அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், செய்யூர்.

kanthasamy-koil-cheyyur
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், செய்யூர்.

   இறைவன்: கந்தசுவாமி 
   இறைவி    : வள்ளி, தெய்வானை 
   விருட்சம்    : வன்னி, கருங்காலி 
   தீர்த்தம்       : செட்டி குளம்

முருகனை வணங்கினால் மூன்று தெய்வங்களையும் வணங்கிய பேறு கிட்டும். இதில் "மு" என்பது முகுந்தனைக் குறிக்கும். அதாவது பெருமாளைக் குறிக்கும். "ரு" - ருத்ரன் என்பது சிவன். "க" என்பது கஞ்ஜன். கமல மலரில்  வீற்றிருக்கும் பிரம்மாவைக் குறிக்கும். இதனால் தான் முத்து முத்தாகத் தமிழ் பாடும் பேறுபெற்ற அருணகிரிநாதப் பெருமான் முருகப்பெருமானைப் பற்றிப் பாடும் போது "முருக" எனும் நாமங்கள் என்று குறிப்பிடுகின்றார். 

 "முருக" என்பது ஒரு நாமம் அல்ல. அது கோடி நாமங்களுக்குச் சமமானது என்பதையே நமக்கு உணர்த்தி யிருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.  முருகன், சுப்ரமணியர், கந்தன் (கார்த்திகேயன்) ஆறுமுகன் (ஷண்முகன்) குமரன், குகன், சரவணன் மற்றும் வேலன் ஆகிய திருநாமங்கள் முருகப் பெருமானின் வெவ்வேறு குணங்களையும் வீரத்தையும் தெய்வீகத் தன்மையையும் பறைசாற்றுகின்றன. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கந்தன்" என்றும் "கந்தசுவாமி" என்றும் வணங்கப்படுகின்றார் முருகப்பெருமான்.

முருகப்பெருமான் கந்தசுவாமி எனும் திருநாமம் கொண்டு அருள் பாலிக்கும் சக்தி வாய்ந்த பல திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் எனும் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் கந்தசுவாமி திருக்கோயிலாகும். 

இத்திருக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னர் களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதப் பெருமானால் திருப்புகழ் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் செய்யூர் தலமும் ஒன்றாகும். 

தல வரலாறு 

சிங்காரவேலனாக நாம் வணங்கும் சிக்கல் முருகப்பெருமான் சிக்கல் தலத்திலே தன் அன்னை பார்வதி தேவியிடம் சக்திவேலைப் பெற்று "திருச்சீரலைவாய்" என்னும் "திருச்செந்தூரிலே" அசுரனை சூரசம்ஹாரம் செய்தார். அப்போது முருகப்பெருமானின் போர்ப்படையில் பூதகணங்களும் வேதாளங்களும் போரிட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் போரில் அசுரனை வதம் செய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இந்த தோஷம் நீங்க இத்தலத்திலே "சோமநாதர்" என்ற திருநாமத்துடன் ஒரு லிங்கத் திருமேனியை பிரதிஷ்டை செய்து முருகப்பெருமான் பூஜித்துள்ளார். சர்வேஸ்வரனை அவரது திருமகனார் முருகப்பெருமான் வழிபட்டதால் இந்த ஊருக்கு "சேயூர்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இத் திருநாமம் மருவி தற்போது "செய்யூர்" என்று அழைக்கப்படுகின்றது.

வேதாளங்கள் வழிபட்ட 
                   திருத்தலம்

அஸ்வினி முதலான ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களுக் கும் உரிய வேதாளங்கள் இத்தலத்தில் முருகப்பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளன. இந்த வேதாளங்களுக்கு ஆலயத்தின் வெளிப்பிராகாரத் தில் தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன. இத்திருக்கோயி லுக்கு வருகை தந்து கந்த சுவாமியை தரிசனம் செய்த பின்னர் நமது நட்சத்திரத்திற்குரிய வேதாளத்திடம் நாம் வைக்கும் பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறுவதாக இங்கு வழிபாடு செய்த அன்பர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் இத்திருக்கோயிலில் வேதாளங்களை வழிபடுவதால் திருமணத்தடை நீங்கும் என்றும் கடன் பிரச்சனைகள் தீரும் என்றும் மழலைப் பேறு வாய்க்கும் என்றும் அன்பர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த வேதாளங்கள் அனைத்தும் பைரவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை ஆகும். எனவே செய்யூர் தலத்தில் வேதாளங்கள் மட்டுமின்றி பைரவரும் அருள்பாளிக்கின்றார். தேய்பிறை அஷ்டமி நாட்களில் அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களை வழிபடும்போது, நம் கோரிக்கைகள் வேதாளங்கள் மற்றும் பைரவர் மூலமாக முருகனிடம் கூறப்பட்டு, அவை நிறைவேறுவதாக ஐதீகம்.

