கொரட்டூர் சிவன்கோயில், தஞ்சாவூர்
பேராவூரணிக்கு அருகிலுள்ள ரெட்டவயல் செல்லும் சாலையில் 7 கிமி தூரத்தில் உள்ளது இந்த கொரட்டூர் அக்காலத்தில் குரத்தூர் என அழைக்கப்பட்டு தற்போது கொரத்தூர் / கொரட்டூர் என அழைக்கப்படுகிறது. குரத்து என்றால் உயர்ந்த என பொருள்; எல்லாவற்றிலும் உயர்ந்த இறைவன் குடிகொண்ட இடம் எனும் பொருளில் இப்பெயர் வந்துள்ளது.
கொரட்டூர் பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது. சிவாலயம் மட்டும் தனித்து பிரதான சாலையில் உள்ளது. ஒரு புறம் பெரிய ஏரியும், மறுபுறம் பெரிய தாமரைக் குளமும் உள்ளது, இரண்டுக்கும் இடைப்பட்ட திட்டு பகுதியில் தான் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி சோழகனார் வயல் எனவும் அழைக்கப்படுகிறது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில் இறைவன்-அகத்தீஸ்வரர் இறைவி - அகிலாண்டேஸ்வரி
அகத்திய முனிவரால் வழிபடப்பட்டதால் இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர் என கூறப்படுகிறது.
சிவன் பார்வதி திருமணத்தின் போது வடதிசை பாரம் தாங்காமல் தாழ்ந்திட தென் திசை நோக்கி இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் இந்த அகத்தியர் . இவ்வாறு அகத்தியர் பல நாட்கள் கயிலையில் இருந்து தென் திசை நோக்கி பயணப்படும் போது பல தலங்களில் லிங்கபிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தார். அப்படி அவர் இந்த பகுதிக்கு வரும்போது கொரட்டூர் ஏரிக்கரையில் அமைத்த லிங்க மூர்த்தி தான் இந்த கொரட்டூர் லிங்க மூர்த்தி.
அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த லிங்க மூர்த்திக்கு ஆலயமும் அக்காலத்தில் எழுப்பப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அந்த சிவாலயம் பழுதடைந்து விட சரபோஜி மன்னர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டன. அந்த சமயத்தில் வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பக்தர் இத்தலத்தில் தங்கி இருந்து வழிபட்டு வந்ததாகவும் அவரின் வெண்குஷ்டம் இறைவன் அருளால் நாளடைவில் மறைந்து போனதாம்.
அதனால் வெண்புள்ளி குறைபாடு உள்ளவர்கள் இத்தல இறைவனை வேண்டி செல்லலாம்.
தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இறைவன் கருவறை செங்கல்லால் ஆனது என்றாலும் பார்க்க அழகான அதிட்டான அம்சங்களுடன் உள்ளது. பிரகார சிற்றாலயங்கள் விநாயகர் முருகனுக்கு கட்டப்பட்டுள்ளது. சண்டேசர் சன்னதி உள்ளது.
திருப்பணிகள் காரணமாக மூர்த்திகள் அனைத்தும் ஒரு தகர கொட்டகையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
அதில் இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார், எதிரில் நந்தி உள்ளார். பாலதண்டாயுதபாணி அம்பிகை தென்முகன் சண்டேசர் உள்ளனர்.
பல மூர்த்திகள் செய்து திருப்பணிகள் செய்யவேண்டும். பணிகள் ஏனோ நின்று போய் உள்ளது??
நல்ல முறையில் பூஜிக்கப்படும் சிவாலயம் இருக்கும் ஊரில் சுபிக்ஷத்துக்கு குறைவிருக்காது. இதனை ஊரார் புரிந்து கொண்டு எளிமையாக ஒரு கோயில் எடுப்பித்தாலே போதுமானது.