அருள்மிகு வடாரண்யேசுவரர், திருக்கோயில், திருவாலங்காடு

vadaranyeswar-temple-thiruvalangadu
அருள்மிகு வடாரண்யேசுவரர், திருக்கோயில், திருவாலங்காடு

 இறைவன் : வடாரண்யேசுவரர்
                        (ஆலங்காட்டு அப்பர்)
 இறைவி     : பிரம்மராளகாம்பாள்
                        (வண்டார்குழலி)
 தீர்த்தம்       : சென்றாடு தீர்த்தம் 
                          முத்தி தீர்த்தம் 
 விருட்சம்    : பலா (ஆலமரம்         
                     என்றும் கூறுகின்றனர்)
 ஆகமம்      : சிவாகமம் 

திருக்கயிலாய மலையிலே தனது கால்கள் படக்கூடாது என்ற பக்தி மிகுதியால் தனது திருக்கரங்களால் நடந்து, தம்மைக் காண வந்தவரை கயிலைநாதன், "அம்மையே வருக!"  என்று அழைக்கும் பேறு பெற்றவர் காரைக்கால் அம்மையார். இசைத்தமிழால் ஈசனை முதலில் பாடிய பெருமைக்குரியவரும் தமிழுக்கு "அந்தாதி" என்ற இலக்கண முறையை அறிமுகம் செய்தவரும் இந்த அம்மையாரே ஆவார்.

அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை போன்ற நூல்களைப் படைத்து, சைவ சமயத்திற்கு அருந்தொண்டாற்றிய அம்மையார் இயற்றிய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இதனால்தான் திருவாலங்காட்டுப் பதிகம் "மூத்த திருப்பதிகம்" என்ற பேறினைப் பெற்றது.

கயிலாய மலையில் "அம்மையே வருக!" என்று ஈசனால் அழைக்கப் பட்டதோடு "வேண்டுவன கேள்!" என அம்மையாரைப் பார்த்துக் கேட்டார் பரமன்.

    "பிறவாமை வேண்டும் 
     மீண்டும் பிறப்புண்டேல்  
                                        - இறைவா
     உனையென்றும் மறவாமை
                                          வேண்டும்
     நான் மகிழ்ந்து பாடி- இறைவா
     நீ ஆடும் போது உன் அடியின்
     கீழ் இருக்க வேண்டும்"

- என்று உள்ளம் உருக வேண்டினார் காரைக்கால் அம்மையார்.

காரைக்கால் அம்மையாரின் வேண்டுதலை ஏற்ற ஈசன் "அவ்வாறே ஆகட்டும்!" என்று திருவாய் மலர்ந்ததோடு, தன் திருத்தாண்டவத்தைக் காண திருவாலங்காட்டிற்கு வர ஆணையிட்டு, அங்குத் தனது திருவடிகளின் கீழ் என்றும் இருக்க அருளிச் செய்தார் ஈசன்.

வடாரண்யேசுவரர் 

சுயம்புத் திருமேனியான இத்தலத்தின் ஈசன் வடாரண்யேசுவரர், தேவர் சிங்கப்பெருமாள், ஆலங்காட்டு அப்பர், அமிர்த தாண்டேசுவரர், முஞ்சிகேசுவரர் என்ற திருநாமங்களுடன் வணங்கப்படுகின்றார். ஈசனது ஐந்து சபைகளில் "ரத்தின சபையாக" இத்தலம் போற்றி வணங்கப்படுகின்றது. இச்சபைக்கு "மணிமன்று" என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது. நடராஜப்பெருமான் இத்தலத்தில் ஊர்த்துவ தாண்டவ நடனத்தை நிகழ்த்தியுள்ளார்.

