அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், பெரும்பேர் கண்டிகை
இறைவன்: சுப்ரமணிய சுவாமி
இறைவி : வள்ளி,
தெய்வானை
விருட்சம் : ருத்ராட்ச மரம்
தீர்த்தம் : சஞ்சீவி தீர்த்தம்
தவ யோகிகள் தவம் செய்யும் பழநிப் பதியில் ஞானத்தின் வடிவமாக ஆண்டிக் கோலத்தில் அருளும் முருகப்பெருமான், "ஓம்" எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்த்தும் சிவகுருநாதனாக சுவாமி மலையிலும், அசுரன் சூரபத்மனை வதம் செய்த பின்னர் மயில் மீதில் நடனமிடும் வெற்றித் திருக்கோலத்தில் திருச்செந்தூரிலும், தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் மதி ஒளிரும் வனம் சூழ்ந்த திருப்பரங்குன்றத்திலும், கோபம் குறைந்து கருணைக் கடலாக தன்னை வணங்கும் பக்தர்களை நல்வழிப்படுத்தும் நாயகனாக திருத்தணிகையிலும், நறுந்தமிழ் மொழி பேசி கொஞ்சிடும் குமரனாக கூர் வடிவேலுடன் பழமுதிர்ச் சோலையிலும் தன் அடியவர் களுக்கு ஆறுபடை வீடுகளில் அருள் ஆட்சி செய்கின்றார்.
வீரம், புகழ், செல்வம், கொடை, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுகுணங்களே முருகப் பெருமானுக்கு ஆறு திருமுகங்களாக அமைந்தன என்று கந்தபுராணம் கூறுகின்றது. "ஆறு தலையர் அருள் செய் ஆறுதலையாய்" என "சுவாமிமலை நவரத்தின மாலை" என்னும் நூல் முருகப் பெருமானைப் போற்றுகின்றது. இவ்வாறு ஆறுமுகப் பெருமானுக்கு உகந்தது, உரியது எல்லாமே ஆறு தான். முருகனுடைய திருமந்திரம் "சடாட்சரம்" என்னும் ஆறு எழுத்துகளைக் கொண்ட திருமந்திரம் ஆகும். கந்தப் பெருமானுக்கு உகந்த நாள் சஷ்டி என்னும் வளர்பிறைத் திதியின் ஆறாவது நாளாகும். ஈசனின் திருமுகத்திலிருந்து ஆறு தீப்பொறிகளாக வெளிப்பட்ட முருகன் ஆறு குழந்தைகளாகி ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.
இவ்வாறு அருந்தமிழ் மறைகள் போற்றும் ஆறுமுகப்பெருமான் குறிஞ்சி நிலத்துக்குரிய தலைவனாக குன்றுதோறும் ஆடும் குமரனாக "பேறை நகர்" என்று பாடல் பெற்ற "பெரும்பேர் கண்டிகை" என்னும் சக்தி வாய்ந்த திருத்தலத்தில் தனது தேவியருடன் சுப்ரமணிய சுவாமி யாக ஆறுமுகங்கள் மற்றும் பன்னிரண்டு கரங்களுடன் கண்டவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அற்புதப் பேரழகுடன் எழுந்தருளி தரிசனம் தந்தருள்கின்றார்.
தல வரலாறு
பொதிகை மலையிலிருந்து வட திசை நோக்கி திருத்தல யாத்திரை மேற்கொண்ட "அகத்திய மகரிஷி" பேறை நகர் என்று வழங்கப்பட்ட இப்பகுதிக்கு வந்ததும் பார்வதி பரமேஸ்வரனின் திருமணக் கோலத்தைக் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. உமா மகேஸ்வர தரிசனத்தைத் தான் காண அருள்புரிய வேண்டும் என்று ஆறுமுகப்பெருமானிடம் வேண்டினார் அகத்தியர்.
