அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில், பெரும்பேர் கண்டிகை.

thaanthondreeswar-temple-perumber-kandigai
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில், பெரும்பேர் கண்டிகை.

   இறைவன் : தான்தோன்றீசுவரர்
   இறைவி     : தடுத்தாட்கொண்ட 
                            நாயகி 
  விருட்சம்     : திரு ஆத்திமரம் 
  ஆகமம்        : சிவாகமம்

திருக்கயிலாய மலையில் ஈனுக்கும் அம்பிகைக்கும் திருமணம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேவர்கள், மகரிஷிகள் உள்ளிட்ட அனைவரும் அங்கு கூடியிருந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்தும் தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. 

குறுமுனியான அகத்திய மகரிஷியை அழைத்த ஈசன், தென்பொதிகை மலைக்குச்  செல்லுமாறு ஆணையிட்டார். தான் வேண்டும் இடங்களில் எல்லாம் ஈசன் உமையவளோடு தமக்குத் திருமணக் கோலத்தைக் காட்டியருள வேண்டும் என்ற வரத்தைப் பெற்று, பொதிகை மலை நோக்கிப் புறப்பட்டார் அகத்திய மகரிஷி. 

அவ்வாறு செல்லும் வழியில் "பெரும் பேறு"என்ற இந்தப் பகுதிக்கு வந்து "சஞ்சீவி மலை" மீது அருள்பாலிக்கும் ஆறுமுகப்பெருமானை வழிபட்டார் அகத்திய மகரிஷி. இத்தல முருகனை வழிபாடு செய்த பின்னர், இத்தலத்தில் உள்ள தான்தோன்றீசுவரரை வழிபாடு செய்தார். இந்த ஆலயத்தில் ஈசனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பிய அகத்தியர், இத்தலத்தின் விருட்சமான ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்தார். 

இச்சமயத்தில் திரிபுராந்தகர்களை அழிக்கப் புறப்பட்ட ஈசனுக்கு அகத்தியரின் தவத்தைக் கூறிய அம்பிகை, அவரைத் தடுத்து, அகத்தியருக்கு திருமணக் கோலத்தை காட்டியருள வேண்டுமென ஈசனிடம் கோரிக்கை வைத்தார். அம்பிகையின் கோரிக்கையை ஏற்ற ஈசன் அகத்தியருக்குத் தம் திருமணக் கோலத்தை காட்டி அருளினார். அம்பிகையோடு ஈசன் காட்டி அருளிய திருமணத் திருக் காட்சியை ஆறுமுகப் பெருமானும் அகத்தியரோடு கண்டு மகிழ்ந்தார். 

திரிபுராந்தகர்களை அழிக்கச் சென்ற ஈசன் அகத்தியர் தவத்தை முன்னிட்டு தடுத்தாட்கொண்டு பெரும் பேறு தலத்திற்கு அன்னை பார்வதி ஈசனை அழைத்துக் கொண்டு வந்ததால், இந்த அன்னைக்கு "தடுத்தாட்கொண்ட நாயகி" என்ற திருநாமம் ஏற்பட்டது. 

தான்தோன்றீசுவரர்

"தான்தோன்றீசுவரர்" என்பதற்கு தானே சுயம்புவாக உருவான திருமேனி என்பது பொருளாகும். அதாவது, சிற்பியால் உளி கொண்டு வடிக்கப்படாத திருமேனி இந்த ஈசனின் திருமேனியாகும். ஈசனின் திருமேனி மணலால் உருவான திருமேனி என்பதால் எப்போதும் இத்திருமேனிக்கு கவசம் சாற்றப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்த ஈசனுக்கு "கோமடி" (பசுவின் பால்மடி) சங்கினைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது இத்தலத்தில் மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஈசனுக்கு கோமடி சங்கினால் செய்யப்படும் அபிஷேகத்தைக் காண்பவர்களின் பூர்வ ஜென்ம பாவங்களும் தீர்வதோடு இப்பிறவியில் செய்த பாவங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கின்றார் இத்திருக் கோயிலில் ஈசனுக்கு அன்றாட பூஜைகள் செய்யும் சிவாச்சாரியார். 

மேலும் கோமடி சங்கு அபிஷேகத்தைக் காண்பதாலும் இந்த ஈசனை தரிசனம் செய்வதாலும் வாழ்க்கைப் பாதையில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கின் றனர் இங்கு வழிபாடு செய்த அன்பர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் வாரம் சூரியனின் ஒளி மூலவர் மீது விழுவதும் அற்புதத் திருக்காட்சி யாகும்.

இந்த ஆலயத்தில் சண்டன், முண்டன் என்ற அசுரர்களை வதம் செய்த "சாமுண்டீஸ்வரி" அம்மன் "ரணபத்ர காளியாக" தனிக் கோயில் கொண்டு எழுந்தருளி யுள்ளார். கனகதுர்க்கை அம்மன், மகாகணபதி, அன்னபூரணி, அகத்தியலிங்கம், காலபைரவர், நாகர், நவக்கிரகங்கள், அகத்திய முனிவர் ஆகியோரது  திருமேனிகளும் இத்தலத்தில் வழிபாட்டில் உள்ளன. 

இக்கோயிலில் உள்ள கனகதுர்க்கை அம்மனின் திருவுருவச் சிலை பல்லவர் காலத்தில் வடிக்கப்பட்ட திருமேனியாகும். பல்லவர் கால சிற்ப நுணுக்கங்களுடன் காணப்படும் இந்த கனக துர்க்கை அம்மனையும் தான்தோன்றீசுவர ரையும் வழிபாடு செய்த பின்னரே பல்லவ மன்னர்கள், எதிரி நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றிகளைக் குவித்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. அனைத்துத் தலங்களிலும் எருமைத் தலை மீது காட்சி தரும் துர்க்கை இங்கு மான் வாகனத்தில் காட்சி தருகின்றார்.