கார்க்கோடகன், சுநந்த முனிவர், சம்பந்தர்,அப்பர்,சுந்தரர், காரைக்கால் அம்மையார் பரண தேவ நாயனார், பட்டினத்தடிகள் மற்றும் சேக்கிழார் பெருமான் ஆகியோர் இப் பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

ஈசனின் கருவறை நல்ல கட்டமைப்புடன் அமைக்கப் பட்டுள்ளது. தேவகோட்ட மூர்த்தமாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்கு அருகில் துர்க்கா பரமேஸ்வரர் திருவுருவம் கோட்ட மூர்த்தமாக உள்ளது. சண்டேஸ்வரர் மற்றும் பஞ்சபூதத் தலங்களில் அருளும் ஈசனுடைய திருநாமம் கொண்ட பஞ்சலிங்கங்கள் இங்கு உள்ளன. சகஸ்ரலிங்கம் இத்தலத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமா னத் திருமேனியாகும். 

மூலவரது திருமேனிக்கு மேல் "உருத்திராக்க விதானம்" திருப்பனந்தாள் காசி மடத்து திருப்பணியாக அமைக்கப்பட்டுள் ளது. மூலவரின் அருகில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனி யின் மீது கோடுகள் அமைந்துள்ளன.

திருவாலங்காட்டுக் காளி 

காளி அன்னை உக்ரமாக இருந்தபோது முஞ்சிகேசர், கார்க்கோடக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், காளியுடன் ஊர்த்துவ தாண்டவமாடி அன்னையின் கோபத்தைத் தணித்தார். காளியோடு தாண்டவம் புரிந்த சிவபெருமான் அவள் தமக்கு ஈடாக ஆடுவதைக் கண்டு, அன்னையைத் தோற்கடிப்பதற்காக,  தமது இடது காலைத் தலை அளவு உயர்த்தி ஊர்த்துவ தாண்டம் புரிந்த திருத்தலம் இத்தலம். வடாரண்யேசுவரர் கோயிலுக்கு அருகிலேயே காளிக்குத் தனிக் கோயில் உள்ளது.

மூன்று நிலைகளை உடைய உள் கோபுரத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்கார மூர்த்தி ஆகிய சிற்பங்கள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டு மிக அழகாகக் காட்சி தருகின்றன.

ரத்தின சபை
     
ரத்தின சபையில் உள்ள நடராஜப் பெருமான், "அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான்" என்றும் "ரத்தின சபாபதி" என்றும் அழைக்கப்படுகின்றார். அழகு வாய்ந்த எட்டு திருக்கரங்களுடன் காணப்படும் நடராஜ பெருமானின் ஊர்த்துவ தாண்டவத் திருமேனியை தரிசிப்பது நமது பிறவியின் புண்ணியமாகும். இந்த நடராஜர் சபையில் ஒரு பெரிய ஸ்படிக லிங்கமும் சிறிய மரகத லிங்கமும் திருமுறைப் பேழையும் உள்ளன. சிவகாமி அம்மையும் காரைக்கால் அம்மையாரும் இச்சபையில் திருமேனிகளாக உள்ளனர். இத்தலத்துக் கல்வெட்டில் நடராஜப் பெருமானின் திருநாமம் "அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தம்பிரான் தோழரான சுந்தரர் அருளிச் செய்த தேவாரப் பாடல்கள் நடராஜர் சபையை வலம் வரும் போது கல்வெட்டில் அருள்மிகு காசி மடத்துத் திருப்பணியாகப்  பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கயிலாயத்தில் ஈசன் திருவாய் மலர்ந்தருளியவாறு, இத்தலத்தில் தன் பாதங்கள் படக்கூடாது எனத்  தம் கரங்களை ஊன்றி தலையால் நடந்து, இத்தலம் வந்து ஈசனை தரிசித்து நடராஜப் பெருமானின் திருவடிக்குக் கீழே சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் காரைக்கால் அம்மையார்.

ரத்தின சபையின் விமானம் செப்புத்தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் திருக்காட்சி தருகின்றது. நடராஜருக்கு அருகில் உள்ள ஒரு மூலையில் சுரங்கப்பாதை உள்ளது.

