அருள்மிகு திருவெண்காடுடையார் திருக்கோயில், கடப்பேரி, மதுராந்தகம்
இறைவன் : திருவெண்காட்டீசுவரர்
இறைவி : மீனாட்சி
தீர்த்தம் : விஷ ஹர தீர்த்தம்
விருட்சம் : வெண் கொக்கு
மந்தாரை
ஆகமம் : சிவாகமம்
மதுராந்தகத்திலிருந்து சூனாம்பேடு செல்லும் சாலையில் மதுராந்தகம் நகரின் எல்லையிலேயே கடப்பேரி என்னும் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை திருவெண்காட்டீசுவரர் திருக்கோயில்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன் "திருவெண்காட்டீசுவரர்" என்றும் வடமொழியில் "சுவேதாரண்யேஸ்வரர்" என்றும் வழங்கப்படுகின்றார். "ஸ்வேதா" என்றால் "வெண்மை" என்றும் "ஆரண்யம்" என்றால் "காடு" என்பதும் பொருளாகும். இப்பகுதி "வெண் கொக்கு மந்தாரை" என்னும் மரங்கள் அதிகமாக வளர்ந்து இதிலிருந்து பூக்கும் வெள்ளைப் பூக்கள் இப்பகுதி முழுவதும் காட்சி அளித்துள்ளன. இதனால் இப்பகுதி "ஸ்வேதாரண்யம்" என்று வழங்கப்பட்டதால் இத்தல ஈசனுக்கு "ஸ்வேதாரண் யேஸ்வரர்" என்றும் தமிழில் "திருவெண்காட்டீஸ்வரர்" என்றும் திருநாமம் ஏற்பட்டுள்ளது.
பல்லவர் காலத்திலிருந்து விளங்கும் இத்திருக்கோயிலின் ஈசனை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கண்டெடுத்து திருக்கோயில் அமைத்து வழிபட்டுள்ளனர் அக்காலத்தில் அரசாண்ட மன்னர்கள்.
இத்தலத்தின் இறைவன் "திருவெண்காடுடைய மகாதேவர்" என்று வழங்கப்படுவதை இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்தில் மொத்தம் 27 கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன. திருக்கோயிலின் கட்டட அமைப்புகள் மற்றும் காலத்தால் முந்தைய கல்வெட்டுகள் காரணமாக மதுரை கொண்ட ராஜகேசரியான இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனின் காலத்தில் இத்திருக்கோயில் கற்றளியாகப் புனரமைக்கப்பட்டுள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பராந்தக சோழன் மதுரையை வென்று "மதுராந்தகன்" என்ற பட்டப் பெயரைப் பெற்றதால் அவனது நினைவாக இந்த ஊருக்கு "மதுராந்தகம்" என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. "மதுரைக்கு அந்தகன்" அதாவது "மதுரையை அழித்தவன்" என்ற பொருள்பட பராந்தக சோழனுக்கு வழங்கப்பட்ட பெயரே "மதுராந்தகம்" என்ற ஊராக ஆனது.
கல்வெட்டுகளில் மதுராந்தகம், "மதுராந்தக சதுர்வேதி மங்கலம்" என்றும் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டம்" என்றும் "தனியூர்" என்றும் வழங்கப்பட்டுள்ளது.
சுந்தர சோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இத்தல இறைவனை "திருவெண்காட்டுப் பரமேஸ்வரர்" என்று குறிப்பிடுகின்றது.
முதலாம் ராஜராஜ சோழனின் இரண்டு கல்வெட்டுகள் இத்தலத்தில் உள்ளன. முதல் கல்வெட்டு இக்கோயிலில் வைகாசித் திருவிழா நடத்த 25 பொற்காசுகள் தானமாக அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. இரண்டாவது கல்வெட்டு திருவெண்காட்டுப் பெருந்தெருவைக் குறிப்பிட்டு அதில் அந்தணர், உவச்சர், (பூசாரி ) தபஸ்வி மற்றும் தேவரடியார்களைக் குடியமர்த்திய செய்தியைத் தெரிவிக்கின்றது.
முதலாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுகள் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. கோயிலின் அருகில் இருந்த "தில்லைவாழ் அந்தணன்" மடத்தில் சிவயோகிகளுக்கும் துறவிகளுக்கும் அன்னதானம் அளிக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் காணப்படுகின்றது.
மூன்றாம் குலோத்துங்கனின் 15 ஆவது ஆட்சி ஆண்டில் பல்லவ மரபில் வந்த செங்கேணி சாத்தன் சோழனான "வாணாதி ராஜன்" என்பவன் திருவெண்காடுடைய மகாதேவர் கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதைக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது.
விக்கிரம சோழனுடைய ஆட்சியின்போது தினசரி பூஜைக்காகவும் தீபம் ஏற்றவும் கொடைகள் வழங்கப்பட்டதையும் மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சிக் காலத்தில் வீர சம்புவராயன் கிபி 1230 ஆம் ஆண்டில் பங்குனி உற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்ததையும் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
விக்கிரம சோழனுடைய கல்வெட்டு இவனது மனைவி பெயரில் "புவனம் முழுதும் உடையாள் பெருந்தெரு" இருந்ததைக் குறிப்பிடுகின்றது.
குலசேகரபாண்டியனின் படைத்தலைவன் மதுராந்தக த்தில் திருவெண்காட்டு மகாதேவர் கோயிலின் திருநடை மாளிகையில் "பாண்டீஸ்வரம் உடைய நாயனார்" மற்றும் "புவனபதி நாச்சியார்" திருமேனிகளை எழுந்தருளச் செய்து பூஜைகளுக்கு நிவந்தங்கள் வழங்கி உள்ள செய்தி கல்வெட்டில் உள்ளது. இவன் பாண்டி மண்டலத்துக் கீழ்க்களக் கூற்றத்துச் சோழமாணிக்க நல்லூர் என்னும் மணப்படை வீட்டைச் சேர்ந்த கைக்கோள முதலிகளில் விரதம் முடித்த பெருமாள் மகன் திருநெல்வேலி உடையான் ஆவான்.
கிபி 1448ல் விஜயநகர மன்னர்கள் காலத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கருங்குழி என்ற ஊர் தேவதானமாக திருவெண்காடுடைய மகாதேவர் கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது
எச்சூர் திருமலை குமாரத் தாத்தாச்சாரியாரின் முகவரான கோனேதி அய்யன் அடமானம் வைக்கப்பட்டிருந்த கோயில் நிலங்களை மீட்டு மீண்டும் கோயிலுக்கே அளித்துள்ளான்.
கிபி 1630 இல் மல்லையன் என்பவன் திருக்கோயிலுக்குப் பிராகாரம் அமைத்துத் திருப்பணி செய்துள்ளான். திருப்புலிப் பரக்கோயில் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு திருவெண்காடு உடையார் கோயிலுக்கு இரண்டு மா நிலம் விடப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. (1896/129-138 மற்றும் 1921/302-307)
இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டு புனரமைக்கப்பட்டு பஞ்சவர்ணங்கள் தீட்டி மிகவும் அழகாக உள்ளது. கருவறையில் வெண்காட்டீஸ்வரர் கிழக்குத் திருமுகமாக எழுந்தருளியுள்ளார். அம்பிகை மீனாட்சிக்குத் தனிச் சன்னதி உள்ளது.
இத்தலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களின் பொருட்டு காலபைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என நான்கு பைரவர்கள் அருள்பாலிப்பது சிறப்பாகும்.
இத்தலத்தில் உள்ள "விஷ ஹர தீர்த்தத்தில்" நீராடி இறைவனை வணங்கினால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்று தெரிவிக்கின்றனர். இந்த தீர்த்தம் என்றும் வற்றாமல் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை "மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே" என்று அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடி மகிழ்ந்துள் ளார்.
இத்திருத்தலத்திற்கு பிப்ரவரி 2025ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் விபரங்களுக்கு, இத்தலத்தின் சிவாச்சாரியார் திரு மகாதேவன் அவர்களை 99947 14378 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.