சட்டசபையில் சிஎம் விஜய் அதிரடி - பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று முக்கியமான அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய் இந்தத் தீர்மானத்தை முன்வைத்தார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதே தீர்மானத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளாக 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்ட மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை காரணமாக அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படக்கூடாது என்றும், பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் நலனை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மக்களவை இடங்களின் தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வும் மாற்றமின்றி தொடர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அதேபோல், மக்களவை மற்றும் மாநிலங்களவை இடையேயான தற்போதைய 2.2:1 என்ற விகிதத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டையும் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, தற்போதுள்ள 543 மக்களவை தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும், அதன்பின்னர் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசினர் தீர்மானத்தின் மீது தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.