத்தை அமைத்து வழிபாடு செய்து வணங்கியதால் இத்தல ஈசனுக்கு "அமிர்தேசுவரர்" என்றும் பாலை மரத்திலிருந்து வெளிப்பட்டு சோழ மன்னனுக்கு தரிசனம் அளித்ததால் "பாலீஸ்வரர்" என்றும் திருத்தலம் அமையப்பெற்ற இடம் பாலை மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் "பாலைவனநாதர்" என்றும் பல திருநாமங்களில் அழைக்கப்படுகின்றார் ஈசன். அமுதத்தால் ஆன ஈசன் என்பதால் இறைவனின் திருமேனிக்கு வெப்பத்தன்மையில்லாத பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகின்றது. 

அமிர்த தீர்த்தம் 

பாலை மரம் தலவிருட்சமாக அமையப்பெற்ற இத்தலத்தின் தீர்த்தம் "அமிர்த தீர்த்தம்" என்று அழைக்கப்படும் சக்தி வாய்ந்த தீர்த்தமாகும். அமுதம் அருந்திய தேவர்கள் தங்களது திருக்கரங்களை இத்தீர்த்தத்தில் சுத்தம் செய்து கொண்டனர். அமுதம் பதிந்த கைகளை தேவர்கள் இக்குளத்தில் கழுவியதால் அமுதம் கலந்த நீரை அருந்துவதற்காக அசுரர்கள் தவளை உருவம் தாங்கி குளத்திற்குள் செல்ல முயன்றனர். இதனை தங்களின் சூட்சும சக்தியினால் அறிந்த தேவர்கள் தவளை போன்ற ஜீவராசிகள் இத்திருக் குளத்தில் நுழையக் கூடாது என சாபமிட்டனர். இதனால் இத்திருக்குளத்தில் இன்றும் தவளைகள் வாழ்வதில்லை என்பது அதிசயமான உண்மையாகும். 

புராதனப் பெருமை 

திருக்கோயிலின் பழைமையை பறைசாற்றும் 71 கல்வெட்டுகள் இத்தலத்தில் உள்ளன. தமிழ், தெலுங்கு, வடமொழி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் கல்வெட்டுகள் காணப்படுவது இத்திருக்கோயிலின் பெருமைகள் பல பகுதிகளிலும் பரவிப் போற்றப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசர் களால் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் நடத்தி வைக்கப்பட்டு நன்கொடையாக நிலமும் தீபம் ஏற்றுவதற்கு பொற்காசுகளும் அளிக்கப் பட்டுள்ளன. 

திருவிழாக்கள் 

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் திருக்கோயில் வலமும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் பிரதோஷ வழிபாடு ஏற்பட்டதற்கான நிகழ்வோடு இத்தலபுராணம் தொடர்பு கொண்டிருப்பதால் பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் செய்பவர்கள் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கப் பெறுவர் என நம்பப்படுகிறது. ஆடி மாதம் அனைத்து வெள்ளிக்கிழமை களிலும் அன்னை லோகாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யமும் மஞ்சளும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் தெப்போற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது. 

பரிகாரத் தலம்

அகத்திய முனிவரும் மார்க்கண்டேய முனிவரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு இன்புற்று இருக்கின்றார்கள். நாக தோஷத்தின் காரணமாக திருமணத்தடைகள் ஏற்பட்டு மணமாகாமல் உள்ளவர்களும் புத்திர பாக்கியம் ஏற்படாமல் இருப்பவர்களும் நரம்பு சம்பந்தமான உடல் உபாதை உள்ளவர்களும் இத்தலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தோஷம் நீங்கப் பெற்று நல்ல மண வாழ்க்கையும் பல் வகைச் செல்வங்களையும் உடல் நலமும் பெற்று மகிழ்வார்கள். பரம்பரை நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் எல்லா வகையான செல்வங்களைப் பெற்றிருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இழந்து தவிப்பவர்களும் இத்தலத்தில். "ஏகாதச ருத்ர ஜெபம்" நடத்தி இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை அருந்தினால் உடல் நலிவு நீங்கப்பெற்று நிறைவான வாழ்க்கை அமையப்பெறு வார்கள். 

மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளும் ஒருங்கே அமையப் பெற்று நம் தமிழ் திரு நாட்டின் பழம் பெருமையையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இத்திருக் கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பையூர் கோட்ட வேளாள மரபினரால் இத்திருக்கோவில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. 

சென்னையிலிருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் பொன்னேரிக்கு அருகில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம். மின்சார ரயில் மூலமாகவும் பொன்னேரிக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக திருப்பாலைவனம் செல்லலாம்.
  
மேலும் விபரங்களுக்கு திருக்கோயிலின் அர்ச்சகர் அவர்களை 94441 60766 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.