மகத்தான வாழ்வருளம் மகாகாளி!

maha-kali-amman
மகத்தான வாழ்வருளம் மகாகாளி!

இவள் உலகில் ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பவள். நாம் செய்யும் செயல்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அச்செயல்கள் வெற்றி பெற இந்த காளி தேவி அருள்புரிகிறாள்.   

தன்னை சரணடைந்தவரைக் காப்பதற்கே அபய, வரதம் தரித்தவள். பிறப்பு, இறப்பு, சம்சார பயங்களை வேரோடு களைபவள். இத்தேவி க்ரீம் எனும் பீஜத்தை தன் பீஜமாகக் கொண்டருள்பவள். 

இத்தேவியின் மந்திரம் மந்திரங்களின் ராணி எனும் பொருள்படும் வித்யாராஜ்ஞீ என்று போற்றப்படுகிறது. அந்த மந்திரத்தின் வேர், உடல், உயிராய் உறைபவள் காளி. தேவியின் ‘க்ரீம் ஹூம் ஹ்ரீம்’ எனும் மந்திரம், த்ரிதாரி மந்திரம் என போற்றப்படுகிறது. அதை ஜபம் செய்தால் கிட்டாததே இந்த உலகில் இல்லை. 

சச்சிதானந்தத்தின் வடிவமாக விளங்கும் அமிர்தத்திற்கு நிகரான சஷகம் எனும் பானத்தை அருந்துவதில் பிரியமுள்ளவள். இத்தேவியைத் துதிக்கும் ஜகன்மங்கலம், சர்வமங்கலம் எனும் கவசங்கள் புகழ் பெற்றவை. 
திக்குகளையே ஆடைகளாகத் தரித்தவள். பக்தர்களின் தியானத்தில் பேரழகியாகவும் மங்கல வடிவினளாகவும் துலங்குபவள். தன் அங்கங்கள் முழுதும் நாகங்களை விளையாட விட்டு மகிழ்பவள். இந்த அன்னையின் பீடத்தில் ஜயா, விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்கலா போன்ற சக்திகள் ஆராதிக்கப்படுகின்றனர்.   

பக்தர்களின் உடலின் ஆறு ஆதாரங்களிலும் நிலையாய் அமர்ந்து அவர்களுக்கு செயல், சக்தி, மகிழ்ச்சி, அமைதி போன்றவற்றை வாரி வாரி வழங்கும் பரமமங்கல மூர்த்தினி, காளி. அவர்களைப் பாதிக்கும் காமக் குரோதாதிகளை அழித்து அருள்பவள். பக்தர்கள் வேண்டுவனவற்றை வேண்டியவாறே விரைவில் அருள்பவள். நம் உடலில் ஸஹஸ்ராரத்தில் உள்ள தாமரையை மலரச் செய்யும் பானுமதியும் இவளே. 

பரப்பிரம்ம வடிவினள். ஜகன்மாதா. அவள் அருளாலே பரம்பொருளுடன் ஒன்றிடும் குண்டலினி வித்யையை அடையும் சக்தியை மகான்களும் சித்தர்களும் அறிந்து பயன் அடைகின்றனர். இவள் தம் பக்தர்களுக்கு பூரண ஆயுள் தந்து அவன் புகழை நான்கு திசைகளிலும் பரப்பி அவன் என்றும் புகழுடம்புடன் இருக்கச் செய்ய அருள் புரிபவள்.சுறுசுறுப்பானவள் இவள். சிறிது கூட தாமதம் பிடிக்காத தேவி. 

தேஜோமயமானவள்! மகாகாலர், ப்ரம்மா, விஷ்ணு, யமன், வருணன், கணேசர், இந்திரன், சூரியன், சுக்கிரன், ப்ரகஸ்பதி போன்ற தேவர்களாலும், துர்வாசர், கச்யபர், சுகர், தத்தாத்ரேயர், ப்ருகு போன்ற ரிஷிகளாலும் அனுமன், பலி போன்ற சிரஞ்சீவிகளாலும் ராமன், பரதன், பரசுராமன் போன்ற அவதார மூர்த்தங்களாலும் ராவணன், கார்த்தவீர்யார்ஜுனன் போன்ற மாமன்னர்களாலும் ஆராதிக்கப்பட்டவள் இந்த தேவி. 
ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன் நேரில் பேசிய தேவி இவள். ஆட்டிடையனை உலகம் போற்றும் காளிதாசனாக மாற்றிய தேவி. 

மூச்சுக் காற்றையே காளி உபாசனையாக புரிந்தால் காளியின் திருவருள் சடுதியில் சித்திக்கும்.
தக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்டுவிடும். 

தட்சிணாமூர்த்தி வடிவினரான பைரவரால் ஆராதிக்கப்பட்டதால் தக்ஷிணா. தக்ஷிணா(வலது) புருஷனையும் வாமா(இடது) ஸ்திரீயையும் குறிப்பதால் தக்ஷிணசக்தி, சிவன்; வாமசக்தி காளி. சிவனையும் மிஞ்சி பக்தர்களைக் காத்து முக்தியளிப்பவளாக போற்றப்படுகிறாள் என்கிறது காமாக்யா தந்திரம் எனும் நூல். தக்ஷிணா எனும் பதம் தெற்கு திசையையும் குறிக்கும். தெற்கு யமனின் திசை. அவன் காளி எனும் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிச் சென்று விடுவானாம். தக்ஷிணா எனில் வல்லவள் என்றும் ஒரு பொருள் உண்டு.

பக்தர்களுக்கு வரமளிப்பதில் மற்ற தெய்வங்களை விட வல்லவள் இவள். மோட்சப் பிரதாயினி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணி, தேஜஸ்வினீ, பராசக்தி, திகம்பரீ, சித்விலாஸினி, சின்மயி, அறம், பொருள், விரும்பியதை நல்கும் தர்மம், மோட்சம் என்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் அருளும் பலஸித்திதாயினீ என அவள் பத மலர்களைப் பணிவோம். கலியில் காளிதேவி சட்டென்று அருள்பவள். இந்த தேவியை உபாசனை செய்தால் இன்பம், துன்பம், அழகு, கோரம், அன்பு, வெறுப்பு, அறம், அதர்மம் என யாவுமே ஒன்றாகவே தெரியும். 

எருக்கம்பூ, வாழைப்பூ, அரளி, செந்நிறமலர்கள் ஆகியவற்றால், அஷ்டமி, நவமி, அமாவாசை, சிவராத்திரி, பரணி நட்சத்திரம் ஆகிய தினங்களில் அர்ச்சித்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு பெருக, தேடி வந்து அருள்வாள் தேவி. இவள் பூஜையில் நறுமணம் மிக்க சாம்பிராணி, குங்குலியம் போன்ற தூபங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த காளியின் மந்திரத்தை நதிக்கரையோரம், கடற்கரையோரம், ஏரிக்கரை ஓரம், நல்லநீர் தளும்பும் குளத்தின் கரையோரம், மயானம் போன்ற இடங்களில் ஜபிக்க வேண்டும். இவளை துதிப்பதால் அளவற்ற தைரியம், வாக்குவன்மை, நிகரற்ற செல்வம், தீர்க்க தரிசனம், முக்தி போன்றவை கிட்டும். வாக்கு, மனங்களுக்கு எட்டாத சக்தி படைத்த பராசக்தியான காளியை, வணங்குவோர் வாழ்வில் வளம் பல தந்தருளும் தேவியை வழிபடுவோம். பலனடைவோம்.