வல்லப கணபதி 

திருக்கோயிலின் கோபுரவாயிலில் வல்லப கணபதி துதிக்கை உள்ளிட்ட 11 திருக்கரங்களுடன் அருட்காட்சி தருகின்றார். மறுபுறம் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. வெளிப் பிராகாரத்தில் சன்னிதி ஏதும் இல்லாமல் சந்தன மரங்கள் உள்ளன. கோபுர வாயிலில் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. வலது புறம் கொடியேற்ற மண்டபம், இடதுபுறம் சுக்கிரவார மண்டபம் ஆகியவை உள்ளன.

 வண்டார் குழலி 

திருவாலங்காடு திருத்தலத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் அம்பிகை வண்டார் குழலி என்னும் பிரம்மராளகாம்பாள் திருக்காட்சி தருகின்றார். இக்கருவறையை சுற்றி தேவகோட்டத்தில் மூர்த்தங்கள் ஏதும் இல்லை. அம்பிகையின் சன்னதியில் சிற்பக்கலை நணுக்கத்தோடு அழகு வாய்ந்த கல் தூண்கள் நம் கண்களுக்கு சிறந்த விருந்தாகும்.

பழையனூர் நீலி

பழையனூர் நீலி கதை மற்றும் இத்தலத்திற்கு தொடர்புடைய பழையனூர் கிராமம் திருவாலங்காட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குள்ள இறைவன் "அம்மையப்பர்" என்றும் இறைவி "ஆனந்தவல்லி" என்றும் வணங்கப்படுகின்றனர்.

ஆலங்காட்டு நீலி வஞ்சனையால் உயிர் நீத்த வணிகனுக்கு உறுதியளித்த 70 வேளாளர்கள் தீப்பாய்ந்து உயிர் துறந்துள்ளனர். பழையனூருக்குச் செல்லும் வழியில் திருவாலங்காட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பழையனூர் வேளாளர்கள் 70 பேர் தீப்பாய்ந்து, செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த "தீப்பாய்ந்த மண்டபம்" உள்ளது. திருவாலங்காடு பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே இந்த மண்டபம் தெரிகின்றது. அங்குள்ள தொட்டியின் உள்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட் டுள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போன்ற ஒரு சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சன்னதியாக "சாட்சி பூதேசுவரர்" திருக்காட்சி அளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.

தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் வந்த பழையனூரில் தற்போது உள்ளவர்கள் அனுதினமும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்கால மாகக் கடைப்பிடித்து வருகின்றனர். சதா சர்வ காலமும் ஈசனின் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள் இம்மரபை பிற்காலத்தவர்களும் கடைப்பிடிக்கும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதா சேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை கோயிலின்  முன் வாயிலில் உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதல் படியாக  வைத்துள்ளனர்.

இந்த வேளாளர் மரபினரின் கோத்திரமே "கூழாண்டார் கோத்திரம்"ஆகும். அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்குச் சமர்பித்தவர்கள் என்பது பொருளாகும். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி இன்றும் நமது நெஞ்சை நெகிழ வைக்கின்றது.

பழையனூர் நீலி கதை பெரிய புராணம் அருளிச்செய்த சேக்கிழார் பெருமானாலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிவார தெய்வங்கள் 

உள் பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக சூரியன், அதிகார நந்தி, தேவியருடன் விஜயராகவப் பெருமாள், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்மையார்,  கார்க்கோடகன், முஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அனுக்கிரக மூர்த்தி, எண்வகை விநாயகர் ஆகிய சன்னதிகள் உள்ளன.

 தேவார மூவர்கள் பாடிய தலம்

காரைக்கால் அம்மையார் தனது கால்கள் தரையில் படாமல், தலையால் கைகளை ஊன்றி நடந்து வந்த இந்த தலத்தை தம் காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர், ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு துயிலும்போது அவர் கனவில் வந்த ஆலங்காட்டு ஈசன், "நம்மை மறந்தனையோ பாடுதற்கு?" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று இறைவனை தரிசித்து பதிகம் பாடி வணங்கினார். அப் பதிகம் பின்வருமாறு:-

"துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப் போய் நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகை கேட்(டு) அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே"
 -ஞானசம்பந்தர், முதல் 
 திருமுறை.