ஆறுமுகப் பெருமானின் அறிவுரைப்படி, அகத்திய முனிவர் இப்பகுதியில் தவம் இயற்ற அகத்தியரின் பக்திக்கு இரங்கிய பரமேஸ்வரன் சித்ரா பௌர்ணமி நன்னாளில் அம்பிகையோடு தனது திருமணக் கோலத்தைக் காட்டி அருளினார். அகத்தியருக்கு உமையொருபாகன் திருமணக் கோலத்தைக் காட்டிய இடம் சிறப்பு மிக்க 'தான்தோன்றீஸ்வரர்" திருக்கோயிலாகும். அப்போது அகத்திய மகரிஷியுடன் தன் தாய் தந்தையரை வழிபட்டு மகிழ்ந்த கந்தப் பெருமான் "பேறை நகர்" என்றும் "பெரும்பேர் கண்டிகை" என்றும் பூஜிக்கப்படும் இத்திருத்தலத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இரட்டை மலையில் தன் அடியவர்கள் பொருட்டு எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றார்.
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பின்னர் ஆறுமுகப்பெருமான் சஞ்சீவி மலை, மகாமேருமலை என்று அழைக்கப்படும் இந்த இரட்டை மலைகளின் மீது வந்து அமர்ந்ததாக திருக்கோயில் வரலாறு தெரிவிக்கின்றது. இயற்கை எழில் கொஞ்சம் இத்திருத்தலத்திற்கும் அதனைச் சார்ந்த மலைப்பிரதேசத்திற்கும் பேரெழில் தருவது மலை மீதுள்ள அழகிய ஆறுமுகப்பெருமானின் ஆலயமாகும்.
"முருகன்" என்றால் "அழகு" என்ற பொருளுக்கு ஏற்ப ஆறுமுகப்பெருமானின் அதி அற்புதமான அழகுத் திருமேனியும் அமைதியான மலையின் சுற்றுச்சூழலும் பெரும்பேர் கண்டிகை தலத்திற்கு மேலும் தெய்வீகச் சிறப்பை அளிக்கின்றன.
சித்தர்கள் போற்றும் செல்வன்
முருகப்பெருமான் திருக்கோயில் அமைந்துள்ள சஞ்சீவி மலை "சித்தர் மலை" என்றும் பக்தர்களால் வணங்கப்படுகின்றது. இன்றும் இம்மலையில் சித்தர்கள் பலர் நம் ஊனக் கண்களுக்குப் புலப்படாமல் நித்ய வாசம் செய்து சரவணப் பெருமானை நோக்கி தவம் மேற்கொண்டிருக்கின்றனர் என்று முருகனடியார்கள் கூறுகின்றனர். மலையின் அடிவாரத்தில் உள்ள தீர்த்தம் "சஞ்சீவி தீர்த்தம்" என வழங்கப்படுகின்றது. கொடிய நோய்களையும் நொடியில் தீர்த்து வைக்கும் சக்தி வாய்ந்த தீர்த்தமாகும் இந்த சஞ்சீவி தீர்த்தம்.
அருளாளர்கள் பாடிய திருத்தலம்
எம்பெருமான் முருகப் பெருமான் மீது கொண்ட பக்தியினால் திருப்புகழ் பாடும் திருவருளைப் பெற்ற அநுபூதிச் செல்வர் அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை "பேறை நகர் வாழ வந்த பெருமாளே" என்று பாடிப் பரவசப்பட்டுள்ளார். முருகப்பெருமானின் புகழ் பாடுவதையே தன் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்த 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இத்திருத்தல முருகனைப் போற்றி "பெரும்பேறு படை முருகப் பெருமான் பதிகம்" மற்றும் "பெரும்பேறு படைவீட்டுப் பதிகம்" பாடி வணங்கியுள்ளார். ஆறுபடை வீடாக வணங்கப்படும் முருகன் திருத்தலங்களை 36 படை வீடுகளாகப் பிரித்து அப்படை வீடுகளில் ஒன்றாக பெரும்பேறு முருகன் திருத்தலத்தையும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடியுள்ளதால் இத் திருக்கோயிலின் மேன்மையை நம்மால் அறிய முடிகின்றது.
