அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில், நந்திவரம், கூடுவாஞ்சேரி.
இறைவன் : நந்தீஸ்வரர்
இறைவி : சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் : நந்தி தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி உள் வட்டத்தில் நந்திவரம் என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த நந்திவரம் என்ற ஊரே பல்லவ மன்னர் நந்திவர்மன் பெயரை நினைவுபடுத்துவதாக உள்ளது. இதனால் இத்திருக்கோவில் பல்லவர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பழைமையான கோயில் என்பதை அறிய முடிகின்றது. நந்திவர்மன் இத்திரு க்கோயிலைக் கட்டியதால் இக்கோயில் "நந்தீஸ்வரம்" என்று அழைக்கப்படுகின்றது.
இந்த ஊரில் உள்ள ஒரு கல்வெட்டு சதாசிவருடைய ராயசம் வெங்கடாத்ரி, தன் நியாயக் கட்டளை கிராமமான "நம்பிராயபுரம்" என்ற பிள்ளைப் பாளையத்தைப் பெருந்தவனப் பெருமாள் கோயில் பழுது பார்க்கவும் பராமரிக்கவும் வேண்டி கொடை அளித்துள்ளார்.
(1934-No.34 காலம் 6.8.1550 ஆகும்)
நந்திவரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் தனிக்கல்லில் ஒரு கிரந்த சாசனம் உள்ளது. நந்திபுரத்தை சேர்ந்த சேக்கிழான் குட்டோன் என்பவன் கோயிலில் விளக்கு ஒன்றை வைத்த விவரம் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நந்திபுரம்" என்ற ஊரே தற்போது "நந்திவரம்" என்று வழங்கப்படுகின்றது.
இத்திருக்கோயிலில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமான் கருவறையில் கிழக்கு நோக்கிய திருமுக அமைப்பில் காட்சி தருகின்றார். வெளிப்புறப் பிராகாரத்தில் கிழக்குப்வ பக்கத்தில் பால பீடமும் நந்தியும் உள்ளன. கருவறையின் தேவகோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.
திருக்கோயிலில் உள்பிராகார வலத்தில் வலம்புரி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், வீரபத்திரர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வெளிப்பிராகாரத்தில் நவக்கிரகங்களும் மற்றும் பெருமாளுக்கு சன்னதியும் உள்ளது.
9 -அல்லது 10-ம் நூற்றாண்டினைச் சார்ந்ததாக கருதப்படும் ஒரு அழகான ரிஷபம் நாகலிங்க மரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
சோழப் பேரரசர் ராஜராஜனின் இருபதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் (கிபி 1005) இல் நந்தீஸ்வரர் திருக்கோயிலில் தொடர்ந்து தீபம் ஏற்ற "அமுத முத்தரையன்" என்பவர் 90 சாவா மூவாப் பேராடுகளை "கழைச்சிங்க மன்றாடியார்" என்பவரிடம் ஒப்படைத்த செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்தக் கல்வெட்டு நந்தீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள ஒரு பலகைக் கல்லின் மேல் காணப்படுகிறது. (Courtesy: Sankar Narayanan )
தல வரலாறு
செல்வந்தர் ஒருவரின் பசுக்களை இடைச்சிறுவன் ஒருவன் மேய்த்து வந்தான். அவற்றுள் ஒரு காராம்பசு மட்டும் தன் மந்தையிலிருந்து பிரிந்து சென்று ஒரு புதரில் பாலை சொரிந்து விட்டு மீண்டும் வந்து மந்தையில் சேர்ந்து கொள்ளும். இதனால் காராம் பசு வீட்டில் சரியாக பால் கறப்பதில்லை. செல்வந்தரும் மாடு மேய்க்கும் இடைச்சிறுவனிடம் கேட்க, அவனும் அப்பசு தனியே சென்று வரும் செயலைச் சொன்னான். இடைச்சிறுவனின் வார்த்தையை நம்பாத செல்வந்தர் மேய்ச்சல் பகுதிக்குச் சென்று காராம் பசு ஒரு புதருக்குள் சென்று வருவதைக் கண்டார். புதரை வெட்டிப் பார்க்கும்போது அப்புதரில் இருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. புதரினை வெட்டும்போது நந்தியின் மீதும் வெட்டுப்பட்டதால் அந்த வடு இன்றும் சிவலிங்கத் திருமேனி யின் மீது காணப்படுகின்றது. புதரில் இருந்து கண்டெடுக்கப் பட்ட இந்த லிங்கத் திருமேனிக்கு பல்லவ மன்னன் நந்திவர்மன் திருக்கோயில் அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டான்.
நந்தீஸ்வரர்
நந்திவர்மன் இக்கோயிலைக் கட்டியதாலும், நந்தி எம்பெருமான் இத்தலத்தில் பூஜை செய்து வழிபட்டதாலும் இந்த எம்பெருமானுக்கு "நந்தீஸ்வரர்" என்ற திருநாமம் ஏற்பட்டது. நந்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஈசன் அருளும் திருக்கோயில் என்பதால் இத்தலத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பிரதோஷ காலத்தில் நந்தி எம்பெருமானை நமது நியாயமான கோரிக்கை களுக்காக வணங்கினால் நமது வேண்டுதல்கள் நிறைவேறுவ தாக பக்தர்கள் தெரிவிக்கின் றனர்.
சௌந்தர நாயகி
நந்திவரம் தலத்தில் அருள் பாலிக்கும் அம்பிகையின் திருநாமம் சௌந்தரநாயகி என்பதாகும். "சௌந்தர்யம்" என்றால் அழகு. தன் திருநாமத்திற்கு ஏற்ப அழகிய வடிவுடைய நாயகியாக காட்சியளிக்கின்றாள் சௌந்தரநாயகி. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் பௌர்ணமி நாட்களிலும் இந்த அம்பிகையை வழிபட நன்மைகள் உடனடியாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இத்தலம் திருநாவுக்கரசர் பெருமானால் பாடப் பெற்ற பதிகம் கொண்ட வைப்புத் தலமாகும். இத்தலத்தில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தக் கோயிலின் எதிரில் அழகிய புனித தீர்த்தம் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் காலை 7.00 மணி முதல் 11:30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது நந்திவரம் நந்தீஸ்வரர் திருக்கோயில்.