அருள்மிகு நூற்றெட்டீசுவரர் திருக்கோயில், சின்னக்காவனம்
இறைவன்: நூற்றெட்டீசுவரர்
இறைவி : நூற்றெட்டுவல்லி
விருட்சம் : ஏர் அழிஞ்சில்
தீர்த்தம் : தாமரைக் குளம்
ஆகமம் : காரணாகமம்
சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 33 கிலோமீட்டர் தூரத்தில் தச்சூர் கூட்டுச்சாலை உள்ளது. தச்சூர் கூட்டுச்சாலையின் வலது புறம் பொன்னேரி செல்லும் சாலையில் 11 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் "சின்னக்காவனம்" என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ளது மிகவும் புராதனமான நூற்றெட்டீசுவரர் திருக்கோயில்.
குறு முனியாம் அகத்திய முனி, காசி விசுவநாதரை வணங்கச் சென்றபோது, "ஆரண்ய நதி" என்று போற்றப்படும் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள "சின்னக்காவனம்" என்ற ஊரில் சில காலம் தங்கி சிவபூஜை செய்ய விரும்பினார். அப்போது அகத்திய முனிவருக்குத் திருக்காட்சி தந்த ஈசன், இத்தலத்தில் உள்ள சதுர்வேத புரீசுவரர் திருக்கோயிலில் சிவலிங்கம் அமைத்துத் தம்மை வணங்கி வர காசியில் தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறினார்.
மகிழ்ந்த அகத்திய முனிவர் 108 சிவலிங்கங்களை அமைக்க நினைத்து ஆரணி ஆற்றின் மணலை எடுத்து தினம் ஒரு சிவலிங்கமாக அமைத்து பூஜை செய்து வந்தார்.
லிங்கத் திருமேனிகளை அமைப்பதற்கு முன்பாக தடைகளைத் தகர்த்தெறியும் நாயகனான விநாயகருக்குப் பூஜை செய்ய மறந்தார் அகத்தியர். இதனால் 108 வது லிங்கத்தை அமைத்த போது இந்த 108 லிங்கத் திருமேனிகளும் ஒன்று சேர்ந்து கணங்களின் தலைவனான "கணபதியாக" அகத்தியர் காட்சி கண்டார்.
தம் தவறை உணர்ந்து, கண நாதனைத் தொழுத அகத்தியர் மீண்டும் இத்தலத்தில் ஈசனது திருமேனியை அமைத்து வணங்கினார்.
108 சிவலிங்கங்களும் ஒன்று சேர்ந்து அகத்தியருக்குக் காட்சி தந்த விநாயகர் "அங்கோல கணபதி" என்று வணங்கப்படு கின்றார். இந்த விநாயகர் இத்தலத்தின் விருட்சமான பழைமையான ஏர் அழிஞ்சில் மரத்தின் கீழ் அருள்பாலிக் கின்றார். திருமணத் தடைகள் நீங்க இந்த விநாயகப் பெருமானுக்கு வடை மாலை சாற்றி வழிபடும் வழக்கம் உள்ளது வேறு எந்த தலத்திலும் எளிதில் காண முடியாத பரிகாரமாகும்.
இரண்டு லிங்கங்கள்
அகத்திய முனிவர் இத்தலத்திற்கு வருவதற்கு முன்னரே இத்தலத்தில் சிவகாமி உடனுறை சதுர்வேதபுரீசுவரர் என்ற திருநாமத்துடன் ஈசன் அருள்பாலித்துள்ளார். அகத்திய முனிவரால் அமைக்கப்பட்ட லிங்கத் திருமேனி நூற்றெட்டீ சுவரர் என்ற திருநாமத்துடன் வணங்கப்படுகின்றார்.
சதுர்வேதபுரீசுவரர் வட்ட வடிவிலான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கின்றார். நூற்றெட்டீசுவரர் சதுர வடிவமான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனியாக எழுந்தருளி யுள்ளார். நூற்றெட்டீசுவரப் பெருமானின் தேவி "நூற்றெட்டுவல்லி" என்ற திருநாமத்துடன் வணங்கப்படு கின்றார். திருமணத் தடை உள்ள அன்பர்கள் தொடர்ந்து மூன்று நிறைநிலா நாட்களில் ரோஜா மலர் மாலை சாற்றி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட அவர்களுக்குத் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் இந்த தலத்திற்கு மிகப்பெரிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட் டுள்ளது. மூன்றாம் நந்திவர்மனின் 18 -ஆம் ஆட்சியாண்டு (கி.பி.857) சாசனம், கிரந்தம் மற்றும் தமிழ் கலந்த நடையில் எழுதப்பட்டுள்ளது. "சத்திய சாளுக்கி" என்ற பெயரில் வாணிய செட்டியார் இத்தலத்திற்கு ஒரு மண்டபம் நிர்மாணித்துள்ளனர். தயா செட்டி என்பவர் ஆணத்தியாகப் (அரசனின் ஆணையை நிறைவேற்றுபவர்) பணியாற்றி வந்ததையும் ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.
ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த
திருத்தலம்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமான்" அவர்களின் அன்னையார் அவதரித்த திருத்தலம் சின்னக்காவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வள்ளல் பெருமான் சின்னக்காவனம் திருத்தலத்தில் 1824 முதல் 1826 வரை வாழ்ந்தார் என்பதும் இவர் வணங்கி மகிழ்ந்த பெருமானே நூற்றெட்டீசுவரர் என்பதும் சிறப்பான தகவலாகும்.
"சமரச சுத்த சன்மார்க்க நெறியைப்" பரப்பும் சின்னக் காவனத்தைச் சார்ந்த அன்பர்கள் வள்ளலார் வாழ்ந்த வீட்டைப் பராமரித்துப் பாதுகாத்து வருகின்றனர். ஸ்பிக் (SPIC) நிறுவனத்தாலும் இந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவமும் மாசி மாதத்தில் மகாசிவராத்திரியும் மார்கழியில் ஆருத்ரா தரிசனமும் இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. பிரதோஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு திருக்கோயில் அர்ச்சகர்கள் திரு கீர்த்திவாசன் குருக்கள் அவர்களை 88257 44437 என்ற எண்ணிலும் திரு கணேஷ் குருக்கள் அவர்களை 98437 08593 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சின்னக்காவனம் திருத்தலம்.