அண்மைக்காலத்தில் வாழ்ந்த மகானும் பாம்பன் என்னும் பதியில் வாழ்ந்த பரம ஞானியுமான பாம்பன் சுவாமிகள் சிறப்பு வாய்ந்த முருகப் பெருமானின் 39 புண்ணிய திருத்தலங்களைத் தனது பதிகத்தில் குறிப்பிட்டு இத்தலங்களில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வணங்கினால் என்ன பேறு கிட்டுமோ அப்பேறினை பெரும்பேர் முருகப் பெருமானை தரிசித்து வணங்கினால் கிட்டும் என்று பரவசப்பட்டுள்ளார்.
திருவிழாக்கள்
இறைவனுடைய திருநாமங்களைப் பாடி பரவசப்படுவதால் மட்டுமே மனிதன் படிப்படியாக உயர்ந்து இறையருளைப் பெற முடியும் என்பதை உணர்த்துவதே திருப்படித் திருவிழா. பேறைநகர் குடியிருக்கும் குமரக் கடவுளுக்கு இத்திருக்கோயிலில் நடைபெறும் படிவிழா மிகவும் சிறப்பானதாகும். மாசி மாதக் கிருத்திகையின் போது நடைபெறும் பால்குட ஆபிஷேகமும், கார்த்திகை மாத மகா தீபத் திருவிழாவும் இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த விழாக்களாகும். வைகாசி விசாகத்தின் போது நடைபெறும் பிரம்மோற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானின் திருவருளைப் பெறுகின்றனர்.
"தேனினும் இனியர் பாலன நீற்றர்" என்று ஞானசம்பந்தர் அருளிச்செய்த அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாதம் பத்தாம் நாள் திருவிழா முடிந்து 11ஆம் நாள் ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மையுடன் மலைவலம் வருவார். அப்போது பெரும்பேர் முருகன் தன் தேவியருடன் மயில்வாகனத்தில் இரட்டைமலை இணைப்புக்கு நேரில் எழுந்தருளி தன் தாய் தந்தையரை வரவேற்று தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் அகத்தியர் மேடைக்கு அழைத்து வந்து அகத்தியருக்குத் திருமணக் கோலத்தை காட்டும் நிகழ்ச்சி தற்போதும் சித்ரா பௌர்ணமி நாளில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
சிறந்த பரிகாரத் தலம்
பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும். தன்னிரு பாத மலர்களைப் போற்றி வணங்கும் அடியார்களுக்குப் பன்னிரு கரங்களாலும் அள்ளி, அள்ளி வழங்கும் வள்ளல் முருகப்பெருமானே ஆவார். முருகப்பெருமான் இத்திருத்தலத்தில் தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பதால் ஆயுள் விருத்தி அளித்தும், எமபயம் நீக்கியும் அருள் புரிகின்றார். ஞானத்தின் வடிவான தட்சிணாமூர்த்தியின் வடிவமாக முருகன் இத்தலத்தில் அருள் புரிவதால் இங்கு வழிபடும் அடியவர்களுக்குக் கல்வி, கேள்வி ஞானங்களில் சிறந்து விளங்கக்கூடிய நன்மக்கள் பேறினை அளிப்பான் பெரும்பேர் முருகன். மாணவச் செல்வங்கள் இங்கு வழிபாடு செய்வதால் கல்வியில் ஈடுபாடு ஏற்பட்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
பேச்சுத்திறன் குறைபாடு உடைய குழந்தைகளை இத்திருக்கோயிலுக்கு அழைத்து வந்து ஆறு கிருத்திகை தினங்களில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் குறைபாடு நீங்கப் பெற்று பேசும் திறன் கிடைக்க பெறுவது அன்பர்களின் ஆனந்த அனுபவமாகும்.
மனிதப் பிறவி எடுத்த அனைவரும் பிறவிப் பயனை அடைய ஒரு முறையேனும் தங்களது வாழ்நாளில் சென்று தரிசிக்க வேண்டிய அற்புதமான சக்திவாய்ந்த திருத்தலம் பெரும்பேர் கண்டிகை திருத்தலம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் நூறாவது கிலோமீட்டர் தூரத்தில் நெடுஞ்சாலைக்கு மேற்கில் உள்ள மலையில் உள்ளது பெரும் பேர் கண்டிகை திருக்கோயில்.
மேலும் விபரங்களுக்குத் திருக்கோயில் அர்ச்சகர் திரு ரவி குருக்கள் அவர்களை 99529 65215 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.