தேய்பிறை அஷ்டமி நாளில் மக்கள் பெருமளவில் இத்திருக்கோயிலுக்கு வருகை தருவது இந்த நாளில் வழிபட்டு பயனடைந்தோர் ஏராளம் என்பதற்கு உரிய சான்றாகும். 

தேய்பிறை அஷ்டமி அன்று மாலை "வேதாள பூஜை" விநாயகர் சங்கல்பத்துடன் தொடங்கி மாலை 5.00 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளிப் பூக்களால் பூஜையும் மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும் இரவு எட்டு மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது.
     கருவறையில் தன் தேவியர் வள்ளி தேவசேனா சமேதராக கந்தசுவாமி அருள்பாலிக்கின்றார். 

தேவகோட்டத்தில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்களாகவே திருக்காட்சி தருகின்றன. தேவகோட்டத்தில் விநாயகருக்குப் பதில் நிருத்த ஸ்கந்தரும் தட்சிணாமூர்த்திக்குப் பதிலாக பிரம்ம சாஸ்தாவும் விஷ்ணுவுக்குப் பதிலாக பால ஸ்கந்தரும் பிரம்மனின் இடத்தில் சிவகுருநாதனும் துர்க்கை இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவம் கொண்ட முருகன்) அருள் பாலிக்கின்றனர். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு "குக சூரியன்" என்று வணங்கப்படுகின்றார். 
               சேயூர் (செய்யூர்)
                 இலக்கியங்கள்

செய்யூர் கந்தசுவாமி பெருமானைப் போற்றி அந்தகக் கவி வீரராகவ முதலியார் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், சேறை கவிராஜப் பிள்ளையின் செய்யூர் முருகன் உரை, முருகதாஸ் சுவாமிகளின் சேயூர் முருகன் பதிகம், கோவை சிவப்பிரகாச சுவாமிகளின் நெஞ்சுவிடு தூது எனப்பல நூல்கள் உள்ளன.

அருணகிரிநாதர் பெருமானும் இத்தல முருகனைப் போற்றி கீழ்க்கண்ட திருப்புகழ் பாடியுள்ளார்.  இத்தலத்தில் அருணகிரிநாதப் பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அவர் இயற்றிய திருப்புகழும் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.

                 திருப்புகழ் 
"முகிலாமெனும் வார்குழ
                                            லார்சிலை
 புருவார்கயல் வேல்விழி யார்சசி
                         முகவார்தர ளாமென 
      வேநகை ...... புரிமாதர்
முலைமாலிணை கோபுர மாமென
     வடமாடிட வேகொடி நூலிடை
          முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை
                                    வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
          அழகார்கன நூபுர மாடிட ......
  நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
     விழியால்சுழ லாவிடு
                                          பாவையர்  அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ
ககனார்பதி யோர்முறை
                                         கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
          கடலேழ்கிரி நாகமு நூறிட ......
   விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
     தொழுமீசுர னாரிட மேவிய
          கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
     குடனாடநி லாமயில் கோகில
          மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
     வினைதூள்பட வேயயி லேவிய
          வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே."

திருப்புகழ் திருப்பதிகத்தில் செய்யூர் திருத்தலம் "வளவாபுரி" என்று குறிப்பிடப்படுகிறது. 

இத்திருக்கோயிலில் வைகாசி விசாகம், சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை கள் நடைபெறுகின்றன. பண்டிகைக் காலங்களில் இத்தலத்தில் சர்வ வாத்தியம் என்னும் இசைக்கருவி வாசிக்கப்படுவது சிறப்பாகும். இதற்காக "சர்வ வாத்திய மண்டபம்" என்ற இடமும் இத்திருக்கோயில் வளாகத்தில் உள்ளது. 
 
இத்திருக்கோவில் காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். 

சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்றால் 80 கிலோமீட்டர் தூரத்திலும் மதுராந்தகத்தி லிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் செய்யூர் கந்தசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.