ரேஷனில் விரைவில் தேங்காய் எண்ணெய்? - பொள்ளாச்சி எம்எல்ஏ
ரேஷன் கடைகளில் தேங்காய் விநியோகம் செய்ய வேண்டும் என பொள்ளாச்சி கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் பொள்ளாச்சியை மாவட்டமாக்கவும் கேட்டுக் கொண்டார்.
இந்த சட்டசபை கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பொள்ளாச்சி கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன் பேசுகையில், ஆணைமலை, கிணத்துக்கடவு, உடுமலை, வால்பாறை மலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100 கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவம் உள்ளிட்ட தங்களது நியாயமான உரிமைகளை பெற்று வருவதற்காக 50 முதல் 100 கி.மீ. தூரம் வரை உள்ள கோவைக்கு செல்வதை தவிர்க்க பொள்ளாச்சி, ஆணைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு வட்டங்களை உள்ளடக்கி பொள்ளாச்சியை மாவட்டமாக்க வேண்டும்.
கோபியையும் ஆத்தூரையும் தலைமையிடமாக கொண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை இன்னும் பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். பொள்ளாச்சி பகுதி பசுமையின் முகவரியாகவும் , விவசாயத்தில் செழித்து விளங்கும் தென்னை மண்டலமாகவும் உலகளாவிய அளவில் திகழ்கிறது என்றால் அதற்கு இயற்கை தந்த கொடை ஒரு புறம் இருந்தாலும் இன்னொரு முக்கியமான காரணம் அப்பகுதி விவசாயிகளாலும் பொதுமக்களாலும் தெய்வத்திற்கு நிகராக போற்றப்படும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன திட்டமே ஆகும்.
பொள்ளாச்சி மட்டுமில்லை, கொங்கு மண்டலத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் பாசன நீர் தேவையையும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும் நிறைவு செய்வது இந்த மண்ணிற்கு வாழ்வாதாராமாக இருக்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டமாகும்.
அரபிக் கடலில் வீணாக பாய்ந்த தண்ணீரை கொங்கு மண்டலத்தின் தாகம் தீர்க்க கிழக்கு நோக்கி திருப்பி வரலாற்று சிறப்புமிக்க பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்திற்கு உயிர் கொடுத்து பொள்ளாச்சியை பசுமையின் முகவரியாக மாற்றி அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த காமராஜரை முதலில் வணங்குகிறேன்.
இந்த திட்டம் சாத்தியமாக தோள்கொடுத்து பொள்ளாச்சி மண்ணில் பிறந்து இந்திய நாட்டின் நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்று தேசத்தின் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட பாரதரத்னா சி.சுப்பிரமணியத்தையும் அன்றைய காலகட்டத்தில் பொள்ளாச்சி சட்டசபை உறுப்பினராக இருந்து நா.மகாலிங்கத்திற்கும் வணக்கம்.
1952 ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டசபை உறுப்பினராகவும் மெட்ராஸ் மாகாண மேலவையின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்த பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் மண்ணில் விவசாயிகளின் குரலாக பழனிசாமிக்கு எனது நன்றிகள்.
இந்த 4 ஆளுமைகளுக்கும் பொள்ளாச்சியில் சிலை அமைத்து பெருமை சேர்த்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பரம்பிக்குளம்- ஆழியார் திட்டத்தின் ஒரு பகுதிதான் ஆணைமலையாறு நல்லாறு. இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என கூறிய தவெக அரசுக்கு எனது நன்றிகள்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு மிக முக்கியமான ஒரு மேலாண்மை திட்டம்தான் ஆணைமலையாறு நல்லாறு திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் அந்த பகுதியில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதுடன் குடிநீர் தேவையும் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஆணைமலையாறை பொருத்தமட்டில் 1958 ஆம் ஆண்டில் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தப்படி, ஆணைமலையாற்றின் குறுக்கே அணை கட்டி அதில் ஆண்டுதோறும் கிடைக்கும் 2.5 டிஎம்சி நீரை, தமிழகத்திற்கு திரும்பி வரும் ஒப்பந்தம்தான் ஆணைமலையாறு திட்டம்.
அது போல் நல்லாறு என்பது மேல்நீராணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை 150 கி.மீ. தூரம் கால்வாய் வழித்தடத்தின் வழியாக செல்வதற்கு பதிலாக நல்லாறு பகுதியில் ஒரு நீர்த்தேக்கத்தை உருவாக்கி 14 கி.மீ. தூரத்தில் உள்ள திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லலாம். 140 கி.மீ.ருக்கு பதிலாக 14 கி.மீ.ருக்கு தண்ணீரை கொண்டு செல்வதால் எவ்வளவு தண்ணீர் மிச்சமாகும் என்பதை பாருங்கள். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், திருப்பூர் , சூலூர், காங்கேயம் உள்ளிட்ட தொகுதிகளில் விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
பணம் கட்டி காத்திருப்போருக்கு இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். கள் இறக்க அனுமதி தர வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்தால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் என நித்தியானந்தன் தெரிவித்துள்ளார்.