அருள்மிகு விஜயராகவ வைகுண்டப் பெருமாள் கோயில், வெள்ளக்குளம், பொன்னேரி.

vijaya-ragava-vaikunda-perumal-temple-vellakulam-ponneri
அருள்மிகு விஜயராகவ வைகுண்டப் பெருமாள் கோயில், வெள்ளக்குளம், பொன்னேரி.

இறைவன்: விஜயராகவ 
                      வைகுண்டப் பெருமாள் 
  இறைவி    : மரகதவல்லி 
  விருட்சம்    : எலுமிச்சை 
  ஆகமம்       : பாஞ்சராத்ரம்

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு விஜயராகவ வைகுண்டப் பெருமாள் கோயில் பொன்னேரி மற்றும் மீஞ்சூருக்கு அருகில் வெள்ளக்குளம் என்ற ஊரில் உள்ளது. இக்கோயில் அமைக்கப்பட்ட இடம் "பொழுது விடிந்தான் மேடு" என்று வழங்கப்படுகிறது. இத்தலத்திற்கு பொன்னேரி மற்றும் மீஞ்சூரில் இருந்து செல்லலாம்.

பக்தர்கள் இத்திருக்கோயிலின் பிரதான மூர்த்தியை விஜயராகவப் பெருமாள் என்றும் வைகுண்டப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். திருப்புட்குழி என்னும் திவ்ய தேசத்தில் அருள்பாலிக்கும் எம்பெருமானின் திருநாமம் விஜயராகவப் பெருமாள் ஆகும். இத்தலத்தில் தாயாரின் திருநாமம் மரகதவல்லி என்பதாகும். இதைப் போன்று வெள்ளக்கோயில் திருத்தலத்திலும் தாயாரின் திருநாமம் "மரகதவல்லி" ஆகும். 

"ஜயம்" என்றால் "வெற்றி" என்பது பொருளாகும். விஜயம் என்பது இதற்கு மேல் எவரும் பெற முடியாத வெற்றி என்பது பொருளாகும். அதாவது இத்தலத்தில் அருள்பாலிக்கும் விஜயராகவப் பெருமானை வழிபட நம் வாழ்க்கையில் எவரும் எளிதில் அடைய முடியாத பெரும் வெற்றிகளை அடையலாம் என்பது இத்தல வரலாறு கூறும் செய்தியாகும். 

இத்திருக்கோயில் சாளுக்கிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருக் கோயிலாகும். இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை என்றாலும் அழகான கொடிமரம் மற்றும் பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவு வாயிலின் இரு மருங்கிலும் கருடாழ்வார் சுதைச் சிற்பம் அமைக்கப் பட்டுள்ளது. பெருமானுக்கு எதிரிலும் மூலவரை வணங்கியவாறு கருடாழ்வார் கருங்கல் திருமேனியாக திருக்காட்சி தருகின்றார்.

விஜயராகவப் பெருமாள் 

விஜயராகவப் பெருமாள், வைகுண்ட பெருமாள் என்று வணங்கப்படும் இத்தலத்தின் மூலவர் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அழகிய திருமேனியாகக் காட்சி தருகின்றார். இப்பெருமானின் விக்கிரகம் முழுவதும் சாளக்கிராமத் திருமேனியால் அமைக்கப்பட்டது ஆகும். பெருமானுக்கு அருகில் தேவியர் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியும் அமர்ந்த திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றனர். 

பெருமாள் மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும் கீழ் வலது திருக்கரம் அபயமுத்திரை காட்டியும் கீழ் இடது திருக்கரம் தனது தொடை மீது வைத்த நிலையிலும் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவியும் பூமி தேவியும் தங்களது சிரசினை சற்றே சாய்ந்தவாறு பக்தர்களின் வேண்டுதலுக்கு செவிமடுக்கும் திருக்கோலத்தில் காணப்படுவது அதிசய திருக்கோலமாகும்.

வழக்குகளில் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி விஜயராகவப் பெருமாளை வழிபட வெற்றி கிடைப்பது நிச்சயம் என்று அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

தன் பக்தர்களுக்காகப் பெருமாளிடம் கருணையோடு பரிந்துரை செய்வதே தாயாரின் வழக்கம் என்ற வைணவ தத்துவத்தின்படி இந்த இரு தேவியர்களும் தங்களது பக்தர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து, அதனைத் தன் பதியான பெருமானிடம் சொல்லி அடியவர்களின் குறை தீர்க்கும் அம்சத்துடன் அருள்பாலிப்பது அரிய திருக்கோலமாகும். இதனால் வைணவ திருத்தலங்களில் அருள் பாலிக்கும் தாயாரின் திருப்பாதங்களை நாம் சிக்கெனப் பற்றிக் கொண்டால் நாம் வேண்டுவதை உடனே பெருமானிடம் பரிந்துரை செய்து எடுத்துச் சொல்லி நம் குறைகளை ப்போக்க அருள்பாலிப்பார் தாயார்.

கருவறையில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் தாயார் ஆண்டாள் ஆகிய உற்சவத் திருமேனிகளும் உள்ளன. 
   இத்தலத்தின் தாயாரான அருள்மிகு மரகதவல்லி தனிச் சந்நிதியில் அருள்பாலிக் கின்றார். வெள்ளிக்கிழமை களிலும் உத்திர நன்னாளிலும் இந்தத் தாயாரை மனம் உருகி வணங்கிட மனம் ஆகாத மங்கையர்களுக்கு உடனே மனம் போல திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தன் திருவடிகளைச் சரணடைந்தவர்களின் வேண்டுதல்களை பகவானிடம் எடுத்துக் கூறி நம் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்று கின்றார் மரகதவல்லித் தாயார்.

ராமானுஜர், மணவாள மாமுனிகள், நம்மாழ்வார், திருமங்கைஆழ்வார் ஆகிய திருமூர்த்தங்களும் இத்தலத்தில் உள்ளன. சக்கரத்தாழ்வார் ஆண்டாள் சந்நிதிகளும் இத்தலத்தில் உள்ளன.
    மேற்கு நோக்கிய சந்நிதியில் பக்த ஆஞ்சநேய சுவாமி அருள்பாலிக்கின்றார். இவரை மூல நட்சத்திர நாளில் நெய் தீபம் ஏற்று வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும்.

இத்திருக் கோயிலுக்கு வாகன மண்டபமும்  கோசாலையும் அமைந்துள்ளது. 
    வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத உற்சவம் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. 

இத்திருக்கோயில் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். 

பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்தும்  மீஞ்சூரில் இருந்தும் இத்திருக்கோயிலுக்குச் செல்லலாம். சென்னையில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இத்தலம். தேவதானம் திருக்கோயிலில் ரங்கநாதரை வணங்கச் செல்லும் அன்பர்கள் வெள்ளக்குளம் தலத்தில் அருளும் விஜயராகவப் பெருமாளையும் சேவித்து வரலாம்.

இத்தலத்தைப் பற்றி மேலும் விபரங்கள் அறிய திருக்கோயிலின் அறங்காவலர் திரு வெங்கடேச ராமானுஜ தாசன் அவர்களை 95666 71961 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.