இரண்டு தூண்களில் யாளி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த யாளிக்குள் உருளும் பந்து ஒன்று செதுக்கப்பட்டு இருப்பது அதிசயமான சிற்பமாகும். 

மேலும் இரண்டு தூண்களில் சிவபெருமான் வேதக்குதிரை யின் மீது சவாரி செய்யும் சிற்பம் ஒரே கல்லில் செதுக்கப் பட்டுள்ளது.


கல்வெட்டுகள் 

சோழ மன்னர்களின் காலத்தில் அந்தணர்களுக்கும் பணியாளர் களுக்கும் சம்பளமாகப் பொற்காசுகள் தருவதற்குப் பதிலாக நிலங்கள் ஊதியமாக வழங்கப்பட்டன. அப்படி தரப்படும் நிலங்களுக்குப் "பேறு" என்று பொருள். பெரிய அளவில் நிலம் தரப்பட்டால் "பெரும் பேறு" என்றும் சிறிய அளவில் நிலங்கள் வழங்கப்பட்டால் "சிறு பேறு" என்றும் இந்த நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி வழங்கப்பட்ட நிலப்பகுதி தான் தற்போது "பெரும்பேர் கண்டிகை" என்று வழங்கப்படுகின்றது. இத்தலத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் "சிறுபேர்" என்ற ஊரும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

"கண்டி" என்பது குதிரையின் கழுத்தில் உள்ள பட்டையைக் குறிக்கும். சோழ மன்னர்கள் ஆட்சி நடைபெற்ற காலத்தில் இவ்வூரில் "பாடி வீடு" (படைவீடு ) அமைத்துப் படைவீரர்கள் குதிரைப் படையுடன் தங்கி இருந்ததாகவும் இதனால் இப்பகுதிக்கு "பெரும்பேர் கண்டிகை" என்றும் பெயர் ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். 

"பெரும் பேறூர்" என்று வழங்கப்பட்ட இந்த கிராமம் மதுராந்தக சதுர்வேதி மங்கலத்தின் உட்கிடை கிராமமாக இருந்துள்ளது. வீர ராஜேந்திர சோழனின் ஏழாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1070) மதுராந்தகத்தைச் சார்ந்த கிராம மக்கள் "திரிபுவன நல்லூர்" என்று வழங்கப்பட்ட பெரும்பேறு கிராமத்தின் தரிசு நிலங்களை மேம்படுத்தி அதில் செந்நெல் பயிரிட்டு இந்த நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசியின் திருவமுதை தான்தோன்றீசுவரருக்கு படைக்கவும், மீதி நெல்லை திருக்கோயில் பணியாளர்க ளுக்கு சம்பளமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டதைத் தெரிவிக்கின்றது. செந்நெல் என்பது உயர் சன்னரக "சம்பா" நெல் ஆகும். 

கல்வெட்டுகளில் இறைவனின் திருநாமம் "திருத்தான் தோன்றி மகா காரணிசுவரர் " என்று வழங்கப்பட்டுள்ளார். 

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் தீபமேற்றவும் தீபத்திற்காக நெய் வழங்கவும் 10 பசு மாடுகள் தானம் அளித்ததை கிபி 1079 ஆம் ஆண்டின் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இரண்டாம் இராஜராஜனின் 18 வது ஆட்சி ஆண்டில் (கிபி 1164) சந்தி விளக்கு ஏற்ற நான்கு பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடு கின்றது.

குலோத்துங்க சோழனின் பதினோராவது ஆட்சி ஆண்டில் கிபி 1181 மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி சபை என்ற அமைப்பு பெரும் பேறூரில் காரணீசுவரர் கோயிலுக்குரிய சில நிலங்களின் மேல் விதிக்கப்பட்டிருந்த "அந்தராய மகன்மை" என்ற வரியைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. 

சிறந்த பரிகாரத் தலம்

வேண்டும் வரங்களை பக்தர்கள் வேண்டியவாறு அருளும் தான்தோன்றீசுவரர் சன்னதியிலும் தடுத்தாட்கொண்ட நாயகி சன்னதியிலும் வணங்கிப் பயன்பெற்ற அன்பர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து தங்கள் பிரார்த்தனை களை நிறைவேற்றுகின்றனர். 

பில்லி, சூனியம், ஏவல், மாந்திரீகம் போன்ற எதிர்மறை சக்திகளின் பிடியில் சிக்கித் தவிப்பதாகக் கருதுபவர்கள் இங்குள்ள "ரண பத்ரகாளி அம்மன்" சன்னதியில் பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனால் இவர்களை விட்டு தீய சக்திகள் விலகுவதாக நம்பிக்கை உள்ளது. கனக துர்க்கை அம்மனை வழிபட திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுவதாகத் தெரிவிக்கின்றனர். 

இத்தல ஈசன் தான்தோன்றீசுவரர் தனது திருக்கோயிலுக்கு வருகை புரிந்து வழிபடும் அன்பர்களின் சோதனைகளைக் களைந்து சகல வெற்றிகளையும் நன்மைக ளையும் அளிப்பதோடு பல சாதனைகள் நிகழ்த்தவும் திருவருள் புரிகின்றார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் நூறாவது கிலோமீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலைக்கு மேற்கே சிறிது தூரம் பயணித்தால் பெரும்பேர் கண்டிகை தான்தோன்றீசுவரர் திருக்கோயிலை அடையலாம். 

மேலும் விபரங்களுக்கு தான்தோன்றீசுவரர் திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் திரு ஆர் ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் அவர்களை 99529 65215 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.