  "வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் உள்ளுளே உருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும் கள்ளமே வினைக ளெல்லாம் கரிசறுத் திடுவர் போலும் அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிகளாரே"

-என்று நான்காம் திருமுறையில் ஆலங்காட்டு ஈசனைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றார் திருநாவுக்கரசர். 

   "முத்தா முத்தி தரவல்ல 
                                   முகிழ்மென்
    முலையாள் உமைபங்கா 
    சித்தா சித்தித் திறங்காட்டும்
                                            சிவனே
     தேவர் சிங்கமே 
     பத்தா பத்தர் பலர் போற்றும்
                                             பரமா
     பழையனூர் மேய
     அத்தா ஆலங்காடா உன்
     அடியார்க் கடியன் ஆவேனே"
   -என்று ஈசனைத் தொழுத தம்பிரான் தோழர் உள்ளம் உருகப் பாடி மகிழ்ந்துள்ளார்.
 கல்வெட்டு மற்றும் செப்பேடுகள் 

இத்தலத்தில் 52 கல்வெட்டுகள் உள்ளன. இத்தலம் "வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங் காடு" என்றும், "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மலையான பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு" என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. கல்வெட்டில் நடராஜப் பெருமானின் பெயர் "அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பேடுகளில் "கங்கைகொண்ட சோழன்" என்ற முதல் ராஜேந்திரன் பழையனூர் கிராமத்தை திரு ஆலங்காடுடைய மகா தேவருக்கு தானமாகக் கொடுத்த செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. தானம் அளித்த  செய்தியை ஊரார் அறியும் வண்ணம் "பிடி சூழ்ந்து படாகி நடப்பித்துப் பிரசுரம் செய்யப்பட்டது." அதாவது பெண் யானையை கிராம எல்லை முழுமையையும் சுற்றிவரச் செய்து ஆங்காங்கே கள்ளியும் சூலக்கல்லும் நடப்பட்டுள்ளது. இவ்வூரில் "தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாததாகவும்" என்ற ஆவணக் குறிப்பினால் அக்காலத்தில் கோயில் மரங்களில் இருந்து "கள்" இறக்குதல் இல்லை  என்பது புலனாகிறது. 

    இத்தலத்தில் உள்ள ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டியுள்ளான். (ARE 468 of 1905). நடராஜப்பெருமானின் திருவரங்கில் அண்டமுற நிமிர்ந்த ருளிய நாயனாருக்கு இலத்தூர் நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்சராசன் என்பவன் தீபம் ஏற்ற நிலம் தானமாக அளித்துள்ளான். (ARE 482 of 1905)

இத்தலத்து அம்பிகை "வண்டார் குழலி நாச்சியார்" என்றும் "பிரம்மராளகாம்பாள்" என்றும் வழங்கப்பட்டதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. (ARE 495 of 1905)

இதர கல்வெட்டுகள் அனைத்தும் நில தானங்கள் மற்றும் நிலம் விற்றது குறித்து, தண்ட நாயகருக்கு ஆணையிட்ட கல்வெட்டுகள் ஆகும். முதலாம் பராந்தக சோழன் முதல் விஜயநகர மன்னர்கள் காலம் வரை உள்ள கல்வெட்டுகள் இத்தலத்தில் காணப்படுகின்றன.

திருவாலங்காடு தலம், சென்னை அரக்கோணம் இரயில் பாதையில் அரக்கோணத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. அரக்கோணத்திலிருந்தும் திருவள்ளுரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை திருத்தணி நெடுஞ்சாலையில், திருவள்ளூரைத் தாண்டியவுடன் இடது பக்கத்தில் பிரியும் சாலை ஒன்றில் சென்றால் இந்தத் தலத்தை அடையலாம்.

 மேலும் விவரங்களுக்கு 044-27872074 என்ற தொலைபேசி எண்ணில் திருக்கோயிலைத் தொடர்பு கொள்ளலாம்.